மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்! | Manpuzhu mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

விட்டக்குறை, தொட்டக்குறைப்போல, இருளர்கள் சம்பந்தமான தகவல், பொங்கல் அன்னிக்கும் கிடைச்சது. அதாவது, வேடந்தாங்கல் பகுதியில இருந்த நண்பரோட தோட்டத்துக்குப் போனவுடனே, எனக்கு இளநீர் கொடுத்து உபசரிக்க நினைச்சாங்க. காலையில வெறும் வயித்துல இளநீரைக் குடிச்சா, வயிற்றுப்புண் வந்து அல்சர் உருவாகிடும், அதனால, தேங்காயை வெட்டிக்கொடுங்க சந்தோஷமா சாப்பிடுறேன்னு சொன்னேன். அவங்க தோட்டத்துல இருந்த தென்னை மரத்துக்கு அரை நூற்றாண்டு வயசு இருக்கும். நெடு நெடுன்னு வளர்ந்து நின்னுருந்திச்சி.

தோட்டத்துல வேலை செய்ற ஆளைக் கூப்பிட்டு, தேங்காய் வெட்டச் சொன்னாங்க. ‘‘ஐயா, எனக்கு இந்த மரத்துல ஏறுன்னா, கையும் காலும் உதறுது. நம்ம வேலி ஓரத்துல இருளருங்க எலிப் பிடிச்சிக்கிட்டிருக்காங்க, அவங்களைக் கூப்பிட்டு, மரம் ஏறச்சொல்லலாம்’’னு யோசனை சொன்னாரு. சரின்னு சொன்னவுடனே, ஒரு விசில் அடிச்சாரு, ரெண்டு இளைஞர்கள், ஒரு முதியவர்னு மூணு பேர் வந்தாங்க.

ஓர் இளைஞரைத் தென்னை மரத்துல ஏறச்சொன்னாங்க, வந்த வேகத்துல, அந்த இளைஞர் மரத்துல மடமடன்னு ஏறி, தேங்காயைப் பறிச்சிப்போட்டாரு. சில நிமிடத்துல, சுவையான தேங்காயை வெட்டி சாப்பிடறதுக்கு எல்லாருக்கும் கொடுத்தாங்க. அவங்க வேலை செய்யுற திறனைப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருந்துச்சி. திறமையா வேலை செய்யத் தெரிஞ்சிருக்கிறதால, சுத்துப்பட்டுக் கிராமத்துல விவசாய வேலைன்னா, இருளர்களைத்தான் அழைக்கிறதா சொன்னாங்க. நெல் அரவை இயந்திரம் புழக்கத்துல வராத, அந்தக் காலத்துல உரல்லதான் நெல்குத்தி, அரிசி ஆக்குவாங்க. அப்படி நெல் குத்துற வேலைக்கு இருளர்களைத்தான் அழைப்பாங்களாம்.