ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 6 - மா... கவனிக்க வேண்டியவை எவை?

கேள்வி-பதில்

மா சாகுபடி குறித்த கேள்விகளுக்குக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் கடந்த இதழ்களில் பதில்களைச் சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சி இங்கே...

மா சாகுபடியில் பூச்சி மேலாண்மை குறித்துச் சொல்ல முடியுமா?

மா சாகுபடியில் இரண்டு பூச்சிகள்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று, பச்சைத் தத்துப்பூச்சி. மற்றொன்று தண்டுத் துளைப்பான். முதலில் பச்சைத் தத்துப்பூச்சி குறித்துப் பார்ப்போம். மழைக்காலம் முடிந்து நவம்பர் மாதக் கடைசி அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் மாமரங்களில் இளம் தளிர்கள் தோன்றும். முதிர்ந்த இலைகளைவிட, இந்த இளம் இலைகளில்தான் அதிகளவு சாறு இருக்கும். இளம் தளிர்கள் தோன்றும் சமயத்தில்தான் தத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இலைகளைத் தாக்கும். இந்தப் பூச்சிகளின் நடமாட்டம் ஆண்டு முழுவதும் தோப்பில் இருந்தாலும், இளம் தளிர்கள் உருவாகும்போதுதான் அதிகளவில் இருக்கும். இளம் தளிர்கள் உருவாகும் வரை அருகில் உள்ள இலவம்பஞ்சு மரம் அல்லது கொய்யா மரங்களில் இந்தப் பூச்சிகள் காத்திருக்கும். அதனால்தான் மாந்தோப்பில் இலவ மரத்தை வைக்கக்கூடாது என்கிறார்கள். இந்தப் பூச்சிகள் மிகவும் சிறியதாக இருக்கும். மிக நுட்பமாக உற்றுப்பார்த்தால்தான் கண்ணுக்கே தெரியும். மைக்ராஸ்கோப் மூலமாகப் பார்க்கலாம்.

தண்டில் கைவைத்துப் பார்க்கும் போது பிசுபிசுப்புத்தன்மை இருந்தால், தத்துப்பூச்சிகள் தாக்கியுள்ளன என்று தெரிந்து கொள்ளலாம். பிசுபிசுப்புத் தன்மை இருக்கும்போது, இலையின் நுனிப்பகுதி சுருண்டிருக்கும். நவம்பர் மாதக் கடைசி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் இப்பூச்சிகள் முட்டையிடும். இலையின் பின்பக்கம், நரம்புக்கு அருகில் வரிசையாக முட்டை இட்டுவிடும். அடுத்த நான்கு நாள்களில் இந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick