நீங்கள் கேட்டவை: குறைந்த விலையில் மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?

புறாபாண்டிஓவியம்: ஹரன்

‘‘எங்கள் நண்பருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கவுள்ளோம். புதுக்கோட்டையில் குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டோம். அதைப் பற்றிய விவரம் சொல்லவும்?’’

ஆர்.கருப்பையா, சிவகங்கை.


புதுக்கோட்டை மாவட்டம், கல்லக்குடி இருப்பு நர்சரி சங்கத்தைச் சேர்ந்த செல்லையா பதில் சொல்கிறார்.

‘‘எங்கள் ஊர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்குப் பரிச்சயமானது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு வறுமை தாண்டவமாடிய கிராமம் இது. தண்ணீர்ப் பற்றாக்குறையால், ஊர் முழுக்கவே காட்டுக்கருவை மரங்கள்தான் மண்டிக்கிடந்தன. இன்றோ, நாற்றுப் பண்ணைகளாக மலர்ந்திருக்கின்றன. தனிநபர்கள் மட்டுமல்லாது, சுயஉதவிக் குழுவினரும் இக்கிராமத்தில் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அரை ஏக்கர் பரப்பு முதல் ஒரு ஏக்கர் பரப்பு வரையில் சிறியதும் பெரியதுமான நாற்றுப் பண்ணைகள், சுமார் எழுபது வகையான மலர் நாற்றுகள், 65 வகையான மரக்கன்றுகள் என்று இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான நாற்றுகள் விற்பனையாகின்றன. சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் 200 நர்சரிகள் உள்ளன. மா, கொய்யா, மாதுளை, பலா, சப்போட்டா... என்று சகலவிதமான மரக்கன்றுகளையும் உற்பத்திசெய்து வருகிறோம். மரக்கன்றுகள் உற்பத்திசெய்ய ஆகிற செலவை மட்டும்தான் விலையாக வைத்துள்ளோம். இந்தப் பகுதிகளில், ஆச்சரியப்படும் வகையில் குறைந்த விலையில் கன்றுகள் கிடைக்கும். இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் வரைதான் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறைந்த விலையில் கிடைப்பதால், தரம் இருக்காது என்று நினைக்க வேண்டாம். வனத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற துறைகள், இந்தப் பகுதிகளில்தான் கன்றுகளை வாங்குகின்றன. தனியார் நர்சரி உரிமையாளர்கள் எங்களிடமிருந்து மொத்தமாகக் கன்றுகளை வாங்கிச்சென்று, வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்தும் வருகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தினரும் கன்றுகளை வாங்கிச் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் திருமண வீடுகளில் மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுக்கும் நல்ல பழக்கம் பரவி வருகிறது. எந்தப் பகுதியில் திருமணம் நடக்கிறது என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தபடி கன்றுகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். கிராமப் பகுதியாக இருந்தால் பழமரக்கன்றுகளையும், நகர்ப்புறம் சார்ந்த பகுதியாக இருந்தால் மலர்ச் செடிகளையும்,  தூசு, தும்புகளை இழுக்கும் பலா கன்றுகளையும் வழங்கலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99428 18629.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick