பாராட்டுவோம்... பலன் பெறுவோம்!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் கம்பு, சோளம், கேழ்வரகு... போன்ற சத்து நிறைந்த சிறுதானியங்களைப் பொதுமக்களுக்குக் குறைந்தவிலையில் வழங்கவேண்டும்’ என்று கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவு, பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு காலத்தில் உணவு என்றாலே சிறுதானியங்கள்தான். ஆனால், பசுமைப்புரட்சிக்குப் பிறகு, நெல், கோதுமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால், காலங்காலமாக மக்களுக்குச் சத்துக்களை அள்ளி வழங்கி வந்த சிறுதானியங்கள், நம் உணவுத் தட்டிலிருந்து மறையத் தொடங்கின. ஆனாலும், அவற்றின் மகத்துவத்தை உணர்ந்திருந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், சுற்றுச்சூழல் போராளிகள், முன்னோடி விவசாயிகள் எனப் பலரும் சிறுதானியத்தைத் தொடர்ந்து தூக்கிச் சுமக்க ஆரம்பித்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள டெக்கான் டெவலாப்மென்ட் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனம், சிறுதானியச் சாகுபடியில் பெண் விவசாயிகளை இறக்கிவிட்டதோடு, அவர்கள் மூலமாகவே பொதுவிநியோகத் திட்ட அடிப்படையில் கம்பு, சோளம்... எனச் சிறுதானிய விற்பனையையும் தொடங்கிவைத்தது. இம்மக்களின் முயற்சி மட்டுமல்ல, பொதுவாகவே சிறுதானியத்தின் முக்கியத்துவம், தேவை குறித்துப் பசுமை விகடன் முதல் இதழ் தொடங்கி, இப்போது உங்கள் கைகளில் தவழும் இதழ் வரையிலும்கூட எழுதிவருகிறோம். கூடவே, கருத்தரங்கு மற்றும் பயிற்சிகளையும் நடத்திவருகிறோம்.

இப்படித் தொண்டுநிறுவனங்கள், பத்திரிகைகள், விவசாயிகள் எனப் பலரும் சிறுதானியத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் அலாதியானது. அதோடு, இதைப் பொதுவிநியோகத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து எழுதியும், குரல்கொடுத்தும் வந்தனர். ஊர்கூடி தேர் இழுத்ததற்குப் பலனாக, இப்போது சிறுதானியத்துக்குப் பெரிய மரியாதை கிடைத்துள்ளது. அரசின் இந்த முயற்சியைப் பாராட்டுவதோடு, இதன் மூலம் மக்களுக்குச் சத்தான உணவும், விவசாயிகளுக்குப் போதுமான விலையும் வந்து சேரும் என்று எதிர்பார்ப்போம்.

-ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick