
சமூக வலைதளங்களில் பகிரக் கூடாத சில விஷயங்கள்!
சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது இன்று சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்கு விஷயங் களுக்காகப் பயன்படுத்தினாலும், ஒரு சில சமயங்களில் வியாபார ரீதியாகவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, உற்பத்தி செய்யப்படும் பொருள்களை எளிதில் விளம்பரப்படுத்தவும், சந்தை தொடர்பாக நிறைய தொடர்புகளைப் பெறவும், சந்தேகங்களைத் தீர்க்கவும் சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன. சமூக வலைதளங்களில் பல நன்மைகள் இருந்தாலும், அவற்றில் நம்மைப் பற்றிய தகவல்களுக்கான பாதுகாப்பு சந்தேகமாகவே இருக்கிறது.

இணையத்தைப் பொறுத்தவரை, ஒரு தகவலை எளிதாக அணுகுவதும், பெறுவதுமே அதன் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றன. எனவே, சமூக வலைதளங்களில் இருக்கும் நம்மைப் பற்றிய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. எனவே, சமூக வலைதளங்களில் பகிரக் கூடாத விஷயங்கள் எவை என்பதை எல்லோரும் தெரிந்துகொள்வது அவசியம்.
தொடர்பு எண்
சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை, உங்கள் மொபைல் எண்கள்தான் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களின் முதல் இலக்கு. பெர்சனல் மொபைல் எண்ணைப் பயன்படுத்துவதால், உங்களுக்குத் தேவையற்ற அழைப்புகள் வரலாம் அல்லது வேறு தளங்களில் பகிரப்படும் வாய்ப்புகள் அதிகமாகலாம். எனவே, உங்கள் பெர்சனல் தொடர்பு எண்ணைச் சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை முடிந்தவரைத் தவிர்க்கலாம்.
புகைப்படங்கள்
பெரும்பாலான சமூக வலைதளங்கள் புகைப்படங்களை மையமாக வைத்தே இருப்ப தால், புகைப்படம் என்பது நம் அடையாளமாக இருக்கிறது. எனவே, புகைப்படங்களை முற்றிலும் புறக்கணிக்க முடிவதில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்படும் வாய்ப்புள்ளதால், தனிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். புகைப்படங்களைப் பாதுகாக்க, சமூக வலைதளங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தலாம்.
இருப்பிடம்
ஒருசிலர் ஃபேஸ்புக்கில் அடிக்கடி அவர்கள் இருக்கும் இடத்தை செக் இன் செய்துகொண்டே இருப்பார்கள். அது முற்றிலும் தவறானது. இதனால் பிறர் நம்மைப் பின்தொடரவும் கண்காணிக்கவும் வாய்ப்புண்டு என்பதால், இருக்கும் இடத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கலாம்.
பணப்பரிமாற்ற விவரங்கள்
கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி எண், பான் கார்டு தகவல்கள், வருமானம் போன்ற விஷயங்கள் சமூக வலைதளத்துக்குத் தேவையில்லாத விஷயங்கள். எனவே, அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். ஏற்கெனவே பகிர்ந்திருந்தால், அவற்றை உடனடியாக நீக்கி விடுங்கள். அந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தனிப்பட்ட தகவல்கள்
உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட தகவல்களை எப்போதும் பகிர்ந்துவிடாதீர்கள். வீட்டில் ஏற்படும் பிரச்னைகளைச் சிலர் அவசரப்பட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவார்கள். அதனால் பல பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உறவுகள் குறித்த ஸ்டேட்டஸ், குழந்தைகளின் தகவல்கள், புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட விஷயங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்ப்பது அவசியம்.
- மு.ராஜேஷ்