தித்திப்பான வருமானம் தரும் செங்கரும்பு! - 1 ஏக்கர்... 9 மாதங்கள்... ரூ. 1,50,000 லாபம்!

மகசூல்

பொங்கல் கரும்பு எனப்படும் செங்கரும்பைத் தலைமுறை தலைமுறையாகச் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இன்றும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். மதுரை மாவட்டம், மேலூர் தாலூகாவில் இருக்கும் தனியாமங்கலம், நாவினிப்பட்டி, சரளைப்பட்டி, மாங்குளம் ஆகிய கிராமங்கள் செங்கரும்புச் சாகுபடிக்கு பெயர் பெற்றவையாக இருக்கின்றன. அதிகமாகக் கரும்பு விளைவிக்கப்பட்டதால், ‘நாவினிக்கும் பட்டி’ என்று பெயர் பெற்றுக் காலப்போக்கில் ‘நாவினிப்பட்டி’ ஆகிவிட்டது எனச் சொல்கிறார்கள். தற்போது தனியாமங்கலம் கிராமத்தில் அதிகளவு பொங்கல் கரும்புச் சாகுபடி செய்யப்படுகிறது.

மேலூர்-திருச்சி புறவழிச்சாலையில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருக்கிறது, கீழவளவு. இங்கிருந்து வலது பக்கம் திரும்பும் தார் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது தனியாமங்கலம். ஆற்றுப் பாசனம், கிணற்றுப் பாசனம் எனப் பாசன வசதி இருப்பதால், இன்னமும் விவசாயம் உயிர்ப்போடு இருக்கிறது. நெல், வாழை, கரும்பு என எங்கு பார்த்தாலும் பசுமை பட்டாடை விரித்திருக்கிறது. நெல் அறுவடையில் முனைப்பாக இருந்தனர், பெரும்பாலான விவசாயிகள். ஊருக்குப் பொதுவான களத்தில் நெல்லைக் காயவைத்துக் கொண்டிருந்தனர் பெண்கள். இப்படிப் பரபரப்பாக விவசாய வேலைகள் நடந்து கொண்டிருந்த ஒரு முற்பகல் வேளையில் ஊருக்குள் நுழைந்தோம்.

அக்கிராமத்தின் ‘முன்னோடி கரும்பு விவசாயி’ குமாரைச் சந்தித்தோம். நம்மை வரவேற்ற குமார், தனது கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். சாலையை ஒட்டிய தோட்டம். வைகை-பெரியாறு பாசன வாய்க்கால் தண்ணீர் இன்றி வறண்டுபோய்க் கிடந்தது. ஆனாலும், கிணற்றுப்பாசனம் மூலம் செழித்து வளர்ந்திருந்த கரும்புகள், நட்டு வைத்த வேல்கம்புகள்போலக் கம்பீரமாக நின்று நம்மை வரவேற்றன. பொதுவாகக் கரும்புக்காட்டில் உள்ளே நுழைந்தால் ஆளைக் கண்டுபிடிக்க முடியாது என்பார்கள். ஆனால், இங்கு கரும்புகள் தூர்தூராகக் கட்டி வைக்கப்பட்டு, தோகை கழிக்கப்பட்டுச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. அறுவடைக்குத் தயாராக நின்றுகொண்டிருந்த கரும்புகளை வாஞ்சையோடு தடவிக்கொடுத்தபடியே பேசினார், குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick