நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா?

நாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி  ஸ்டாக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி ஸ்டாக்கா?

வ.நாகப்பன்

“ஒரு லட்சம் ஷேர் வாங்கிருக்கேன்” என்றார் மதன், ஒரு பங்கின் பெயரைக் குறிப்பிட்டு. கொஞ்சம் அசந்துதான் போனேன். வங்கியில் வேலை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் மதன். அவரது கையிருப்பு சேமிப்பினைக் கொண்டு ஒரு லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறாரா என்று யோசித்தேன். இதுவரை, அந்தப் பங்கு பற்றிக் கொஞ்சம்கூட நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒருவேளை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்காக இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்டேன்.

“இல்லப்பா, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குதான்’’  என இணையதளத்தில் போட்டுக் காட்டினார். ‘‘அந்த நிறுவனம் எந்தத் துறையில் இருக்கிறது?’’ எனக் கேட்டேன். ‘‘தெரியாது’’ என்றார். ‘‘அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எப்படி, லாப நஷ்டங்கள் எப்படி, புரமோட்டர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் எப்படி எனத் தெரியுமா’’ எனக் கேட்டேன்.

நாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி  ஸ்டாக்கா?

“அட போப்பா... ஒன்றையணா பங்குக்கு இவ்வளவு வெவரம் கேக்கறதெல்லாம் டூ மச்” என்றார். “யாரோ எஸ்.எம்.எஸ்-ல் ஃபார்வர்டு பண்ணாங்க. வெறும் பத்து பைசாதான் பங்கின் விலை. பத்து பைசா கொடுத்து வாங்கறதுக்கு இவ்வளவு யோசிக்கணுமா என்ன...” என்றார் கொஞ்சம் அலட்சியமாகவே.

இப்போது புரிந்தது அவர் ஏன், எப்படி ஒரு லட்சம் பங்குகளை வாங்க முடிந்தது என்று. மொத்தமாகவே பத்தாயிரம் ரூபாய்க்கு லட்சம் பங்குகள் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிட்டார்போல.

“அது சரிப்பா; விலை ஏறணுமே. பணம் உன்னோடதுதான். ஆனா, கஷ்டப்பட்டு சம்பாதிச்சது இல்லையா...” என்றேன்.

அவர் கொஞ்சம்கூட அசரவில்லை. “ஏம்பா. இருபது பைசாவுக்குப் போனாக்கூட என் முதலீடு இரண்டு மடங்காகிவிடுமல்லவா...” என்று என்னை மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேட்டார். “நீ சொல்கிற மாதிரி விலை ஏறினால் சந்தோஷம்தான்.  ஒருவேளை அதற்கு நேர்மாறாக அந்தப் பங்கின் விலை ஐந்து பைசா குறைந்தால், உன் முதலீட்டின் மதிப்பு பாதியாகக் குறைந்துவிடுமே’’ என்றேன்.

“போப்பா... சும்மா நெகட்டிவா திங்க் பண்ணக்கூடாது” என்றபடி டீ ஆர்டர் செய்தார். “உங்களைப்போல, எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க” எனக் கேட்கத் தோன்றியது. நான் சந்திக்கும் முதலீட்டாளர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்குமுன்,  ரூ.10,000 முதலீடு செய்ய வேண்டும் என என்னை அணுகிய முதலீட்டாளர் ஒருவரிடம் எம்.ஆர்.எஃப் பங்குகளை வாங்குமாறு பரிந்துரை செய்தேன். அப்போது ரூ.5,000-க்கும் குறைவாக வர்த்தகமானது அந்தப் பங்கு. உடனே அவர், “சார், நான் அவ்வளவு பணக்காரனெல்லாம் கெடையாது. அதிக விலை உள்ள பங்குகளாகச் சொல்லாதீர்கள். பத்து ரூபாய்க்குள் ஏதாவது ஒரு பங்கைச் சொல்லுங்கள். ஆயிரம் பங்குகளாவது வாங்கிப் போட்ட திருப்தி இருக்கும்” என்றார்.

நாகப்பன் பக்கங்கள்: பென்னி ஸ்டாக்கா, ஃபன்னி  ஸ்டாக்கா?


ஒரே ஒரு எம்.ஆர்.எஃப் பங்காவது வாங்குங்க என்ற என் ஆலோசனை அவரிடம் எடுபடவில்லை. ஏற்கெனவே இவ்வளவு அதிகமாக இருக்கும் ஒரு பங்கு, இதற்கு மேல் எவ்வளவு ஏறப்போகிறது என்பது அவர் கணிப்பு. அப்படி அவர் வாங்கிய பிர்லா பவர், இன்று பத்தில் ஒரு பங்காகக் குறைந்து முதலீடு கரைந்தே போய்விட்டது.

அதேசமயம், அன்று ரூ.5,000-ஆக இருந்த எம்.ஆர்.எஃப் பங்கு இன்று அதைவிட 13  மடங்குக்கு மேல் அதிகரித்து, சுமார் 1,000 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்துள்ளது. இவ்வளவும் ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே.

இதுமாதிரி எல்லாப் பங்குகளும் விலை  அதிகரிக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. பெரிய பங்குகளிலும் சில தவறாகப் போகலாம். ஆனால், பொதுவாக பென்னி ஸ்டாக்குகள் பற்றிய தவறான புரிதல் நம்மில் பெரும்பாலோருக்கு இருப்பதையே சொல்ல வருகிறேன்.

ஒரு பங்கின் உண்மையான மதிப்புக்கும்  சந்தை விலைக்கும் இருக்கும் தொடர்பே நம் முதலீட்டைத் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் ரூ.10,000 மதிப்புள்ள பங்கு இன்று ரூ.5,000-க்குக் கிடைக்கிறது என்றால், அதில் முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம், பத்துப் பைசாகூடப் பெறாத பங்குகள், சந்தையில் இருபது பைசாவுக்கு வர்த்தகமாகிறது என்றால், அதைக் கண்டிப்பாகப் புறந்தள்ள வேண்டும்.

சந்தை அதிகரித்திருக்கும் சூழலில், இன்று அன்றாடம்  எஸ்.எம்.எஸ் மூலமாக இலவசமாக வரும் பென்னி ஸ்டாக் பரிந்துரைகளைப் புறந் தள்ளுங்கள். உங்கள் மூலதனத்தைப் பறிக்க இருக்கும் இவர்களிடமிருந்து உங்கள் சேமிப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது என்பதை நினைவில்கொள்ளுங்கள். திருடர்கள் உஷார்!