நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித் பிசினஸ் என்ட்ரி

அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித்  பிசினஸ் என்ட்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித் பிசினஸ் என்ட்ரி

அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித் பிசினஸ் என்ட்ரி

ன்னும் 23 வயதுகூட முடியவில்லை. இதற்குள் சிகே’ஸ் பேக்கரி (CK’S Bakery) என்கிற பெயரில் ஒரு பிசினஸைத் தொடங்கி, 52 அவுட்லெட்டுகளைத் திறந்து, தூள் கிளப்பி வருகிறார் மனு ரஞ்சித். இவர் வேறு யாருமல்ல, ‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதனின் மகன். வீடு, ஆபீஸ், அவுட்லெட்டுகள் என பிசியாகச் சுற்றிக்கொண்டிருந்த அவரை நாம் சந்தித்தோம். தனது பிசினஸ் ‘என்ட்ரி’ பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டோம். தெளிவாகப் பதில் சொன்னார் அவர்.

அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித்  பிசினஸ் என்ட்ரி

‘‘உங்கள் கல்லூரிப் படிப்பு எப்படி?’’

‘‘ப்ளஸ் டூ படித்து முடித்தவுடன், அமெரிக்காவுக்குச் சென்று மாஸ் கம்யூனிகேஷன் படித்தேன். இந்தப் படிப்பைப் படிக்கிறபோதே பிசினஸில் இறங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் அதிகமானது. பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்குள் ஆரம்பத்தில் இல்லை. 13 முதல் 16 வயது வரைக்கும் ஒரு கிரிக்கெட்டர் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், 16 வயதுக்குப் பின் படிப்படியாக அதன் மீதான விருப்பம் குறைந்தது. அதன்பிறகு என் அப்பாவின் ஃபேனாக மாறினேன். பெரிய பின்னணி எதுவும் இல்லாமல் தனியொரு மனிதனாகச் சாதாரணமான வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்குப் பலரும் கண்டுவியக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்த்து, அவரை ஃபாலோ செய்ய ஆரம்பித்தேன். அவரைப்போல ஆகவேண்டும் என்று நினைத்தேன். இன்றைக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால், எதுவுமே இல்லாமல் அவர் சாதித்ததுபோல, நானும் சாதிக்க வேண்டும். வாழ்க்கையில் எல்லாமே எளிதில் கிடைத்துவிட்டால், எந்தச் சவாலும் இருக்காது. எனக்கான வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க முடிவெடுத்துத்தான் இங்கு வந்தேன் என்று நினைக்கிறேன்.’’

‘‘உங்கள் பிசினஸுக்கான புரோட்டோடைப் அமெரிக்காவில் கிடைத்ததா?’

‘‘ஆமாம். எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால், எனக்குப் பலவகையான உணவுகளைச் சாப்பிடப் பிடிக்கும். நான் ஒரு ‘குட் டேஸ்ட்டர்.’ என்னுடைய டேஸ்ட் ஒரு பாப்புலர் டேஸ்ட் என்பதால், எனக்குப் பிடிக்கிற உணவுகள் பலருக்கும் பிடிக்கும். எனவே, எனக்கான பிசினஸ் என்றால் அது உணவு சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அமெரிக்காவில் ‘சிப்போட்லே’ (Chipotle) என்று ஒரு ஃபாஸ்ட்புட் உணவகம் இருக்கிறது. பொதுவாக, ஃபாஸ்ட்புட் என்றாலே, அது நம் வயிற்றுக்கு ஒத்துவராது என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், ‘சிப்போட்லே’-வில் முழுக்க இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசி, காய்கறிகளைக்கொண்டே பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுவதால், சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கும். இது மாதிரி உணவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். சென்னையில் சைனீஸ், கொரியன், யூரோப்பியன் எனப் பல வகையான ரெஸ்டாரென்ட்களைத் திறந்தாலும், அத்தனை  உணவகங்களுக்கும் வரவேற்பு இருக்கவே செய்கிறது. எனவே, அது மாதிரியான ஒரு உணவகத்தைத் திறக்க நினைத்தேன். ஆனால், இதற்கான முதலீடு கொஞ்சம் அதிகம். எடுத்த எடுப்பிலேயே பெரிய முதலீடாக இல்லாமல், கொஞ்சம் சிறிய முதலீட்டில் ஒரு பிசினஸ் தொடங்க நினைத்தபோதுதான், பேக்கிங் பிசினஸ் பற்றிய ஐடியா வந்தது. என் அப்பாவுக்கும் ஒரு நல்ல பேக்கரியைத் தொடங்க வேண்டும் என்று  நீண்ட நாள் ஆசை. எனவே, உடனே களத்தில் இறங்கி, ஆராய்ந்தோம். எல்லாம் கச்சிதமாக வரும் என்று பட்டது. சிகே’ஸ் பேக்கரியைத்  தொடங்கிவிட்டேன்.

அது மட்டுமல்ல, நான் ஆரம்பிக்கும் தொழில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சில யோசனைகளைச் சொன்னார் என் அப்பா. உதாரணமாக, யாரும் எளிதில் தொடங்க முடியாதபடி ‘என்ட்ரி பேரியர்’ கொண்ட ஒரு பிசினஸைத் தொடங்க வேண்டும் என்பார். ஒரு ஹோட்டலைத் தொடங்கினால், அதே மாதிரியான இன்னொரு ஹோட்டலை எளிதில் தொடங்கிவிட முடியும். பேக்கரியை அப்படித் தொடங்கிவிட முடியாது. ஆனால், எல்லோரும்போல ஒரு சாதாரண பேக்கரி ஷாப் என்கிற மாதிரி இல்லாமல், அதைக் கொஞ்சம் வித்தியாசமாக ‘ஸ்ட்ரக்சர்’ செய்தோம்.’’

‘‘எப்படிச் செய்தீர்கள்?’’

‘‘எல்லோரும் வாங்கக்கூடிய விலையில், தரமான தயாரிப்பு’ என்பதே என் அப்பாவின் தாரக மந்திரம். அதையே நானும் அடிப்படையாக வைத்துக்கொண்டேன். நடுத்தர வர்க்கத்தையே நான் டார்கெட் செய்தேன். ஒரு முறை என் பேக்கரிக்கு வந்தால் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று நினைத்தேன். என் பேக்கரியானது வெறும் ‘பர்த்டே கேக்’ செய்து தருகிற ஒன்றாக  மட்டும் இருக்கக்கூடாது. ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று, நான்கு முறையாவது என் பேக்கரிக்கு வந்துபோகிற மாதிரி இருக்க வேண்டும். அப்படி வருகிற கஸ்டமர்களுக்கு அவர்களின் கண்முன்பே சுடச்சுட, பிரெஷ்ஷாக சாண்ட்விச் தயாரித்துத் தர நினைத்தேன். அப்படி சாப்பிட வரும்போது அவர்கள் அதை ரசித்துச் சாப்பிடுகிற மாதிரியான ஒரு சூழலை ஏற்படுத்தித் தந்தேன். பொதுவாக, நான் தொடங்கும் அவுட்லெட்டுகள் பரபரப்பான சாலையிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி, அமைதியாக இருக்குமிடத்தில்தான் இருக்கும். இதனால் வாடகைச் செலவு குறையும். சாப்பிட வருபவர் களும் வண்டியை நிம்மதியாக பார்க் செய்துவிட்டு, ஒன்றுக்குப் பதிலாக இரண்டாகச் சாப்பிட்டுவிட்டுப் போவார்கள்.’’

‘‘பிசினஸ் ஆரம்பித்த முதல் மாதம் தொடங்கியே லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள். எப்படி இது சாத்தியமானது?’’


‘‘சரியான விலையை நிர்ணயம் செய்தது முதல் காரணம். மூலப்பொருளை என்ன விலைக்கு வாங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு எவ்வளவு உணவைத் தயார் செய்வது, எவ்வளவுக்கு விற்பனை ஆகும், அதில் நம் லாபம் எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற ‘வொர்க்கிங்’கை எல்லாம் ஒன்றுக்குப் பலமுறை போட்டுப் பார்த்துவிட்டுத்தான் விலையை நிர்ணயித்தோம். அது ‘க்ளிக்’ ஆனது.

இந்த ‘வொர்க்கிங்’கை எல்லாம் துல்லியமாகப் போடுவதற்கு நான் எம்.பி.ஏ. படித்ததில்லை. எல்லாம் அப்பா சொல்லித் தந்தது. வீட்டில் சாப்பிட்டு முடித்துவிட்டு, பல விஷயங்களைப் பேசிக்கொள்ளும்  சமயத்தில் பிசினஸ் பற்றிய பல்வேறு கான்செப்ட்டுகள் பற்றி அவர் எங்களுக்கு நிறையச் சொல்லித் தருவார். அந்த அடிப்படையில்  என் பிசினஸை அமைத்துக் கொண்டதால்தான், ஆரம்பத்தி லேயே லாபம் வந்தது. எடுத்த எடுப்பிலேயே லாபம் வந்ததை என் அப்பாகூட நம்பவில்லை. அவரது நம்பிக்கைக்கு உரிய சிலரை வைத்துக் கணக்கு பார்த்தபின்பே ஏற்றுக் கொண்டார்.’’

‘‘உங்கள் அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியப் பாடம் என்ன?’’


‘‘பிசினஸில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும்கூட என் அப்பாதான் எனக்கு ரோல் மாடல்.  ‘‘பிசினஸில் எந்தக் காலத்திலும் குறுக்கு வழியைப் பின்பற்றக்கூடாது’’ என்று அவர் சொல்வார். குறுக்கு வழியில் போவதினால், உடனடியாக வெற்றி கிடைக்கும். ஆனால், அந்த வெற்றி நிலைத்து நிற்காது என்பார். நிதானமான வளர்ச்சி இருந்தாலும் அது நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கிறது.

இது மட்டுமல்ல, ஒரு தொழில் நிறுவனத்தை நடத்த வேண்டும் எனில், எப்படிப்பட்ட நபர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டும், பிசினஸை எப்படி விரிவாக்கம் செய்ய வேண்டும், நிறுவனத்தின் மதிப்பினை எப்படித் தொடர்ந்து  உயர்த்த வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் சொன்ன பல விஷயங்கள் எனக்கு பிசினஸ்  பாடங்கள். இதன் அடிப்படையில் என் பிசினஸை நடத்தி வருவதால்தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் 52 அவுட்லெட்டுகளைத் திறக்க முடிந்திருக்கிறது.’’

‘‘எதிர்காலம் திட்டம் பற்றி..?’’

‘‘சிகே’ஸ் பேக்கரியைச் சென்னை தவிர, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகு, தென் இந்திய நகரங்களிலும் தொடங்க  வேண்டும். ஒன்றிரண்டு ஆண்டுகளில் இதைச் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த ஆண்டுக்குள் 100 அவுட்லெட்டுகளைத் திறக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு.

ஆரம்பத்தில் நான் போட்ட முதலீட்டைத் தவிர்த்து, வங்கிக் கடன் மூலமாகவே இந்த பிசினஸை நடத்தி வருகிறேன். வென்சர் கேப்பிட்டல் முதலீட்டைப் பெறுகிற எண்ணமெல்லாம் இப்போது இல்லை.’’

‘‘இன்றைய இளைஞர்கள் பிசினஸில் ஈடுபட என்ன செய்ய வேண்டும்?’’

‘‘இன்றைய இளைஞர்கள் பிசினஸில் ஈடுபட வேண்டும் எனில், பெற்றோர்களும் சுற்றி இருப்பவர்களும் அதைப் பற்றி நிறையப் பேச வேண்டும். ‘பிசினஸ் உனக்குச் சரிவராது; அதைச் செய் தால் காணாமல் போய் விடுவாய்’ என்றெல்லாம் அவர்களைப் பயமுறுத்தக் கூடாது. இப்படித் தொடர்ந்து பலரும் சொன்னால், ‘நம்மால் பிசினஸில் ஜெயிக்க முடி யாது’ என்கிற எண்ணம் வந்துவிடும். ரிஸ்க்கே எடுக்க முடியாத ஒரு நிலை உருவாகிவிடும்.

ரிஸ்க் எடுப்பதற்குக் குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோர்கள் பழக்க வேண்டும். ‘பேராசைப்படாதே, இருப்பதை வைத்துத் திருப்திப்படு’ என்று சொல்வதைவிட, ‘பெரிதாக யோசி’ என்று சொல்ல வேண்டும். பெரிதாக யோசித்தால்தான் நீங்கள் பெரிதாகச் செயல்பட முடியும். அப்போது உங்களை அறியாமலே உங்களுக்குள் இருக்கும் சக்தி வெளிப்படும். அதே சமயம், இளைஞர்களும் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். விரும்பியதை எல்லாம் செய்ய நினைக்காமல், எது சரியாக இருக்கும் என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.’’

 பேட்டி முடிவதற்குள் மனுவின் செல்போனில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கவே, அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

படங்கள்: கே.ராஜசேகரன், பா.காளிமுத்து

அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித்  பிசினஸ் என்ட்ரி

ஆடியோ புக்ஸ் என் சாய்ஸ்

‘‘முன்பெல்லாம் நிறைய டிவி பார்ப்பேன். ஸ்போர்ட்ஸ் சானல்கள்தான் என் சாய்ஸ். இப்போதுதான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதிலும் ஆடியோ புத்தகங்கள்தான் என் சாய்ஸ். மேனேஜ்மென்ட் தொடர்பான பல நல்ல புத்தகங்கள் ஆடியோவில் கிடைக்கின்றன. அந்தப் புத்தகங்களை அடிக்கடி கேட்பதால், நிர்வாகம் குறித்த என்னுடைய அறிவினை விஸ்தாரமாக்கிக் கொள்ள முடிகிறது!’’

அப்பாதான் என் ரோல் மாடல்! - ‘கவின்கேர்’ சி.கே.ஆர் மகன் மனு ரஞ்சித்  பிசினஸ் என்ட்ரி

சிகே’ஸ் பேக்கரி ஸ்பெஷல்!

சிகே’ஸ் பேக்கரியின் ஸ்பெஷல் என்றால் அது பனினிதான். பனினி (Panini) என்பது இத்தாலியன் பிரெட். இதில் வெஜ் மற்றும் நான் வெஜ்ஜைச் சேர்த்து சாண்ட்விச் செய்து சாப்பிட்டால் திரும்பத் திரும்ப சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுமாம்! முன்பு நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே கிடைத்த இந்த பனினியை இப்போது எல்லோரும் சாப்பிடுகிற மாதிரி ஆக்கியிருக்கிறார் மனு ரஞ்சித்.