நடப்பு
Published:Updated:

திறமைசாலிகளுக்கு வேலை... எப்போதும் இல்லை கவலை!

திறமைசாலிகளுக்கு வேலை...  எப்போதும் இல்லை கவலை!
பிரீமியம் ஸ்டோரி
News
திறமைசாலிகளுக்கு வேலை... எப்போதும் இல்லை கவலை!

சோ.கார்த்திகேயன்

ந்திய ஐ.டி நிறுவனங்களில் ஊழியர்கள் கொத்துக் கொத்தாக வேலையைவிட்டு நீக்கப்படுகிறார்கள் என்கிற கூப்பாடு ஒருபக்கம், முன்பைவிட அதிக அளவில் ஆள்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற அறிவிப்பு இன்னொரு பக்கம் என பரபரப்பாக இருக்கிறது இந்திய ஐ.டி துறை. இந்திய ஐ.டி துறை உயிர்ப்புடனும், எந்தவிதமான சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகவும் இருப்பதாக சொல்லியிருக்கிறார் டாடா குழும நிறுவனங்களின் தலைவரும், டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ-வுமான என்.சந்திரசேகரன்.

இந்த நிலையில், இந்திய ஐ.டி நிறுவனங்களில் என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி, இந்திய ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பின் இந்தியத் துணைத் தலைவர் விஸ்வநாதனுடன் பேசினோம்.

திறமைசாலிகளுக்கு வேலை...  எப்போதும் இல்லை கவலை!

``பாட்டம் பெர்ஃபாமன்ஸ் பிரச்னை’ என்றால் என்ன?’’

“இந்திய  தகவல் தொழில் நுட்பத் துறையில் ஆள்குறைப்பு நடைபெறவில்லை என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஐ.டி துறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5% முதல் 2% வரை, பெர்ஃபாமன்ஸ் இல்லாத ஊழியர்களை நீக்குவது இயல்பானது. அதேசமயம், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு லட்சம் பேர், புதிதாக வேலைக்கு எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

திறமைசாலிகளுக்கு வேலை...  எப்போதும் இல்லை கவலை!



ஐ.டி துறையில் ஒவ்வோர் ஆண்டின் மார்ச் - ஏப்ரலில் `அப்ரைசல்’ இருக்கும். இதில் மோசமான பெர்ஃபாமன்ஸ் கொண்டவர்களுக்குச் சம்பள உயர்வு குறைவாக இருக்கும் அல்லது சம்பள உயர்வே இருக்காது. இதைத்தான் `பாட்டம் பெர்ஃபாமன்ஸ்’ என்கிறோம். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே பிரச்னை உருவாகியுள்ளது. இவர்களைத்தான் ஆள் குறைப்பு என்கிற பெயரில் வெளியே அனுப்புகிறார்கள். இப்போது, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 38 லட்சம் பேர் ஐ.டி துறையில் பணியாற்றுகிறார்கள். இந்த வருடம் இதன் எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிக்கும். வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் பேர் குறைக்கப் படுவார்கள். இந்த ஆண்டு 50 ஆயிரமாக அதிகரிக்கலாம். ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், எந்தவொரு மாற்றமும் இல்லை. ஐ.டி துறையில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்ற விவரத்தை, நாஸ்காம் அமைப்பு, வரும் ஜூலையில் வெளியிட இருக்கிறது. அதில் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கும்.’’

``யார் யார் அனுப்பப்படுகிறார்கள்?’’

``ஐ.டி துறையில் எந்தெந்தப் பிரிவுகளில் ஆள்குறைப்பு நடைபெறுகின்றன என்பதை, நிறுவனங்கள் வெளியே அறிவிக்காது. ஒவ்வொரு நிறுவனத்திலும் இது மாறுபடலாம். அடிப்படையில் யாருக்குத் திறமை குறைவாக இருக்கிறதோ, யாரெல்லாம் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே ஆபத்து. இப்போது படித்து முடித்து பணியில் சேரும் பலரும் ஐ.டி துறைக்குத் தேவையான திறமையுடன் தயாராக இருக்கிறார்கள். இந்தத் தகுதியுடன் வருபவர்களை, நிறுவனங்கள் உடனே தேர்வுசெய்து, பயிற்சியளித்து பணியில் அமர்த்திவிடுகின்றன.

`ஐ.டி துறையில் இந்த ஆண்டு மூன்று லட்சம் பேர் வரை வேலை இழக்கும் அபாயம்’ என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது தவறு. ஐ.டி துறையில் டெக்னாலஜி மற்றும் மார்க்கெட் மாற்றமடைந்து வருகின்றன. டிஜிட்டல் டெக்னாலஜிஸ், சோஷியல் மீடியா, மல்டி மீடியா, மொபைல், க்ளவுட் என டெக்னாலஜியைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இப்போது, இந்த டெக்னாலஜிகளைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்குச் சொல்லித் தரப்படுகிறது. எதிலும் தேராத சில ஊழியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுகிறார்கள்.’’

திறமைசாலிகளுக்கு வேலை...  எப்போதும் இல்லை கவலை!

``பணியாளர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?’’

``ஐ.டி இண்டஸ்ட்ரி மிக வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்துக்கேற்ப, திறமையான நபர்களை நிறுவனங்கள் தேடி வருகின்றன. ஐ.டி பணியாளர்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.டி துறையில் மீண்டும் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகலாம். தற்போது ஐ.டி பணியாளர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை இழந்தாலும், தன் திறமையை வளர்த்துக்கொண்டு வேறு ஒரு நிறுவனத்தில் உடனடியாகச் சேர்ந்துகொள்ளலாம். ஐ.டி பணியாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள, பல இன்ஸ்டிட்யூட்கள் உள்ளன. தற்காலிகமாக வேறொரு நிறுவனத்தில் இடம் மாறிக்கொள்ளலாம்; சொந்தமாக நிறுவனங்கள் நடத்தலாம்; ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சேர்ந்துகொள்ளலாம். திறமையுள்ளவர்களுக்கு, ஐ.டி துறையில் மட்டுமின்றி உற்பத்தி, டெக்ஸ்டைல், ரீடெய்ல் என மற்ற துறைகளிலும் தேவை இருக்கிறது.’’

``ஹெச்1பி விசா பற்றி..?’’

திறமைசாலிகளுக்கு வேலை...  எப்போதும் இல்லை கவலை!



``ஐ.டி துறையில் ஆள் குறைப்புக்கும் ட்ரம்ப் பாலிசி மற்றும் ஹெச்1பி விசா போன்றவற்றுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஏனெனில், அமெரிக்கா ஒவ்வோர் ஆண்டும் 84 ஆயிரம் ஹெச்1பி விசாக்களை வழங்குகிறது. இதில் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப் படுகின்றன. மீதமுள்ள 64 ஆயிரம் விசாக்கள் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இதில் 44 ஆயிரம் விசாக்கள் இந்தியாவுக்குத்தான் கிடைக்கின்றன. ஆகையால், ஹெச்1பி விசாவில் எந்தப் பிரச்னையும் இல்லை. அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் சட்ட விரோதமான குடியேற்றம் அதிக அளவில் நடைபெறுகிறது. இருப்பினும் திறமையான பணியாளர்கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால், அமெரிக்காவில் இந்தியர்கள் வெகுவாக வரவேற்கப்படுகின்றனர். இந்தியர்களின் திறமையை, அமெரிக்க நிறுவனங்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்கின்றன.

உலகில், ஐ.டி துறையில் என்னவெல்லாம் அவுட்சோர்ஸிங் செய்கிறார்களோ, அவற்றில் கிட்டத்தட்ட 57% வரை இந்தியாவுக்குத்தான் கிடைக்கிறது. இது குறையவே குறையாது. இனிவரும் நாள்களிலும் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும். இந்தியாவின் ஐ.டி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 60% அமெரிக்காவில் இருந்தும், 24% ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கிடைக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து அவுட்சோர்ஸிங் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 10% வரை கிடைக்கிறது. மற்ற நாடுகளிலிருந்தும் 6% என்கிற அளவில் அவுட்சோர்ஸிங் கிடைக்கிறது. அமெரிக்கா செய்யும் அவுட்சோர்ஸிங்கில் 55 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவுக்கு வருகிறது. இது அதிகம் ஆகுமே தவிர, குறைய வாய்ப்பில்லை. ஏனெனில், டிஜிட்டல் திறன் என்பது, உலகில் எங்குமே இல்லாத அளவில் இந்தியாவில்தான் மிகுந்திருக்கிறது. உலகில் வேறு எங்குமே இந்த அளவுக்குத்  திறமையான நிபுணர்கள் இல்லை. ட்ரம்ப் பாலிசி முடிவுகளால் இந்திய ஐ.டி துறைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.’’

திறமைசாலிகளுக்கு வேலை...  எப்போதும் இல்லை கவலை!

``இந்தியாவில் இனி ஐ.டி எப்படியிருக்கும்?’’

``ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது, ஒருசில தடுமாற்றங்கள் இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது. அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இந்திய ஐ.டி துறை மிகச் சிறப்பாக இருக்கும். இந்தியாவில் ஐ.டி துறையின் வளர்ச்சி 8 - 9% வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஐ.டி துறை, ஒவ்வோர் ஆண்டும் 12 பில்லியன் டாலர் அதாவது 78,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துவருகிறது. இந்த ஆண்டும் இதே அளவில் ஏற்றுமதி நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.’’

``எந்தத் துறையில் வேலைவாய்ப்பு?’’

``ஐ.டி துறையில் டிஜிட்டல் டெக்னாலஜிஸில்  வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சோஷியல் மீடியா, க்ளவுட் டெக்னாலஜிஸ், ஆட்டோமேஷன், எம்படெட் இன்ஜினீயரிங், அனாலிஸ்டிக் எனப் பலதரப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இன்றைய தேதியில் டேட்டா அனாலிஸ்டிக் துறையில் மட்டும் 35,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், திறமையை வளர்த்துக்கொண்டால், நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெறலாம்” என்றார் விஸ்வநாதன்.

ஐடி ஊழியர்களே...

மாற்றம் என்ற ஒன்றே மாறாதது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மாறிவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற்றிக்கொள்பவர்கள் ஜெயிக்கலாம்.