
டி.எல்.அருணாச்சலம், இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
யாருக்கும் வரக்கூடாத பெரும் துயரம் சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு வந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளும் கஷ்டப்பட்டு எழுப்பிய அந்த நிறுவனத்தின் முக்கியமான அடையாளம், இன்று தீக்கு இரையாகி, கருகிக் கிடக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் லட்சங்களிலோ, கோடிகளிலோ முதலீடு செய்து வணிகம் செய்யும்போது சந்திக்கும் சோதனைகள் பலப்பல. தொழிலில் போட்டி, பலவாறான லைசென்ஸ்கள், அனுமதிகள், போலீஸ், வருவாய் துறை போன்றோரின் கெடுபிடிகள் போன்றவற்றைத் தாண்டித் தீ விபத்து, புயல், வெள்ளம் முதலான இயற்கை சீற்றம் போன்ற எதிர்பாராத சில நிகழ்வுகளையும் சமாளிப்பது மிகவும் கடினமே.
அப்படி சேதங்கள் நிகழும்போது தாங்களாகவோ அல்லது அவர்கள் வங்கிகள் மூலமாகவோ எடுத்துள்ள இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டுமே அவர்களுக்கு உதவக்கூடும். ‘ஃபயர் இன்ஷுரன்ஸ்’ எனப்படும் தீ விபத்துக்குண்டான பாலிசி, கடைக்காரர்கள் மிகவும் அவசியம் எடுக்க வேண்டிய ஒன்று. இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் இதை ‘ஸ்டாண்டர்ட் ஃபயர் இன்ஷூரன்ஸ் அண்ட் ஸ்பெஷல் பாலிசி’ என்று குறிப்பிடுவார்கள்.

ஏன் எடுக்க வேண்டும் இந்த இன்ஷூரன்ஸை?
தொழிலில் முதலீடாக சொந்த மூலதனமோ, வங்கிக் கடனோ போட்டு நடத்தும்போது, விபத்தினால் பொருள் சேதம் அடையும்போது, கடைக்கு இன்ஷூரன்ஸ் இல்லாமலோ அல்லது போதிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்காமலோ போனால், பெரும் நஷ்டம் ஏற்படும். இழப்பு நடந்தால் தொழிலில் பாதிப்பு உண்டாகி, பிழைப்பே சந்தேகம் ஆகிவிடும். எனவே, சரியான தொகை மற்றும் சரியான கவரேஜ் கொண்டே இன்ஷூரன்ஸ் என்பதே தொழிலின் ஆதாரமான தேவை.
என்னென்ன விஷயங்கள் கவர் ஆகும்?

எந்த வர்த்தக நிறுவனமாக இருந்தாலும் இந்த இன்ஷூரன்ஸ் எடுத்தால், கட்டடம், கடையிலுள்ள இருப்பு, இன்டீரியர் வேலைகள், மின் உபகரணங்கள், வயர்கள், லைட் ஃபிட்டிங்குகள், ஜெனரேட்டர், சென்ட்ரல் ஏர் கண்டிஷன் இயந்திரம் மற்றும் இதர இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு கவரேஜ் இருக்க வேண்டும். இருப்பைக் கொள்முதல் விலையிலும், மற்றவற்றை புதியதாகக் கட்ட மற்றும் தருவிக்க வேண்டியதற்கு உண்டான மதிப்பிலும் இன்ஷூரன்ஸ் செய்யலாம்.
கடை வியாபாரிகள் பேக்கேஜ் பாலிசி எனப்படும் எல்லாக் காப்பீட்டுத் தேவைகளையும் ஒரே பாலிசியில் வருமாறு காப்பீடு செய்வது நல்லது. வழக்கமாக, அவர்கள் வங்கிக் கடன் வாங்கியிருந்தால், வங்கியே தீ, கொள்ளை மற்றும் களவுக்கானக் காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொடுத்துவிடும்.
தீ விபத்துக்குண்டான பாலிசியில் தீ, வெடிக்கும் விபத்து, இடி, மின்னல், கலவரம், வேலைநிறுத்தம், பூகம்பம், புயல், சூறைக்காற்று, வெள்ளம் போன்றவற்றுக்கு கவரேஜ் கிடைக்கும். தீவிரவாதத் தாக்குதலினால் ஏற்படும் சேதத்துக்கும் காப்பீடு உண்டு.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
முதலில் எவ்வளவு மதிப்புக்கு பாலிசி எடுக்கிறோம் என்பது முக்கியம். வர்த்தக நிறுவனங்கள் சார்பில் வங்கிகள் பாலிசி எடுத்தால், வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன் அளவுக்கு மட்டுமே பாலிசி எடுக்கும். அதே கட்டடத்தில் இருக்கும் கடைக்குச் சொந்தமான வங்கிக் கடன் அல்லாத அசையும் அல்லது அசையாத சொத்துகளை யாரும் காப்பீடு செய்வதில்லை. இதனால் க்ளெய்ம் செய்யும் தொகை குறையும். பாலிசி எடுப்பவருக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் உள்ள எல்லாச் சொத்துகளும் பாலிசியில் கவர் செய்யப்பட வேண்டும் அடுத்து, கடையில் உள்ள சரக்கு முழுவதும் கவர் செய்யப்பட வேண்டும். ஒரு சில கடைக்காரர்கள் பிரீமியம் குறைய வேண்டும் என்பதற்காகப் பாதிச் சரக்கு மதிப்புக்கு மட்டுமே பாலிசி எடுப்பார்கள். இதனால், கணக்கில் காண்பிக்காமல் உள்ள சரக்குக்கு நிச்சயம் க்ளெய்ம் கிடைக்காது. விபத்து ஏற்பட்ட பின், சேதத்தை மதிப்பிட இன்ஷூரன்ஸ் சர்வேயர் வருவார். கடை தொடர்பான கணக்குப் புத்தகங்கள், டேலி (Tally) போன்ற மென்பொருள் மூலம் கிடைக்கும் ஸ்டேட்மென்ட், ஆடிட்டர் மூலம் வரி செலுத்த காண்பித்த சரக்குத் தொகை, வங்கிக்கு மாதா மாதம் கொடுத்து வரும் சரக்கு இருப்புப் பட்டியல், வங்கி அதிகாரிகள் விசிட் செய்தபோது எடுத்த கணக்கு இருப்பு குறித்த விவரங்கள் போன்ற தஸ்தாவேஜுகளைத்தான் க்ளெய்ம் செய்யும்போது இன்ஷூரன்ஸ் சர்வேயர் எடுத்துக்கொள்வார். மேலும், பாலிசியில் தரப்பட்டுள்ள சரக்கு மற்றும் சொத்துகளின் விவரங்கள் பிழையில்லாமல் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். பல பாலிசிகளில் மின் பொருள்கள், ஃபால்ஸ் சீலிங், மரத்தினால் செய்த வேலைப்பாடுகள் முற்றிலும் விடப்பட்டோ அல்லது பிழையாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் கிடைக்க வேண்டிய சரியான இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போகலாம்.
ஃபயர் இன்ஷூரன்ஸ் எனப்படும் தீ விபத்துக்கு உண்டான பாலிசியில் பல ஆட் ஆன் (add-on) கவரேஜ்கள் கிடைக்கும். உதாரணமாக, சேதம் அடைந்த கட்டடம் இடிந்து விழுந்தபின், அதையும் அதிலிருந்து சேதமடைந்த சரக்குகளையும் அகற்ற ஆகும் செலவு (Debris Removal) என்ற பெயரில் உள்ள ‘ஆட் ஆன் கவராக இன்ஷூரன்ஸ் பாலிசி’யில் கிடைக்கும். அதை பாலிசி எடுக்கும்போதே சேர்த்து எடுக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?
ஃபயர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பொருள்கள் மற்றும் அசைய சொத்துக்களுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும். தீ விபத்து தவிர, திருடு மற்றும் கொள்ளையினால் ஏற்படும் இழப்புக்குத் தனியாக ‘பர்குலரி பாலிசி’ இருக்கிறது. கடையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு தனியாக எடுக்கலாம்.
இதேபோல, நமது கட்டடத்தினாலோ அல்லது நமது வியாபாரத்தினாலோ பிறருக்குக் காயம், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் நிகழ்ந்தால், நஷ்ட ஈட்டுக்காக சிவில் சட்ட நடவடிக்கை நம் மீது பாய வாய்ப்புள்ளது. நம் கட்டடம் பக்கத்துக் கடையின் மீது இடிந்து விழவோ, நம் கடையிலிருந்து தீ பரவி அடுத்த கடையைச் சேதப்படுத்தவோ, நம் கடையில் இருந்து பக்கத்துக்குக் கடைக்கருகில் வசிக்கும் மக்களுக்கோ மாசு ஏற்படவோ செய்யலாம். அப்படி நடந்தால் மூன்றாம் நபர்கள், நம் மீது எடுக்கும் சிவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வதற்கான வழக்கறிஞர் செலவு மற்றும் நஷ்ட ஈடு போன்றவற்றை கவர் செய்யத் தனியாக லயபிலிட்டி (Liability) பாலிசி உள்ளது.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கும்?
இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், நம்முடைய பொருள்களை நாம் ஜாக்கிரதையாகப் பாதுகாப்போம் அல்லவா? இன்ஷூரன்ஸ் எடுத்த பின்பும் நாம் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எதிர்பார்க்கும். கடைச் சரக்கு இருப்புக் கணக்கு குறித்த விவரங்களை ஒழுங்கான முறையில் வைத்திருப்பது அவசியம். சரியாக இயங்கும் வகையில் தீயணைப்பு உபகரணங்களைப் பொருத்தி இருக்க வேண்டும். தீயை அணைக்கும் கருவிகள் இருப்பதோடு, அப்படி நெருப்பு பிடித்தால் வரும் புகையை மோப்பம் பிடித்து ‘ஓ’வென்று அலறி ஊரைக் கூட்டும் ஆட்டோமேட்டிக் ஸ்மோக் டிடெக்டர், தானியங்கி நீர் பாய்ச்சும் கருவியான ஸ்ப்ரின்க்லெர் போன்றவற்றைப் பொருத்தி இருந்தால் நல்லது.
கட்டணம் எவ்வளவு?
இந்திய இன்ஷூரன்ஸ் சந்தையில் கட்டண முறை கைவிடப்பட்டபின், பாலிசிக் கட்டணம் மிகவும் குறைந்துள்ளது. வியாபாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இன்ஷூரன்ஸை எடுப்பது இப்போது மிகவும் சுலபம். பிரீமியக் கட்டணமும் மிகக் குறைவுதான்.
ஃபயர் இன்ஷூரன்ஸ் பிரீமியக் கட்டணம் 1,000 ரூபாய்க்கு 0.50 பைசாவிலிருந்து ரூ.1.50 வரை ஆகும். இது ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறுபடும். இந்த பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுகி நேரடியாகவும், ஏஜென்ட், பேங்க், இன்ஷூரன்ஸ் புரோக்கர்கள் ஆகியோர் மூலமாகவும் எடுக்கலாம். இன்ஷூரன்ஸ் புரோக்கர்கள் மூலம் எடுக்கும்போது, பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பிரீமியம் கட்டணம் மற்றும் கவரேஜ் விவரங்களை நம்மால் சுலபமாக அறிய முடியும்.
சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ‘இன்று நீ, நாளை நானா?’ என்பதே. டெல்லி உபஹார் சினிமா, மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதத் தாக்குதல், இப்போது தி.நகரில் சென்னை சில்க்ஸ். சென்ற பல வருடங்களாக நம் கடைக்கு ஒன்றுமே ஆகவில்லை என்பதால், இன்றோ, நாளையோ அடுத்த வாரமோ, ஒன்றும் ஆகிவிடாது என்கிற உத்தரவாதத்தை யாருமே தர முடியாது.
எனவே, பிசினஸ் செய்வோர் உடனே தேவையான அளவுக்குக் காப்பீடு எடுப்பது அவசியம். காப்பீடு ஒன்றே நம் தொழிலுக்குக் கவசம் என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கையில் நாம் கலங்கி நிற்க தேவையில்லை!
படங்கள்: வி.ஸ்ரீனிவாசலு, கே.ஜெரோம்
லாப இழப்பினை ஈடுகட்டவும் இன்ஷூரன்ஸ் பாலிசி!
தீ விபத்தோ, வெள்ளமோ ஏற்பட்டு, சில பல நாள்கள் தொழிலோ, வியாபாரமோ முற்றிலும் நடக்காமல் இருந்தால், அந்த நாள்களில் நடந்திருக்க வேண்டிய வியாபாரத்தின் லாபத்தை ஈடு செய்ய லாப இழப்பு (Loss of profit) என்ற பாலிசி ஒன்று உள்ளது. இது நிறைய வணிகர்களுக்கோ, தொழில் முனைவோர்களுக்கோ தெரியாத விஷயம். தெரிந்த சிலருக்கும் புரியாத விஷயம். அப்படி புரிந்தவர்களும் கண்டுகொள்ளாத பாலிசி இது. இப்போது நடந்த சம்பவத்தினால் ஓரிரு மாதங்கள் வியாபாரம் நடக்காமல் இருந்தால், அந்த லாப இழப்பை ஈடு செய்யலாம். அந்தச் சமயத்தில் வேறு இடத்தில் சிறிது காலம் வாடகையில் கடை நடத்தினால், அந்த வாடகை போன்ற செலவுகளையும் ஈடு செய்துகொள்ளலாம்.
சட்ட விரோதச் செயலுக்கு இன்ஷூரன்ஸ் இல்லை!
சட்ட விரோதமான எந்த நடவடிக்கைகளுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. எடுத்தாலும் க்ளெய்ம் கிடைக்காது. இன்ஷூரன்ஸ் என்பது ஒரு கான்ட்ராக்ட், அதாவது ஒரு ஒப்பந்தம். இந்திய கான்ட்ராக்ட் சட்டத்தின்படி, சட்ட விரோதச் செயல் செய்ய எந்தவொரு ஒப்பந்தமும் யாரும் செய்ய முடியாது. செய்தாலும் சட்டப்படி அது செல்லாது.