40 சென்ட்டில் ரூ.1 லட்சம்... கலக்கல் வருமானம் கொடுக்கும் ‘காஞ்சி’ கத்திரி..!

மகசூல்துரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

ன்றாடச் சமையலுக்குப் பயன்படக்கூடிய காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். அதனால், எப்போதும் அதற்குச் சந்தையில் தேவை இருக்கும். ஆனால், அதிகம் பூச்சிகள் தாக்கக்கூடிய காய் என்பதால், விவசாயிகள் பலரும் அதைச் சாகுபடி செய்யத் தயக்கம் காட்டுவர். அத்தகைய சூழ்நிலையிலும் இயற்கைமுறையில் கத்தரிக்காயை வெற்றிகரமாகச் சாகுபடி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயி’ வீரராகவன்.

ஒரு காலை வேளையில் கத்திரிக்காய் பறிக்கும் பணிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வீரராகவனைச் சந்தித்தோம். “பரம்பரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனக்கு மொத்தம் 100 ஏக்கர் நிலம் இருக்கு. தாத்தா காலத்துல பாலாற்றுத் தண்ணியை வெச்சு விவசாயம் பார்த்தாங்க. அதன்பிறகு அப்பா, கிணறு வெட்டி விவசாயம் செஞ்சாங்க. இப்போ தண்ணி இல்லாததால பாதி நிலத்துக்குமேல சும்மாதான் இருக்கு. நான் காலேஜ் முடிச்சதும், வில்லிவலம் கிராமத்துல ‘கிராம வளர்ச்சி செயல் ஆராய்ச்சித்திட்டப் பயிற்றுநர்’ வேலையில் சேர்ந்தேன். அப்படியே விவசாயத்தையும் செய்ய ஆரம்பிச்சேன். நானும் அப்பா, தாத்தா வழியில ரசாயன விவசாயம்தான் செஞ்சிட்டுருந்தேன்.

அந்தச் சமயத்துல வில்லிவலம் ஊராட்சித்தலைவரா இருந்த தாந்தோணி ஐயாவோட பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருந்தார். அவரோட விவசாய முறைகளைப் போய் பார்த்தேன். அவர்கிட்ட அதுபத்தி நிறைய விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதேசமயம் பசுமை விகடனும் நான் இயற்கை விவசாயத்துக்கு வர்றதுக்கு உந்துதலா இருந்துச்சு. விவசாயமே நஷ்டம்னு சொல்லிட்டிருக்கிற நேரத்துல, அதுலயும் லாபம் எடுக்க முடியுங்கற தைரியத்தைப் பசுமை விகடன் எனக்குக் கொடுத்துச்சு.  இதுமூலமா 25 ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்காக ஒதுக்கினேன். அதுல ‘போர்வெல்’ போட்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். முதல்ல 3 ஏக்கர் நிலத்துல கிச்சிலிச்சம்பா நெல் விதைச்சேன். அதுல பெரிசா மகசூல் இல்லை. இயற்கை முறையில செய்யுறப்போ ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுருந்ததால பிரச்னை இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick