மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: வேலு

டகிழக்குப் பருவமழை உபயத்தால், அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், ‘ஏரோட்டி’ ஏகாம்பரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சும் வேலை இல்லை. அவரும் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் தேநீர்க்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம், ‘காய்கறி’ கண்ணம்மா வியாபாரத்தை முடித்துவிட்டு வர, மூவரும் பேசிக்கொண்டே தோட்டத்துக்குக் கிளம்பினர். தோட்டத்தை அடையும் சமயத்தில் வானம் இருட்டிக்கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. ‘அடாது மழை பெய்தாலும் விடாது மாநாடு நடக்கும்’ என்று சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார். “சேலம் மாவட்டம், தாரமங்கலம், கொங்கணாபுரம், இடைப்பாடி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் பகுதிகள்ல கிட்டத்தட்ட 4,500 ஏக்கர் பரப்புல ஊடுபயிரா துவரைச் சாகுபடி செய்றாங்களாம். இப்போ காய்பிடிக்கிற பருவத்துல இருக்குற துவரைச்செடிகள்ல காய்ப்புழுக்கள் தாக்கி அதிகப் பாதிப்பை ஏற்படுத்துதாம். நிறைய விவசாயிகள் இந்தப்பிரச்னைக்கு என்ன செய்யலாம்னு கேட்டுட்டுருக்காங்க. அதுக்கான தீர்வைச் சொல்லியிருக்கார், சேலம் மாவட்ட வேளாண்மைத்துறை இயக்குநர் செல்லத்துரை.

‘பச்சைப்புழு, பிளவு இறக்கைப் பூச்சி, துவரை காய்த் துளைப்பான் மாதிரியான புழுக்கள்தான் துவரையைத் தாக்குது. பருத்தி, நிலக்கடலை, கொண்டைக்கடலை, மக்காச்சோளம், கம்பு, வெண்டைக்காய், தக்காளி, மொச்சை, அவரை மாதிரியான பயிர்களையும் இந்தப்புழுக்கள் தாக்கும். பிளவு இறக்கைப் பூச்சிகள்... துவரை, மொச்சை, சோயாப் பயிர்கள்ல இருக்கும். பச்சை நிறத்தில், மெல்லிய ரோமங்களோடு பிளவுபட்ட இறக்கைகளுடன் இருக்கும். இந்தப்பூச்சிகள் மொட்டுக்களைச் சாப்பிடுறதால, செடிகள்ல மகசூல் பாதிப்பு ஏற்படும்.

பச்சைக்காய்த் துளைப்பான் புழுக்கள்... அவரை, துவரை, கொள்ளு, பட்டாணி, மொச்சை பயிர்கள்ல இருக்கும். இது இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இந்தப்புழுக்கள் காய்களைத் துளைத்து, விதைகளைத் தின்றுவிடுவதால் மகசூல் பாதிக்கப்படும். விதைப்புக்கு முன் ஆழமாக உழுது கிளறிவிட்டால் மண்ணுக்கு அடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் அழிந்துவிடும். துவரை நடவு செய்யும்போது, ஒன்பது வரிசைகளுக்கு இடையில், ஒரு வரிசை சூரியகாந்தி செடிகளை வளர்த்தால் துவரையில் பூச்சிகள் கட்டுப்படும். விளக்குப்பொறிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள், பறவை தாங்கிகள் அமைத்து இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். வாரம் இரண்டு முறை வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்’னு செல்லத்துரை சொல்லிருக்கார்” என்றார், வாத்தியார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick