நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி

‘‘வீட்டுத்தோட்டத்தில் சிறகு அவரை செடியை வளர்க்கலாமா? இதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமாகச் சொல்லவும்.’’

கே.ஆர்.நவநீதன்,
சென்னை.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் அலுவலர் வி.வீரப்பன் பதில் சொல்கிறார்.

‘‘மலேசியா நாட்டுக்குப் பயணம் செய்தபோதுதான், இந்தச் சிறகு அவரைக்காய் (Winged Beans) பற்றிக் கேள்விப்பட்டேன். அங்கு இந்த அவரைக்காய்தான் பிரதான உணவாக உள்ளது. இந்தியாவிலும் இது பயிரிடப்படுகிறது என்ற தகவல் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நம்ம ஊர் அவரைக் கொடிபோலப் படர்ந்து காய்க்கும். இதன் தாவரவியல் பெயர், ‘சொபோகார்பஸ் டெட்ராகோனலோபஸ்’ (Psophocarpus tetragonolobus) ஆகும்.

தமிழில் இதன் வடிவத்தை வைத்து ‘சிறகு அவரை’ என்றும் மலையாளத்தில் ‘சதுரவரை’ என்றும் வடமாநிலங்களில் ‘கோவாபீன்’ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ‘நியூகினியா’ என்றாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும், வெப்ப மண்டலங்களான தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

சிறகு அவரைக்காய், பயறு வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. தனக்குத் தேவையான தழைச்சத்தை வேரில் வாழும் பாக்டீரியாக்களின் துணையுடன் தயாரித்துக்கொள்ளும் தன்மைகொண்டது. பூச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்ட பயிர் இது. ஒருமுறை விதை ஊன்றினால் போதும், அடுத்த முறை விதைக்கத் தேவையில்லை. மீண்டும் நீர்ப்பாசனம் செய்து, இயற்கை உரங்கள் வைத்தால், துளிர்விட்டு வளர்ந்து, விளைச்சல் கொடுக்கத் தொடங்கும். விதைத்த 90-ம் நாளில் நீல நிறப் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் 15-லிருந்து 22 செ.மீ. நீளமுடைய, மிருதுவான காய்கள் உருவாகும். ஒரு செடியிலிருந்து நான்கு முதல் ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும்.

இவற்றின் இலைகள், பூக்கள், வேர்க்கிழங்குகளைக்கூட உணவாகப் பயன்படுத்தலாம். சோயாபீன்ஸ்போலவே அதிகளவில் புரதச்சத்து (40%) கொண்டது. இலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுப்பொருள்களான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, போலிக் அமிலங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தட்ப வெப்ப நிலைக்கு சிறகு அவரைக்காய்ச் சிறப்பாக விளைச்சல் கொடுக்கும். ஆடிப்பட்டத்தில் தான் இதை விதைக்க வேண்டும். இந்தச் சிறகு அவரைக்காயைப் பற்றி, சில ஆண்டுகளாகப் பட்டுக்கோட்டை, கரம்பயம், ஆம்பலாப்பட்டு, தம்பிக்கோட்டை, பரக்கலக்கோட்டை... பகுதிகளில் பரிசோதனை அடிப்படையில் வளர்த்து பார்த்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட மிக சிறப்பாகவே விளைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக வீட்டுத்தோட்டங்களுக்கு ஏற்ற காய்கறிச் செடிகளில் இதுவும் ஒன்று என்பதை அறிந்து கொண்டோம். மேலும், இதை தென்னை மரங்களில் ஏற்றி சிறந்த உயிர் மூடாக்காகவும், மூடுபயிராகவும் வளர்க்கலாம். இதனால் தென்னையில் தோன்றும் வாடல், சாறுவடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். பசுந்தழை உரமாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். மனிதர்களுக்கும் சிறகு அவரைக்காய்ச் சிறந்த உணவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு, செல்போன்: 80128 92818.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick