ஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி... கைக்கொடுக்கும் பாரம்பர்ய விவசாய முறை! | Traditional single seed planting of Kuthiraivali rice - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

ஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி... கைக்கொடுக்கும் பாரம்பர்ய விவசாய முறை!

பாரம்பர்யம்

விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் பயிர்களில் சிறுதானியங்களும் முக்கியமானவை. தொடர்ந்து சிறுதானியங்களை விடாமல் பயிர் செய்து பாரம்பர்யத்தைக் காத்து வரும் விவசாயிகளும் உண்டு. அவர்களில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருஞானச்சம்பந்தனும் ஒருவர்.

உடுமலைப்பேட்டை வட்டம், செல்லப்பம் பாளையம் கிராமத்தில் இருக்கும் நிலத்தில் தனது மனைவி திருமுருகஞானாம்பாளுடன் சேர்ந்து... அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த குதிரைவாலி, காராமணி ஆகியவற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் இருந்த திருஞானச்சம்பந்தனைச் சந்தித்தோம்.

“நாங்க ரெண்டு பேரும் பொறந்து வளர்ந்த ஊர் இதுதான். எங்களுக்குச் சொந்தமா 7 ஏக்கர் பாசன பூமி இருக்கு. ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். இப்போ பத்து வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். எங்க குடும்பத்துல எல்லோரும் பசுமைவிகடன் வாசகர்கள். முதல் புத்தகத்துல இருந்து வாங்கிட்டுருக்கோம். அதைப்படிச்சு எங்களுக்குத் தேவையான விஷயங்களை எங்க வயல்ல செயல்படுத்திடுவோம். பசுமை விகடன்ல வர்ற ‘பசுமைச் சந்தை’ பகுதி மூலமா எங்களுக்குத் தேவையான பாரம்பர்ய விதைகளை வரவழைச்சுக்கிறோம். எங்களோட விளைபொருள்களையும் அதுமூலமாத்தான் விற்பனை செய்றோம். அப்படி போன வருஷம் ஒருத்தர்கிட்ட இருந்து குதிரைவாலி விதையை வாங்கினேன்” என்ற திருஞானச்சம்பந்தன், தான் சாகுபடி செய்த முறையைச் சொல்ல ஆரம்பித்தார்.