இன்னும் எத்தனை நூற்றாண்டுகளோ? | Editor Opinion - Pasumai Vikatan | பசுமை விகடன்

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளோ?

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘இறுதித் தீர்ப்பு’ என்கிற பெயரில் காவிரி விவகாரத்தில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு... தமிழக மக்களின் அரைநூற்றாண்டு தர்ம, நியாயச் சட்டப் போராட்டங்களுக்குத் துளிகூட நியாயம் செய்யவில்லை.

நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதுதான்... காவிரி பிரச்னையில் செய்யப்பட்ட ஆகப்பெரிய சாதனை. ஆனால், அந்த மன்றம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே தற்போது சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ளன... உச்ச நீதிமன்றமும், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும்.

வாரியம், ஆணையம், குழு என்று பெயர் வைப்பதிலும், கர்நாடகத் தேர்தல் நேரம் என்று சொல்லிக் காலம் கடத்துவதிலும்தான், மத்தியில் ஆளும் அரசு கவனத்தைச் செலுத்தியது. இதையெல்லாம் தொடர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், ‘காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுவிட்டது. அதற்குத்தான் முழு அதிகாரம். அந்த ஆணையத்தில் உத்தரவுகளை ஒரு மாநிலம் மதிக்காதபோது, மத்திய அரசை நாடலாம்’ என்று அழகான வார்த்தைகளோடு பிரச்னைக்கு முடிவுரை எழுதியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கொடுமை என்னவென்றால், ‘6 வாரத்தில் வாரியம் அமைத்தே ஆகவேண்டும்’, ‘தண்ணீரை இன்றே திறந்துவிட்டாக வேண்டும்’ என்றெல்லாம் தான் பிறப்பித்த உத்தரவுகளைத் துளிகூட மதிக்காத மத்திய மற்றும் மாநில அரசுகளை நோக்கியே இந்த இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் எழுதியிருப்பதுதான்.

எந்த உத்தரவையும்... எப்போதுமே கர்நாடகா மதித்ததில்லை என்பதுதான் பிரச்னை. அதனால்தான், ஒவ்வொரு தடவையும் மத்திய அரசிடமும் உச்ச நீதிமன்றத்திடமும் போய் நின்று உரிமைக் குரல் எழுப்பியது தமிழகம். ஆனால், தற்போதைய உத்தரவின் மூலமாகத் தொடங்கிய இடத்துக்கே பிரச்னையைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ம்... இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ காவிரி பிரச்னை தீர?!

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick