மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசி

அண்மையில், தெலங்கானா மாநிலத்தில உள்ள ஹைதராபாத்துக்குப் போயிருந்தேன். அந்தச் சமயத்துல இன்னைக்கு மாலை 5.30 மணிக்குப் பத்திரிகையாளர் பி.சாய்நாத் பேசுறாருனு சேதி வந்துச்சி. சரி, ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம்னு கிளம்பினேன். ஆங்கிலம் படிக்கத் தெரிஞ்ச மக்கள் மத்தியில சாய்நாத் ரொம்பவே பிரபலம். தி ஹிண்டு ஆங்கிலத் தினசரியில் பணி செய்த சமயத்துல விவசாயிகளோட பிரச்னைகளை அறிவு ஜீவிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் புரியும் விதத்துல எழுதினாரு. மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதி விவசாயிகள் தற்கொலை சம்பந்தமா இவர் எழுதின பிறகுதான், அரசாங்க அதிகாரிங்க, அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தாங்க. தன்னை ஊரகப் பத்திரிகையாளர்(Rural Journalist) னுதான் சொல்லணும்னு அடம் பிடிக்கக்கூடிய விவசாய விரும்பி. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியோட பேரன். விவசாயிகளுக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வர்றதால விருதுகள், பட்டங்கள்னு வாங்கி குவிக்கக்கூடிய நபர்னு சாய்நாத் பத்தி சொல்லிக்கிட்டேப் போகலாம்.

அடுத்த மாசம் புதுடெல்லியில நடக்கவுள்ள கிஸான் முக்தி யாத்ரா (விவசாயிகள் விடுதலை பயணம்) சம்பந்தமா, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) ஏற்பாடு செய்த கூட்டத்துல பேசத்தான், சாய்நாத், மும்பையில இருந்து ஹைதராபாத்துக்கு வந்திருந்தாரு. ‘பஞ்சாரா ஹில்ஸ்’ங்கிற பகுதியில உள்ள திறந்தவெளி அரங்குலதான் (Amphitheatre) கூட்டம் நடந்துச்சி. நூறு பேருக்குள்ளத்தான் ஆள்கள் வந்திருந்தாங்க. இதுல கதர் ஜிப்பா, பருத்தி சேலைனு நாட்டுப்பற்றும் காந்திய சிந்தனை உள்ள அறிவு ஜீவிகள் எண்ணிக்கைத்தான் அதிகமா இருந்துச்சி. அலங்காரம், அதட்டல், ஆலாபனைனு எந்தப் பகட்டும் இல்லாம நேரடியா பேச்சை ஆரம்பிச்சாரு, சாய்நாத்.

‘‘முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் செய்திச் சேகரிக்கச் சென்றபோது, நான் பார்த்த காட்சிகளுக்கும், இப்போது பார்க்கும் காட்சிகளுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. அப்போது விவசாயிகள் மிகவும் மதிக்கப்பட்டனர். விவசாயம் செய்பவர்களுக்குச் சமூகத்தில் பெரிய மரியாதை இருந்தது. ஒருமுறை பத்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதாக அந்த விவசாயி சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick