தண்ணீரை ஊற்றக்கூடாது... தெளிக்க வேண்டும்!

பயிற்சிஆர்.குமரேசன் - படங்கள்: தே.சிலம்பரசன், நி.ராஜேஷ்வர்

 

ஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்யும் வகையில் ‘காலியிடமெல்லாம் காய்கறி உற்பத்தி’ என்ற பெயரில் ‘பசுமை விகடன்’ சார்பாக மாவட்டந்தோறும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுவருகின்றன.

அந்தவகையில், கடந்த செப்டம்பர் 24-ம் தேதி விழுப்புரம் நகரத்தில் விழுப்புரம் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ரோட்டரி கிளப் மண்டலச் செயலாளர் சரவணக்குமாரின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில், விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் கந்தன், “மக்களுக்குப் பயனுள்ள இதுபோன்ற பயிற்சிகளைப் பசுமை விகடனுடன் இணைந்து நடத்துவதில் பெருமை கொள்கிறோம். விவசாயம் தொடர்பான பல்வேறு பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.  புதுச்சேரியைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர் அனிதா பேசும்போது, “வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம்தான் முக்கியம்.

வாய் அகலமாய் இருக்கும் தொட்டிகளில் காலிஃபிளவர், முட்டைகோஸ் போன்ற பயிர்களை நடவு செய்யலாம். சிறிய வாய்கொண்ட தொட்டிகளில் புதினா, கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை நடவுசெய்யலாம். விதை ஊன்றி அவை வளர்ந்து செடியாகும் வரை நீரை ஊற்றக் கூடாது. பூவாளி மூலமாகத் தெளித்துதான் வர வேண்டும்.

தொட்டிகளில் களைகளைக் கட்டுப்படுத்த தென்னை மட்டைகள், வைக்கோல், காய்ந்த இலைகள், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை மூடாக்காகப் போடலாம். கீரைகளைக் கொழுந்தாக இருக்கும்போதே அறுவடை செய்துவிட வேண்டும். தக்காளியைச் செடியிலேயே பழுத்த வைத்த பிறகுதான் அறுவடை செய்ய வேண்டும். அவரை, கத்திரி, வெண்டை ஆகியவற்றை முற்றுவதற்குள் அறுவடைசெய்ய வேண்டும்.

ஒரு தொட்டியில் தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடிசெய்யக் கூடாது. சுழற்சி முறையில் வேறுவேறு பயிர்களைச் சாகுபடிசெய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தொட்டியிலுள்ள மண்ணை மாற்ற வேண்டும். வெயில் காலத்தில் பயிர்களைப் பாதுகாக்க நிழற்வலை அமைத்தால் நல்லது. இதன் மூலமாக அணில் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து பழங்களைப் பாதுகாக்கலாம்.

வீட்டுத்தோட்டத்தில் எறும்புகள், பூச்சிகள் தென்பட்டால் புகையிலைக்கரைசல் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஒரு கைப்பிடி புகையிலையை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு, அது ஒரு லிட்டராகச் சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதை இறக்கி ஒருநாள் வைத்திருந்து... ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கரைசல் என்ற அளவில் கலக்கித் தெளிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், இஞ்சி பூண்டுக் கரைசல் போன்ற இயற்கை இடுபொருள்களைத் தயாரிக்கும் முறைகளைப் பற்றி வேளாண் ஆலோசகர் ஏகாம்பரம் பேசினார். காளான் வளர்ப்பு குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த சேகரன் வகுப்பெடுத்தார்.

 பிறகு, பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.  கருத்தரங்கின் நிறைவாக, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துப் பெரம்பலூரைச் சேர்ந்த முன்னோடிப் பண்ணையாளர் பிரேம் ஆனந்த் பேசினார். அவர் இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கும் முறைகள் பற்றி விளக்கினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick