தென்னை விவசாயிகளுக்குக் கைகொடுங்கள்! | Let us help Gaja affected farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

தென்னை விவசாயிகளுக்குக் கைகொடுங்கள்!

அறிவிப்பு

ஜா புயல் புரட்டிப்போட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வாசகர்கள் பங்களிப்போடு விகடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளுக்குக் களத்தில் நின்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன விகடன் குழு. சாய்ந்து கிடக்கும் குருத்துகளைக் காப்பாற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஓரளவு சரியாக உள்ள மரங்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள் குறித்த இரண்டு கருத்தரங்குகள் அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன.

வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றக்கூட முடியாமல் முடங்கிக் கிடக்கிற சிறு குறு விவசாயிகளுக்குக் கரம் கொடுக்கும் திட்டமொன்றை உருவாக்கியுள்ளது விகடன் குழு. பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆண்டிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நிலத்தில் மரங்களை அகற்றி, மீண்டும் தென்னங் கன்றுகளை நடவு செய்து தரும் பணி நடைபெற்று வருகிறது.

தோட்டத்தைச் சுத்தம் செய்யும்போது விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டிச் சேகரிப்பது, தோட்டத்தின் ஒரு பகுதியில் குழி எடுத்து மட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை அதில் போட்டு உரமாக மாற்றுவது, போதுமான இடைவெளியில் குழி எடுத்து கன்றுகளை நடவு செய்து தருவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு ஆகப் பெரிய உதவியொன்று தேவைப்படுகிறது. சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை விற்பனை செய்யும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். பல விவசாயிகள் தென்னை மரங்களைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இந்த இக்கட்டான சூழலில் நம் விவசாயச் சொந்தங்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

ஆட்டுப் பண்ணை, குடில்கள், மாட்டுக் கொட்டகை, வீடு, கட்டடம் போன்ற தேவைகளுக்காகத் தென்னை மரங்கள் தேவைப் படுவோர் இவர்களுக்குக் கைக் கொடுக்கலம். வியாபாரிகளும் இந்த மரங்களை விலைக்கு வாங்கி உதவலாம். உங்கள் உதவி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் வாழ்வில் சிறு நம்பிக்கையை ஏற்படுத்தட்டும்.

தென்னை மரங்களை வாங்க விரும்புவோர்,  தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 99406 51073.

- விகடன் குழு