வறண்டு போகிறது!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘நீர்ப்பங்கீட்டில் கடைமடையில் இருப்பவர்களுக்குத்தான் உரிமை அதிகம்’

பட்டிக்காட்டுப் பஞ்சாயத்து தொடங்கி, ஆனானப்பட்ட ஐ.நா.சபை வரை இதுதான் சட்டம். இயற்கையின் நியதியும் இதுவே! ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, காவிரி நதிநீர்ப் பிரச்னையில் கடைமடையான தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே தொடர்ந்து மத்தியில் ஆட்சிபுரியும் கட்சிகள் இயங்கிவருகின்றன. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகளுமே, கர்நாடக மாநில ஆட்சியை மனதில்கொண்டு, சுயநலப்போக்குடன் தொடர்ந்து நடந்துகொள்கின்றன.

அனுமார் வாலாக நீண்டுகொண்டிருந்த பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் வகையில்தான் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. இதில் முழுமையான நீதி கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்குப் பரவாயில்லை என்கிற வகையில் தீர்ப்புகள் வந்தன. ஆனால், அதையும்கூட கர்நாடகா மதிக்கவில்லை. தீர்ப்பின் அம்சங்களை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.

‘காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னும் அமைக்கவில்லை’ என உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்குமுன் சாட்டை வீசியிருக்கிறது. இதற்கு ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். நடுவர்மன்றத்தின் தீர்ப்பைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது’ என்று சொல்லி, தமிழகத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு. இதைப் பற்றித் துளியும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் ‘தலையாட்டிப் பொம்மை’ அரசு.

இருமாநிலங்களையும் ஒரே தராசில் நிறுத்திப் பார்க்க வேண்டிய மத்திய அரசு... கர்நாடகா கண்ணில் வெண்ணெயும், தமிழகக் கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதைப் பார்க்கும்போது, காவிரி ஆறு போலவே மனதும் வறண்டு போகிறது!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick