செயற்கை வறட்சி!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

காவிரி மற்றும் அதன் கிளையாறுகளில் வெள்ளம் பொங்கிப் பாய்கிறது. ஆனால், அதை வேதனையோடு வேடிக்கைதான் பார்க்கமுடிகிறதே தவிர, ஒரு சொட்டுத்தண்ணீரைக்கூடப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாமல், கையறு நிலையில் கண்ணீர் வடிக்கின்றனர் டெல்டா விவசாயிகள். தண்ணீரோ... வெறுமனே கடலை நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.

இந்த ஆண்டுக் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால், மூன்று முறைக்கு மேல் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. காவிரியும் கொள்ளிடமும் கரைபுரண்டு ஓடின. ஆனால், தமிழகப் பொதுப்பணித்துறையின் அலட்சியத்தாலும், மணல்கொள்ளையர்களின் தகிடுதத்தங்களாலும் காவிரியின் தலைமடை, இடைமடை, கடைமடை என டெல்டா பகுதி முழுமையுமே ஏரிகள், கால்வாய்கள், குளங்களுக்குத் தண்ணீர் சென்று சேரவில்லை. குறிப்பாக, கடைமடைப் பகுதிகளின் நிலை கொடுமையிலும் கொடுமையே!

‘கால்வாய்கள் புதர் மண்டிக்கிடக்கின்றன; மதகுகள் மண்ணோடு மண்ணாகிவிட்டன; மணல்கொள்ளை காரணமாக, முக்கொம்பு அணை உடைந்துவிட்டது’ என்கிற பிரச்னைகள் ஒருபுறமிருக்க, மணல் கொள்ளையை இன்னும் சில மாதங்கள் வரை நீட்டிப்பதற்கு வசதியாகக் கிராமப்புறங்களின் கால்வாய் மற்றும் குளங்களுக்குத் தண்ணீரைத் திறந்துவிடாத கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது.

பொதுப்பணித்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதைப்பற்றியெல்லாம் யோசித்ததாகவே தெரியவில்லை. கூடவே இருக்கும் மந்திரி பிரதானிகளோ, ‘கண்திருஷ்டியால்தான் அணை உடைந்தது; எடப்பாடியின் ஆட்சியைப் பார்த்து இயற்கையே பயப்படுகிறது; எடப்பாடிக்குத் தண்ணீர் ராசி’ என்றெல்லாம் சொல்லிக் கோமாளிக்கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த வறட்சியின் மூலம் விவசாயிகளின் வயிற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களின் வயிற்றிலும் அடி விழுந்திருக்கிறது என்பதுதான் உண்மை!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick