இனியும் தொடர வேண்டாம்!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

உலக வர்த்தக அமைப்பின் கரங்கள் தொடர்ந்து வலுப்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விவசாயிகளின்நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது. அதேசமயம், ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் விவசாயத்தையும் ‘பணம் காய்க்கும் தொழில்’ எனப் பார்க்கும் அரசுகள், கொஞ்சம்கூடக் கவலையின்றி ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுக்கொண்டே இருக்கின்றன.

‘விவசாய மானியம் 10 சதவிகிதத்துக்குள் இருக்கவேண்டும்; 2018-ம் ஆண்டிலிருந்து உணவுத் தானியங்களை எதிர்காலத் தேவைக்காகச் சேமிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்; விளைபொருள்களை ஏற்றுமதிசெய்ய வேண்டுமானால், விவசாய மானியங்களை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும்’ என்கிற உலக வர்த்தக அமைப்பின் தீர்மானங்களை ஏற்று, 2014-ம் ஆண்டு ஜெனிவா நகரில் கையொப்பமிட்டார், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன். ‘இதெல்லாம் விவசாயிகளின் தலைக்குமேல் தொங்கும் கத்திகள்’ என்று விவசாய அமைப்புகள் கூப்பாடு போட்டும் கண்டுகொள்ளவில்லை.

தற்போதோ, ‘‘அரசாங்க மானியங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தால், அதைநம்பி விவசாயம் செய்யும் இந்தியர்கள், விவசாயத்தையே விட்டுவிடுவார்கள்’’ என்று அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் முழங்கிவிட்டு வந்திருக்கிறார் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

ஒரு பக்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு, மறுபக்கம் எதிர்ப்புகாட்டியிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. உண்மையிலேயே, விவசாயிகள்மீது அக்கறையிருந்தால், ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்தே போட்டிருக்கக் கூடாது. ‘இப்போதுதான் விழித்துக் கொண்டோம்’ என்று பா.ஜ.க அரசு கூறுமானால், ‘அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்’ என்று முழங்கியிருக்க வேண்டும்.

பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் வேலை, இனியும் தொடர வேண்டாம்!

- ஆசிரியர்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick