அகத்தியில் பஜ்ஜி... ஆண்டு முழுவதும் காய்க்கும் முருங்கை! | Significance of home garden: Seminar by Rotary club in Tiruchengode - Pasumai Vikatan | பசுமை விகடன்

அகத்தியில் பஜ்ஜி... ஆண்டு முழுவதும் காய்க்கும் முருங்கை!

பயிற்சி ரா.கு.கனல்அரசு - படங்கள்: தே.தீட்ஷித்

ங்களுக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்வதில் உள்ள மனத்திருப்திக்கு ஈடு இணையே கிடையாது. ஆதி காலத்திலிருந்து நமக்குப் பழக்கமானதுதான் வீட்டுத்தோட்டம். வீட்டுக்கூரைகள் கான்கிரீட் கட்டடங்களாக மாறிய பிறகு, வீட்டில் தோட்டம் போடும் பழக்கம் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. ஆனால், காலச்சுழற்சியில் ‘பழையன திரும்புதல் விதி’ப்படி... வீட்டுத்தோட்டம் மறுபடியும் வழக்கத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. மொட்டை மாடிகளில், வீட்டைச் சுற்றியுள்ள காலியிடங்களில் காய்கறி வளர்க்கும் ஆர்வம் தற்போது அதிகரித்திருக்கிறது. 

இப்படி ஆர்வமுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது ‘பசுமை விகடன்’. அந்த வகையில், கடந்த 20-ம் தேதி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வீட்டுத்தோட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

‘திருச்செங்கோடு ரெட்ராக் ரோட்டரி கிளப்’ மற்றும் பசுமை விகடன் ஆகியவை இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த பல்கலைக் கழகத்தின் வேளாண்மைத்துறை மாணவர்களும்  இக்கருத்தரங்கில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ரோட்டரி கிளப் தலைவர் சரவணனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயிர் ஆற்றல்துறைத் தலைவரும் பேராசிரியருமான வெங்கடாச்சலம் நிகழ்ச்சியில் ஆலோசனைகளை வழங்கினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் தற்போது வசித்துவரும் வெங்கடாச்சலம், தன் வீட்டைச் சுற்றியும் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.

கருத்தரங்கில் பேசிய வெங்கடாச்சலம், “வீட்டுத்தோட்டம் அமைக்கிறது ரொம்பச் சுலபமான வேலை. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவைப்படுறது ஆர்வம் மட்டும்தான். உங்ககிட்ட ஆர்வம் மட்டும் இருந்தால் போதும், தோட்டம் தன்னால உருவாகிடும். தோட்டம் அமைக்க அதை வாங்கணும், இதை வாங்கணும்னு யோசிக்கவே வேண்டாம். செடி வளர்றதுக்கு ஒரு பொருள் அல்லது இடம், கொஞ்சம் எரு, விதை, தண்ணி இது மட்டும் போதும். இடம் இருக்கிறவங்க மண்ணுலயே நடலாம். இல்லாதவங்க, வீட்டுல காலியா இருக்கிற பொருள்கள்ல நடலாம். காலி வாட்டர் பாட்டில், பழைய ஷூ, பழைய சிமென்ட் சாக்கு, பெயின்ட் டப்பானு ஒவ்வொரு வீட்டுலயும் தேவையில்லாத பொருள்கள் நிச்சயம் இருக்கும். அதுல கொஞ்சம் மண்ணையும் எருவையும் போட்டுச் செடிகள் வளர்க்கலாம். எல்லா வீட்டுலயும் முருங்கை, பப்பாளி, அகத்தினு மூணு செடிகள் கட்டாயம் இருக்கணும். இந்த மூணும் இருந்தால் கீரை, பூ, காய், பழம் எல்லாம் கிடைச்சிடும்.  

முருங்கையை நட்டு வெச்சா, அது ஆறு மாசத்துல பூத்துக் காய்க்க ஆரம்பிச்சிடும். அதிலிருந்து பூ, கீரை, காய் மூணும் கிடைக்கும். முருங்கை பூவெடுக்கும்போது ஒரு கிளையை விட்டுட்டு, இன்னொரு கிளையைக் கவாத்து செய்யணும். இப்படிச் செஞ்சா பூ இருக்கிற கிளையில காய் ஓய்ஞ்சு போகும்போது, கவாத்து செஞ்ச கிளை பூவெடுத்து காய்க்க ஆரம்பிச்சிடும். இப்படிச் செய்றதால வருஷம் முழுக்கக் காய் கிடைச்சுகிட்டே இருக்கும். அடுத்ததா பப்பாளி மூலமா பழம் கிடைச்சிடும். அகத்திக்காயைப் பிஞ்சுலயே பறிச்சுடணும். கொத்தவரங்காய் மாதிரியே இருக்கும். இதோட பூவுல பஜ்ஜி போடலாம். இப்படி ரெண்டு மூணு செடிகள் மட்டும் இருந்தால்கூட ஆரோக்கியமா வாழ முடியும்” என்று பேசினார்.

தமிழ்நாடு அரசுத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை சார்பாக, வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான பைகள், தென்னை நார்க்கழிவு, விதைகள் அடங்கிய உபகரணங்களை மானிய விலையில் வழங்கினார்கள். அதைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து, திருச்செங்கோடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மணிமேகலை விளக்கினார்.

காளான் வளர்ப்பு குறித்துப் பேசிய திண்டுக்கல்லைச் சேர்ந்த கவிதா மோகன்தாஸ், பத்தடிக்குப் பத்தடி இடத்தில் சிப்பிக் காளான் வளர்க்கும் முறைகள் குறித்துச் செய்முறையுடன் விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick