நல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்! - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வாத நோய்க்கு வாதநாராயணன்... மூட்டு வலிக்கு முடக்கற்றான்! மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்

வாத நாராயணன் - DELONIX ELATA
தழுதாழை - CLERODENDRON PHLOMIDES
முடக்கற்றான் -
CARDIOSPERMUM HELICACAVUM

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன தாவரம் இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள விஷயங்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் வாதநாராயணன், குத்துவாதமடக்கி ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம். 

  ‘வாதநாராயணன்’ என்பது இலக்கியப் பெயராக இருந்தாலும், வட்டார வழக்கில் இது, ‘வாசமடக்கி’, ‘வாதமடக்கி’, ‘வாவரக் காய்ச்சி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வேலிப்பயிர் மற்றும் தீவனப்பயிராகவும் பயன்படுகிறது. இது, கிளை பரப்பி உயரமாக வளரக்கூடிய மரம். ஆனால், வலுவிருக்காது. வேலிப்பயிராகவும், தீவனப்பயிராகவும் வளர்க்கும்போது குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வளரவிடாமல் கவாத்துச் செய்து வந்தால், இலை பறிக்க ஏதுவாக இருக்கும். இதன் இலைகள் மண்ணை வளப்படுத்தக்கூடியவை. புளியமரத்தின் இலையை ஒத்த இலைகளைக் கொண்ட மரம் இது. மரத்தின் உச்சியில், வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். தட்டையான காய்களைக் கொண்டிருக்கும். இது வாதநோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

முழங்கால் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், வாரம் இருமுறை இதன் இலைகளைக் கீரை சமைப்பதுபோலச் சமைத்து உண்டு வந்தால், இரண்டொரு முறை மலம் கழிந்து வாத நீர் வெளியேறி மேற்கண்ட நோய்கள் குணமாகும். ‘சரவாங்கி வாதம்’ என அழைக்கப்படும் ‘ரொமாட்டாய்டு’ வாத நோயாளிகளுக்கு மேற்குறிப்பிட்ட மருந்துணவு மிகவும் நல்லது. இதைச் சாப்பிட்டு வந்தால், வீரியமான வலிநிவாரண மருந்துகளைத் தவிர்க்க முடியும். பக்கவாதம் முதலான வாத நோயாளர்கள் இந்த இலையைத் தண்ணீரில் ஒரு பிடி  போட்டுக் காய்ச்சிக் குளித்து வந்தால், துவண்டுபோன கை கால்கள் விரைவில் நல்ல நிலைக்குத் திரும்பும். இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, ஒரு துணியில் பந்துபோல முடிந்துகொள்ள வேண்டும். மூட்டு வீக்கம் முதலான வாத வீக்கங்கள் உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்து வந்தால் விரைவில் குணமாகும்.

வாதநாராயண இலைகளை நிழலில் காய வைத்துப் பொடித்து, ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து விதமான வாத நோயாளிகளும் இரவு படுக்கப் போகும் முன்பு, இந்தப் பொடியை அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து உண்டு வந்தால், நன்மை கிட்டும்.

ஒரு லிட்டர் வாதநாராயணன் இலைச்சாற்றுடன் 1 கிலோ பனைவெல்லம் சேர்த்துக் கரைத்து வடிகட்டி, அடுப்பிலேற்றி பாகுபதத்தில் இறக்கி, உடனே வேறொரு பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும். ஆறிய பிறகு, இதைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன்பு 5 மில்லி முதல் 10 மில்லி வரை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வாதநோய்கள் அண்டாது. மலம் இளகி வெளியேறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick