தக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கர்...தினமும் ரூ. 3,000 வருமானம்! | Profitable multi crop cultivation near Tiruppur - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

தக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கர்...தினமும் ரூ. 3,000 வருமானம்!

மகசூல்

‘பலபயிர்ச் சாகுபடி மற்றும் நேரடி விற்பனை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தால்தான் விவசாயம் லாபகரமாக இருக்கும்’ என்று பல ஆண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறார்கள், விவசாய வல்லுநர்கள். அவற்றைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் மேற்கோள்ளும் விவசாயிகள் பலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள கெருடமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்முத்து. இவர் தன் மனைவி கோமதியுடன் இணைந்து இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து நேரடி விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

கண்களுக்கு எட்டும் தூரம் வரை விரிந்து கிடக்கும் பொட்டல்காடு. ஆங்காங்கே மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் காற்றாலைகள். அவற்றுக்கிடையே பசுமை போர்த்தினாற்போலக் காட்சியளிக்கிறது, பொன்முத்துவின் காய்கறித்தோட்டம்.  நாம் சென்ற சமயத்தில், பொன்முத்து, கோமதி ஆகிய இருவரும் அறுவடைப் பணியில் மும்முரமாக இருந்தனர். ‘ராத்திரி ஏழு மணிக்கு மெட்ராஸ் பஸ்ல ஏத்தி அனுப்பணும். காயைப் பறிச்சுட்டு வந்துடுறோம்’ என்று சொல்லி நம்மைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தார், பொன்முத்து. வேலைகளை முடித்துவிட்டு வந்த பொன்முத்து, தனது இயற்கை விவசாயம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.  “கிட்டத்தட்ட நாப்பது வருஷமா எங்க பகுதியில ‘பெல்லாரி’ (பெரிய வெங்காயம்) சாகுபடிதான் பிரதானம். பெல்லாரி போட்டு ஒரே போகத்துல லட்சாதிபதியான விவசாயிகள்கூட உண்டு. ஆள்பற்றாக்குறை, வறட்சினு பல காரணங்களால காலப்போக்குல பெல்லாரிச் சாகுபடி குறைஞ்சு போச்சு. நிறைய விவசாயிகள் தென்னைக்கு மாறிட்டாங்க. ஆனா, நாங்க விடாம பெல்லாரிச் சாகுபடி செஞ்சுட்டுருக்கோம்.