நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

அதிரடி ஆஃபர்கள்... ஜியோ மாயாஜாலம்!

அதிரடி ஆஃபர்கள்... ஜியோ மாயாஜாலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிரடி ஆஃபர்கள்... ஜியோ மாயாஜாலம்!

அதிரடி ஆஃபர்கள்... ஜியோ மாயாஜாலம்!

ரூ.1,500 -க்கு ஒரு 4ஜி போன் என்ற ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் அறிவிப்பு, ஆடி ஆஃபர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் சாதிக்கப் போவது மிகப்பெரிய வெற்றி என்கிறார்கள், பிசினஸ் ஜாம்பவான்கள்.    

அதிரடி ஆஃபர்கள்... ஜியோ மாயாஜாலம்!

கச்சா எண்ணெயிலிருந்து தகவல் தொடர்பு...

கடந்த 40 ஆண்டுகளாக ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரக் காரணம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்புதான். ஆனால், கடந்த ஐந்தாறு ஆண்டு களாகவே கச்சா எண்ணெய்க்கான தேவை சர்வதேச அளவில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், கடந்த பல ஆண்டுகளாக 50 டாலருக்குள்ளேயே இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 50 முதல் 60 டாலருக்குள்ளே வர்த்தகமாகும் என்கிற நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பினை மட்டும் நம்பி தொழில் செய்வதைவிட, வேறு தொழில்களைச் செய்ய வேண்டும் எனக் கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வந்தது.  தொலைத் தொடர்பு என்பது இந்தியாவில் வளர்ந்துவரும் துறை என்பதால், அதில் இறங்கி கலக்க நினைத்து, ஜியோ நிறுவனத்தைத் தொடங்கியது. கடந்த ஓராண்டு காலமாக குறைந்த விலையில் இன்டர்நெட் சேவையைத் தந்ததன் மூலம் இந்தியாவின் பெருவாரியான மக்களைச் சென்றடைந்தது. இப்போது குறைந்த விலையில் 4ஜி போன் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள்


தற்போது 12.5 கோடி பேர் ஜியோவின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இலவச அழைப்புகள், 4ஜி டேட்டா, குறைந்த கட்டணத்தில் பிளான்கள் என ஜியோ அறிவித்த அத்தனையும் டெலிகாம் குறிப்பாக, செல்போன் சேவையில் ஹிட் அடித்தன. மிகக் குறுகிய காலத்துக்குள் இந்தியாவின் நம்பர்-1 டெலிகாம்   சேவை நிறுவனமாக ஜியோ மாறியிருக்கிறது. இந்தியாவில் தற்போது 78 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்தினாலும், அவர்களில் 50 கோடி பேர் 2ஜி நெட்வொர்க் கொண்ட சாதாரண மொபைல் போன்தான் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ போன், டெலிகாம் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
 
வட்டியில்லாத பணம்


ரிலையன்ஸ் வெளியிடவிருக்கும் 4ஜி ஸ்மார்ட் போனை இந்தியா முழுக்க சுமார் 12.5 கோடி பேர் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறது ரிலையன்ஸ். ஒரு போனின் விலை ரூ.1,500. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பணமும் திரும்பத் தரப்படும் என்றும் ரிலையன்ஸ் சொல்கிறது. இந்தியா முழுக்க 5 கோடி பேர் இந்த போனை வாங்கினாலே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.7,500 கோடி கிடைக்கும். இதற்கு ஆண்டுக்கு 7% வட்டி என்று வைத்துக் கொண்டாலும், ரிலையன்ஸுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.500 கோடி என மூன்று ஆண்டு களுக்கு ரூ.1,500 கோடி கிடைக்கும். இதை வைத்தே ரிலையன்ஸ் நிறுவனம் பல விஷயங்களைச் செய்துவிடும் என்கிறார்கள் கணிதப்புலிகள்.

ரிலையன்ஸுக்குப் போட்டி

ரிலையன்ஸின் இந்த அறிவிப்பினால் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும், குறைந்த விலையில் போன்களை விற்கும் நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள். ஜியோ 4ஜி போன் அறிவிப்பு வந்தபிறகு ஏர்டெல், ஐடியா நிறுவனங்களின் பங்கு விலை, ஏற்ற இறக்கத்தில் உள்ளன. ரிலையன்ஸுடன் போட்டி போடுவதற்காக மைக்ரோமேக்ஸ் நிறுவனம், குறைந்த விலையில் 4ஜி போன் ஒன்றைத் தயார் செய்து வருகிறது. லாவா நிறுவனம், சுமார் ரூ.3,000 விலையில் 4ஜி போனைத் தயாரிக்கத் தொடங்கி இருக்கிறது. சாம்சங் நிறுவனம் ஆயிரம் ரூபாயில் 4ஜி போனைத் தர முயற்சி செய்து வருகிறது.

எப்போது வரும்?

ரிலையன்ஸின் 4ஜி போன், கூடிய விரைவில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. வாரம் 50 லட்சம் போன்கள் வெளியிடப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த போன் எல்லோருக்கும் கிடைப்பதன் மூலம் பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டமும் நிறைவேறும் என்பதால், மத்திய அரசின் ஆதரவு ரிலையன்ஸுக்கு இருக்கும் என்கிறார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த விலையில் போனை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியதால்தான், இந்தியாவில் செல்போன்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்தது. அப்போது அதனை நடத்திக் காட்டியவர் அனில் அம்பானி. இப்போது குறைந்த விலையில் 4ஜி போன் என்பதை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் தகவல் தொடர்பில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார் முகேஷ் அம்பானி. எப்படிப் பார்த்தாலும் ரிலையன்ஸ் காட்டில் மழைதான்!

- ஆகாஷ்

அதிரடி ஆஃபர்கள்... ஜியோ மாயாஜாலம்!

ஜியோ 4ஜி-யில் என்னென்ன வசதிகள் இருக்கும்?

வா
ய்ஸ் கமாண்ட் மூலம் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவது, இணையத்தில் தேடுவது, ஆபத்து நேரங்களில் SOS மெசேஜ் மூலம் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புவது ஜியோ 4ஜியின்  சிறப்பம்சங்கள். ஜியோ டி.வி உள்ளிட்ட ஜியோவின் அப்ளிகேஷன்கள் ப்ரீ-லோடு செய்யப்பட்டு வருகின்றன.

ஜியோ போனின் ஹார்டுவேர் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இதில் குவால்கோம் நிறுவனத்தின் 205 பிராசஸர்தான் (மொபைல் பிளாட்ஃபார்ம்) பயன்படுத்தப்பட இருப்பதாக அந்த நிறுவனமே சமீபத்தில் அறிவித்தது. இந்த பிராசஸர் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் கீழ் காணும் வசதிகள் இடம்பெறாது. எனவே, ஜியோ போனிலும் இவை இருக்காது.

ஆண்ட்ராய்டு

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் ஜியோ போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இருக்காது. காரணம், குவால்கோம் 205 பிராசஸர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சப்போர்ட் செய்யாது. லினக்ஸ் அல்லது ஃபயர்பாக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மட்டுமே ஜியோ போனில் இருக்கப்போகிறதாம்.

வாட்ஸ்அப்

இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனான வாட்ஸ்அப், ஜியோ போனில் இடம்பெறாது. விண்டோஸ், சிம்பியன் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பழைய மொபைல்களுக்கான சப்போர்ட்டை ஆண்ட்ராய்டு, கடந்த ஜூன் மாத இறுதியோடு நிறுத்தியது. ஜியோ போன், ஸ்மார்ட் போன் என்று சொல்லப்பட்டாலும், ஜியோ போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்பது மிகப் பெரிய குறையே என்கிறார்கள்.

டச் ஸ்க்ரீன்


ஃப்ளாக்‌ஷிப் கில்லர் என்றழைக்கப்படும் அதிக வசதிகளுடன் குறைந்த விலைக்குக் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்தான் தற்போது மொபைல் போன் சந்தையைக் கலக்கி வருகின்றன. இவை பெரும்பாலும் டச் ஸ்க்ரீன் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஜியோ போனில் டச் ஸ்க்ரீன் வசதி கிடையாது. அதோடு பேஸிக் மொபைலில் இருக்கும் பட்டன் கீபோர்டுதான் இதில் இடம்பெறலாம் என்கிறார்கள்.

ஹாட்ஸ்பாட்


பொதுவாக, 4ஜி வசதி இருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஹாட்ஸ்பாட் மூலமாக மற்ற டிவைஸ்களிலும் இணையத்தைப் பயன் படுத்தலாம். ஆனால், ஜியோ போனில் ஹாட்ஸ்பாட் வசதியில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் ஜியோ போன் தவிர்த்து பிற மொபைல்களுடன் ஹாட்ஸ்பாட் மூலமாக இணையத்தைப் பயன்படுத்த முடியாது.

-கருப்பு