நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?

இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?

ஞா. சக்திவேல் முருகன்

முன்பு வங்கிகளில் நேரடியாக வாங்கிய கல்விக் கடனை இனி ஆன்லைன் மூலம் வாங்குவதற்குத் தேவையான வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது மத்திய அரசு. ‘வித்யாலட்சுமி’ (www.vidyalakshmi.co.in) என்ற இணையதளத்தின் மூலம்  அனைத்து தேசிய வங்கிகளையும் ஒருங்கிணைத்து, ஒன்றைச் சாளர முறையில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து தந்திருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். பல்வேறு வங்கிகளின் கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தையும் டவுன் லோடு செய்யும் வசதியும் இருக்கிறது. தற்போது இதில் 40 வங்கிகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது.

இந்தத் தளத்தில் கல்விக் கடன் வேண்டுபவர்கள், தங்களின் விவரங்கள் குறித்த தகவல்களை அளித்துப் பதிவுசெய்ய வேண்டும். அப்படிப் பதிவு செய்யப்பட்டது, செயல்பாட்டுக்கான இணைப்புடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பை க்ளிக் செய்து செயல்பாட்டு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?

கல்விக் கடன் விண்ணப்பமானது, ஏழு பகுதிகளைக் கொண்டது. முதலில் மாணவர் குறித்த விவரங்களை வழங்க வேண்டும். இத்துடன் பெற்றோர் குறித்த விவரங்களையும் (ரூ. 7.5 லட்சத்துக்கு அதிகமாகக் கடன் பெறுபவர்கள்) உங்கள் கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள் குறித்த விவரங்களையும் வழங்க வேண்டும். இதே பகுதியில், பான் கார்டு தகவல், ஆதார் கார்டு எண் போன்ற விவரங்களையும் வழங்க வேண்டும். மேலும், நீங்கள் எந்த வங்கியில் உங்களது சேமிப்புக் கணக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவதாக, வங்கியில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால், அந்தத் தகவல்களைக் குறிப்பிட வேண்டும். மூன்றாவதாக, படிப்பு குறித்த விவரங்களைப் பதிவிட வேண்டும். எந்தக் கல்வி நிறுவனம், எந்தப் பாடப்பிரிவு, எந்த மாதத்தில் படிப்பு தொடங்குகிறது போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

நான்காவதாக, எதற்காகக் கல்விக் கடன் தேவை என்பதையும், கட்டணத்தையும் தெரிவிக்க வேண்டும். கட்டணங்கள் முறையே படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகம், கம்ப்யூட்டர் மற்றும் இதர கருவிகள் வாங்கினால் அதற்கான விவரங்கள், விடுதிக்கான கட்டணங்கள், போக்குவரத்துக் கட்டணம் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.

இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?ஐந்தாவதாக, கல்லூரிக் கட்டணத்தில் எவ்வளவு தொகை செலுத்த முடியும் என்ற விவரத்தையும், வங்கியிலிருந்து எவ்வளவு கடன் எதிர்பார்க்கிறீர்கள் என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும். நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன்பெற நினைப்பவர்கள், கடனுக்கு உத்தரவாதமாக என்னென்ன சொத்து விவரங்களை வழங்க இருக்கிறீர்கள், உங்களுக்கான நிதி வாய்ப்புகள், சொத்துவிவரங்கள் போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

ஆறாவதாக, கல்விக் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவீர்கள் என்கிற விவரத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது, ஒவ்வொரு தவணையிலும் உங்களால் எவ்வளவு தொகையைத் திருப்பிச் செலுத்த முடியும் என்ற விவரத்தை வழங்க வேண்டும்.

ஏழாவதாக, உங்களுடைய மதிப்பெண் சான்றிதழை ஸ்கேன் செய்து இணைப்பதோடு, கல்லூரிச் சேர்க்கைக்கான கடிதத்தையும் இணைக்க வேண்டும். கல்லூரியில் எப்போது, எவ்வளவு பணத்தைச் செலுத்த வேண்டும் என்பதையும், மாணவர் மற்றும் பெற்றோரின் வருமான விவரத்தையும் குறிப்பிட வேண்டும். பெற்றோர் மாதந்திரச் சம்பளம் பெறுபவராக இருந்தால், சம்பளச் சான்று, வருமான வரித் தாக்கல் போன்ற விவரங்களோடு, சொத்து பற்றிய விவரங்களையும் வழங்க வேண்டும்.

இந்த விவரங்கள் இணையத்தில் சேமிக்கப் பட்டுவிடும். அதன்பிறகு, கடன் பெற விருப்பம் உள்ள மூன்று வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ. 7.5 லட்சத்துக்குக் குறைவாகக் கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, 15 நாள்களுக்குள் தகவலும், ரூ. 7.5 லட்சத்துக்கு அதிகமாகக் கடன் வேண்டுபவர்களுக்கு 30 நாள்களுக்குள்ளும் தகவல் வழங்கப்படும்.

கல்விக் கடன் பெற நினைக்கிறவர்கள் இந்த இணையதளத்தின் உதவியை நாடலாமே!