
ஜெ.சரவணன்
ஐ.டி.எஃப்.சி லிமிடெட் -ன் கீழ் வரும் நிறுவனமான ஐ.டி.எஃப்.சி பேங்க், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழும நிறுவனத்தை வாங்கவிருக்கிறது. இதற்காக இரு நிறுவனங்களும் முறைப்படியான பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளன. ஸ்ரீராம் குழுமம், அதன் நிறுவனர் ஆர்.தியாகராஜனால் தொடங்கப்பட்டது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தியாகராஜன், தனது நண்பர்களுடன் சேர்ந்து முதலில் ஸ்ரீராம் சிட் ஃபண்ட் நிறுவனத்தைத்தான் தொடங்கினார். சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி காணவே, அடுத்து ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனமும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனமும் தொடங்கப்பட்டு, அவையும் நல்ல வளர்ச்சியைக் கண்டதால், இந்த இரு நிறுவனங்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. பிறகு, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் துறைகளிலும் நுழைந்த ஸ்ரீராம் நிறுவனம், அவற்றிலும் நல்ல வளர்ச்சி கண்டது.
இன்றைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிர்வகிக்கும் இந்த நிறுவனம், ஐ.டி.எஃப்.சி நிறுவனத்துடன் இணைய முடிவாகியிருக்கிறது. இரு நிறுவனங்களையும் இணைக்கும் பேச்சுவார்த்தை முடிந்தபின், இணைப்புக்கான அனுமதியை ரிசர்வ் வங்கியும், செபியும் வழங்க வேண்டும்.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தபின், இரு நிறுவனங்களும் இணையும்பட்சத்தில், அவ்விரு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு இந்த இணைப்பினால் என்ன லாபம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இணைப்புக்குப் பிறகு இந்த இரு நிறுவனப் பங்குகளின் செயல்பாடு எப்படியிருக்கும், முதலீட்டாளர்கள் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது குறித்து, பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் பேசினோம்.
“ஐ.டி.எஃப்.சி, ஸ்ரீராம் குழுமம் இரண்டும், இணைப்புக்கான வேலைகளில் மும்முரமாக உள்ளன.ஸ்ரீராம் குழுமத்தின் நான்கு நிறுவனங்கள் ஐ.டி.எஃப்.சி-யுடன் இணைகின்றன. இந்த இணைப்பில், ஐ.டி.எஃப்.சி வங்கியுடன் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் இணைக்கப்படுகிறது, ஸ்ரீராம் டிரான்ன்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் தனி நிறுவனமாகவும், பிற ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ஒரு நிறுவனமாகவும் செயல்பட இருக்கின்றன.
தற்போது அதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். எனவே, இந்த இணைப்பில் பலன்களைக் காட்டிலும் சிக்கல்களே அதிகமாக உள்ளன.
மேலும், ஸ்ரீராம் குழுமத்தின் பிசினஸும், ஐ.டி.எஃப்.சி-யின் பிசினஸும் நிதித் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும்கூட அவற்றுக்கிடையே மலையளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், ஸ்ரீராம் நிறுவனத்தின் பிசினஸ் ஒவ்வொன்றிலும் 40 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஐ.டி.எஃப்.சி.க்கு 16 முதல் 17 லட்சம் என்ற அளவில்தான் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அணுகுமுறையிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஸ்ரீராம் நிறுவனத்தின் ஒவ்வொரு வாடிக்கையாளரும், அதன் நிறுவனத்தோடு தனிப்பட்ட உறவு கொண்டிருப்பது போன்ற உணர்வில் இருப்பார்கள். அப்படிப்பட்ட உறவுகளை, வாடிக்கையாளர்களை நேரடியாகப் பார்த்துப் பழகி அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதன் மூலம் உருவாக்கி இருக்கிறது ஸ்ரீராம் நிறுவனம்.

ஆனால், ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் சேவைகள் பெரும்பாலும் ஹைஃபை மக்களுக்கானதாகவே இருக்கின்றன. அதாவது, வாடிக்கையாளர்களுடனான உறவுக்கெல்லாம் அவசியமில்லாதபடி அனைத்தும் இணையம் வழியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முரணான அணுகுமுறையும், இந்த இணைப்பின்போது கவனிக்கவேண்டிய விஷயமாகும். மொத்தத்தில், இந்த இணைப்பில் பல்வேறு நிலையற்ற தன்மைகள் இருப்பதால், இந்த இணைப்பு சரியான இணைப்பு அல்ல என்றே சொல்ல வேண்டும். எனவே, இந்த இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களும் எப்படி ஒன்றிணைந்து செயல்படும் என்று தெரியாது.
ஆனால், இந்த இணைப்புக்குப் பிறகு ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலை வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். ஆனால், ஸ்ரீராம் நிறுவனத்துக்கு இந்த இணைப்பினால் பலனில்லை. சொல்லப் போனால் அவற்றின் பிசினஸும் எப்படி மாறும் என்பது தெரியாது. எனவே, ஐ.டி.எஃப்.சி-க்கு ஸ்ரீராம் நிறுவன பிசினஸின் பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த இணைப்புக்குப் பிறகு ஐ.டி.எஃப்.சி நிறுவனப் பங்கில் வேண்டுமானால் நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சி இருக்கலாம். குறுகிய காலத்தில் இந்தப் பங்கில் பெரிய அளவில் ஏற்றங்கள் இருக்காது.
இந்த இணைப்பு குறித்த செய்தி வந்தபோது ஐ.டி.எஃப்.சி பங்குகள் சற்று ஏற்றம்கண்டு, மீண்டும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. எனவே, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வேண்டுமானால் இந்தப் பங்கைக் கவனிக்கலாம். குறுகிய காலத்துக்கு முதலீடு செய்பவர்கள் இதற்குப் பதிலாக வேறு நல்ல பங்குகளைக் கவனிக்கலாம்” என்று கூறினார்.
தேடிவந்த முதலீடுகள்
ஸ்ரீராம் கேப்பிட்டலின் 20 சதவிகிதப் பங்குகளைச் சில ஆண்டுகளுக்குமுன் வாங்கினார் பிரமில் குழும நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமில். தென் ஆப்பிரிக்கா நிறுவனம் சன்லேம், ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனத்தின் 26 சதவிகிதப் பங்குகளை வாங்கியது. இந்த நிறுவனங்கள் தவிர, பல்வேறு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள், கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.7,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தன. கடந்த காலத்தில் அஜய் பிரமிலும், பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களும் செய்த முதலீடு இப்போது நல்ல லாபத்தில் இருக்கிறது. ஸ்ரீராம் குழுமம் ஐ.டி.எஃப்.சி நிறுவனத்துடன் இணையும்பட்சத்தில் ஏற்கெனவே முதலீடு செய்த நிறுவனங்கள் தங்கள் முதலீட்டினை விற்று, நல்ல லாபம் பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஸ்ரீராம் - ஐ.டி.எஃப்.சி நிறுவனங்கள் இணையும் பேச்சுவார்த்தை முடிவதற்கு இன்னும் பல வாரங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, முதலீட்டாளர்கள் நல்லதொரு முடிவினை எடுப்பதே சரியாக இருக்கும்.
ஸ்ரீராம் வாடிக்கையாளர்களுக்கு நன்மையே கிடைக்கும்!

“ஐ.டி.எஃப்.சி மற்றும் ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் இணைப்பினால் ஸ்ரீராம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்” என்று சொல்லி இருக்கிறார் ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்தாபகர் ஆர்.தியாகராஜன்.
‘‘பார்ட்னர்ஷிப் என்பதில் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. ஐ.டி.எஃப்.சி நிறுவனம் மட்டுமல்ல, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பல நிறுவனங்களும் பல திட்டங்களை முன்வைத்தன. ஆனால், ஐ.டி.எஃப்.சி-யின் திட்டம் சிறப்பானதாக இருந்ததால், நாங்கள் அது பற்றி பேசத் தொடங்கி இருக்கிறோம். இதன் மூலம் ஸ்ரீராம் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, பல நன்மைகள் கிடைக்கும்.

உதாரணமாக, ஸ்ரீராம் டிரான்ஸ்ட்போர்ட் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்கள் வங்கியில் கணக்குத் தொடங்கி, கிரெடிட் கார்டு பெறுவதுடன், பிற வங்கிகளில் கிடைக்காத பலன்களையும் பெறலாம்’’ என்று மேலும் சொல்லியிருக்கிறார் தியாகராஜன்.
கடந்த காலத்தில் ஒவ்வொரு பிசினஸ் முடிவையும் மிகச் சரியாக எடுத்தவர் தியாகராஜன். இனியும் அவர் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்று நம்புவோமாக!