அக்கறை உறுதியாகும்!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள்களின் விற்பனைக்கான, புதிய விதிமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘விளைபொருள் எந்த வகையில் இயற்கையானது என்பது குறித்த விவரங்கள் லேபிளில் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்; உணவுப்பொருள்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம் அதிகபட்சம் 5 சதவிகிதம் மட்டுமே இருக்கவேண்டும்’ என்றெல்லாம் விதிமுறைகள் நீள்கின்றன.

இயற்கை விவசாயம் வேகமாகப் பரவிவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நஞ்சு பயன்படுத்தப்படாத, இயற்கை உணவுகள்தான் உடலுக்கு நல்லது என்கிற விழிப்பு உணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆனால், இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட பொருள்கள் என்கிற பெயரில், போலிகளின் நடமாட்டம் சந்தையில் அதிகம் என்பதே நிதர்சனம். பெரிய நிறுவனங்கள்கூட ‘இயற்கை’, ‘நேச்சுரல்’ என்கிற பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவருகின்றன. ஆனால், இவர்களெல்லாம் இப்படி விற்பனை செய்யுமளவுக்கு, இங்கே உற்பத்தி இல்லை என்பதே உண்மை. ஒட்டுமொத்தமாக இயற்கை விவசாயத்துக்கு மாறினால் மட்டுமே இது சாத்தியம். எனவே, நுகர்வோரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் போலிகளைக் களையெடுக்க, புதிய விதிமுறைகள் கைகொடுக்கக்கூடும். அதேசமயம், இந்த முயற்சி இயற்கை விவசாயத்தை ஒரேயடியாக நசுக்கிவிடக் கூடாது என்பதிலும் அரசு கவனமாக இருக்கவேண்டும்.

நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்யும் இயற்கை விவசாயிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது போல, கட்டணமில்லாமல் இயற்கை விவசாயச் சான்றிதழ்; சிறு, குறு இயற்கை விவசாயிகளுக்கு மானியம் மற்றும் சலுகைகள்; இயற்கையில் விளைவிக்கப்பட்டவைதான் என்பதை எளிதில் கண்டறிய ஆய்வுக் கூடம்; விற்பனைக்கான பிரத்யேக வாய்ப்புகளை உருவாக்குவது... இப்படி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டியவை நிறையவே இருக்கின்றன. இதையெல்லாம் சாத்தியமாக்கும்போதுதான், இயற்கை விவசாயத்தின் மீது இந்த அரசுக்கு இருக்கும் அக்கறை உறுதியாகும்!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்