பாரம்பர்யம்
பாரம்பர்ய உணவு குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால்... பலரும் பாரம்பர்ய அரிசி வகைகள், எண்ணெய் வகைகள் எனத் தேடிப்பிடித்து வாங்கத் துவங்கி இருக்கிறார்கள். சமீப காலங்களில் மரச்செக்கு மூலம் உற்பத்தி செய்யும் எண்ணெய்க்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால், விவசாயிகள் பலரும் தற்போது மரச்செக்குகள் அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள பைங்கிணர் கிராமத்தைச் சேர்ந்த கோபால், மரச்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார்.
ஒரு முற்பகல் நேரத்தில் எண்ணெய் தயாரிப்புப் பணியில் மும்முரமாக இருந்த கோபாலைச் சந்தித்தோம். “முன்னாடி எங்க பகுதியில மரச்செக்குகள் அதிகமா இருந்தது. விவசாயிகளே எள், கடலைனு கொண்டு வந்து எண்ணெய் ஆட்டி வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குவாங்க. பாக்கெட் எண்ணெய் வர ஆரம்பிச்சதும் மரச்செக்குகள் ஒழிஞ்சு போச்சு. மரசெக்குகள் அழிஞ்சதுக்கு ரோட்டரி செக்குகள் வந்ததும் ஒரு காரணம். ஏன்னா, ரோட்டரி செக்குகள்ல எண்ணெய் ஆட்டுறதுக்கான செலவு குறைவு. இப்படிப் பல காரணங்களால மரச்செக்குகள் அழிஞ்சு போச்சு. இப்போ இயற்கை பத்தின விழிப்பு உணர்வு அதிகரிக்கிறதால, மரச்செக்கு எண்ணெய்க்குத் திரும்பவும் மவுசு அதிகரிச்சுருக்கு. அப்பா விவசாயம்தான் செஞ்சுட்டுருந்தார். மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. அப்பாவுக்கப்புறம் நான் விவசாயத்துக்கு வந்தேன். அதுல நிறைய நஷ்டம். அப்புறம் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஆரம்பிச்சேன். அடுத்து பொண்ணு படிப்புக்காகச் சென்னைக்குப் போயிட்டோம். அங்க நிறைய இடங்கள்ல வேலை பார்த்தேன். பொண்ணு படிப்பு முடிஞ்சு, இங்கே வந்ததுக்கப்புறம் ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சுட்டுருந்தேன்.