ரூ. 3,40,000... அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச்சம்பா... விதைநெல்லுக்கு நல்ல விலை! | Profitable Organic Attur Kichili Samba Rice yielding - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

ரூ. 3,40,000... அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச்சம்பா... விதைநெல்லுக்கு நல்ல விலை!

மகசூல்

“படிப்பு முடிந்து வேலைக்காகச் சென்னைக்குக் குடியேறின பிறகு எப்போவாவதுதான் சொந்த ஊருக்கு வருவேன். அதுக்கப்புறம் தொடர்ச்சியா அஞ்சு நாள்கூடச் சொந்த ஊர்ல தங்கினதில்லை. இப்போ என்னைக் கிராமத்து வாழ்க்கைக்குத் திருப்பி நிரந்தரமா சொந்த ஊர்லயே தங்க வெச்சுடுச்சு, பசுமை விகடன்” என்று சிலாகித்துச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்.  சென்னையில் மென்பொருள் துறையில் இருந்த ஆனந்தராஜ், குடும்பத்தோடு சொந்த ஊர் திரும்பி இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். பட்டுக்கோட்டை அருகில் உள்ள மேட்டுவயல் எனும் கிராமத்தில்தான் இருக்கிறது, ஆனந்தராஜின் நெல் வயல். நாலரை ஏக்கர் பரப்பில் செழிப்பாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா ரக நெல் பயிர்.

“விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எனக்கு விவசாயத்தில் பெரியளவு ஆர்வம் இல்லை. எம்.சி.ஏ படிப்பை முடிச்சுட்டு சென்னையில வேலைக்குச் சேர்ந்தேன். அதுக்கப்புறம் நண்பர்கூடச் சேர்ந்து சொந்தமா ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் ஆரம்பித்து நல்லபடியா நடத்திட்டிருந்தோம். ஒருநாள் நண்பர்களோடு பேசிட்டிருக்கறப்போ, ஒவ்வொரு துறை பத்தியும் பேச்சு வந்தது. அப்போது, விவசாயம் பத்தி பேசுனப்போ, ‘விவசாயத்தில் சொல்லிக்கிற மாதிரி பெரிய ஆள்களே இல்லை போலயே’னு நான் கேட்டேன். அப்போதான், ஒரு நண்பர், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் பத்திச் சொல்லிட்டுப் ‘பசுமை விகடன் புத்தகத்தைப் படி. அதுல விவசாயத்தில் ஜெயிச்சவங்களைப் பத்தித் தொடர்ந்து எழுதுறாங்க’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் ‘பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கிப் படித்தேன். நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிச்சுப்போகவும் அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அப்புறம்தான் விவசாயத்துலயும் சாதிக்க முடியும்னு எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து படிக்கப்படிக்க இயற்கை விவசாயத்துலயும் பாரம்பர்ய நெல் ரகங்கள் மேலேயும் ஆர்வம் அதிகமானது.