
ஸ்பெஷல் நாணயம் ஸ்டோரி
மாணிக்கராஜ், மதுரையைச் சேர்ந்த 29 வயது இளைஞர். சென்னையில் பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். சமீப காலமாக எப்போதும் ஏதாவது பரபரப்பு, டென்ஷனுடனே இருக்கவே, மன அழுத்தத்துக்கு ஆளானார். அவரிடம் பெரிய வேறுபாட்டை உணர்ந்த அவருடைய மனைவி, மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துப் போனார்.

மாணிக்கத்தைப் பரிசோதித்த மருத்துவர், “வேலையில் உள்ள டார்கெட் நெருக்கடிதான் இதற்குக் காரணம்” என்றார். மாணிக்கம் மட்டுமல்ல; இன்று ஏறக்குறைய 80% பேர் டார்கெட் பிரஷரில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நெருக்கடி ஏன் உருவாகிறது..?
மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்குத் தகுந்தாற்போல் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் மாறிவருகின்றன. முன்பு மாதிரி அல்ல, நிறுவனங்கள் தங்களது பணியாளர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கின்றன. இதுவரை மார்க்கெட்டிங் பிரிவில் மட்டும் இருந்த ‘டார்கெட் செட்டிங்’, இப்போது மற்ற பிரிவுத் தொழில்களிலும் வந்துவிட்டது. நிறுவனங்கள் நிர்ணயிக்கும் இலக்கை எப்படி எளிதில் அடைவது, டார்கெட் பிரஷரை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து, மனிதவளத் துறை சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். முதலில், லட்சுமி விலாஸ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் (மனித வளம்) மாறனிடம் கேட்டோம்.
``நிறுவனங்கள், இதுவரை லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டன. தற்போது விற்பனையை அதிகரிப்பதுடன், வேலைசெய்யும் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, உள்கட்டமைப்பை அதிகரிப்பது, சேவையை மேம்படுத்துவது எனப் பல்வேறு பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்து, வளர்ச்சியில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகின்றன. இந்த வளர்ச்சியில் ஒவ்வொரு பணியாளரின் பங்களிப்பு என்ன என்பது குறித்து நிறுவனங்கள் ஆர்வத்தோடு கவனிக்கின்றன.

`நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாம் செய்யும் வேலையானது, தோளில் சூட்டிய மாலையா அல்லது கையில் பூட்டப்பட்ட விலங்கா’ என்று பாருங்கள். உங்கள் வேலையை நீங்கள் மாலையாக எடுத்துக்கொண்டால், வேலை செய்வது பெருமையாகவும், மகிழ்ச்சி தரக்கூடிய அளவுக்கு எளிதாகவும் இருக்கும். விலங்காக எடுத்துக்கொண்டால், வேலைக்குச் செல்வதே வேண்டா வெறுப்பாக இருக்கும். உங்கள் வேலையை எப்படிப் பார்ப்பது என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வேலையை மாலையாக எடுத்துக்கொண்டு, ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்யுங்கள். மன அளவில் சிற்சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே டார்கெட் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து விட முடியும்.
டார்கெட் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், முதலில் அதைப் பார்த்து மலைத்துப்போய் நிற்காதீர்கள். அதை முதலில் சின்னச் சின்னதாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் என்னென்ன வேலைகளைச் செய்வது என்று திட்டமிடுங்கள் (Plan). திட்டமிடலுக்குப்பின், எந்த வேலைக்கு முன்னுரிமை தருவது என்று பட்டியலிடுங்கள் (Do list). இவற்றில் அதிக முன்னுரிமை உள்ளவை எவை, குறைந்த முன்னுரிமை உள்ளவை எவை எனப் பிரித்து, அதைத் தினந்தோறும் செய்துவந்தாலே போதும், குறித்த காலத்தில் உங்கள் டார்கெட் நிறைவேறியிருக்கும்.
ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் செய்யும் வேலையைச் சரியாகச் செய்கிறீர்களா, இலக்கை நோக்கி சரியான வேகத்திலும் திசையிலும் செல்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருசிலவேளைகளில் கூடுதலான நேரத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதற்குத் தகுந்தாற்போல் உங்களுடைய பட்டியலில் மாற்றங்களைச் செய்து அடுத்தடுத்த வேலைகளை முடிக்கத் திட்டமிடுங்கள்.

மருந்து விற்பனை செய்யும் ஒருவர், `ஒரு நாளில் 10 மருத்துவர்களைப் பார்க்கவேண்டியிருக்கிறதே’ என நினைத்துச் செயல்பட்டால், அந்த வேலை கடும் சுமையாகவே தெரியும். இதுவே, `நாம் அளிக்கும் மருந்தின் மூலம் நிறைய நோயாளிகள் குணமடைகிறார்கள். நம்மால் அவர்களுக்கு உதவ முடிகிறது’ என்கிற பெருமையுடன் செயல்பட்டால், ஒரு நாளைக்கு 10 மருத்துவர்கள் என்ன, 15 மருத்துவர்களைக்கூட சந்திக்கத் தயங்க மாட்டார்.
நிர்வாகம் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வேலையில் கலந்தும் கரைந்தும் மூழ்கிவிட்டால், இலக்குகள் ஒரு பொருட்டாகவே தெரியாது. பலவிதமான தடைகளைத் தாண்டித்தான் உங்கள் இலக்கை நீங்கள் அடைய வேண்டும் என்பதை மறக்காதீர்கள். `நாளை செய்துகொள்ளலாம்’ என எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். அப்படிச் செய்வதால், ஒரே நேரத்தில் பல வேலைகளை அவசரமாக முடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். இது, மற்ற வேலைகளைப் பாதிப்பதோடு, உங்களின் திறனையும் வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கும். ஆகையால், வேலைகளை உடனுக்குடன் முடிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் இலக்குகளை நீங்கள் சரியாக அடைந்தால் மட்டுமே நிறுவனம் வளர்ச்சி பெறும். நிறுவனம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நீங்கள் வளர்ச்சியடைய முடியும் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டால், டார்கெட் என்பது கவலை தரக்கூடிய விஷயமாக உங்களுக்கு ஒருபோதும் இருக்காது’’ என்று சொன்ன மாறன், இலக்கை அடைவதில் காட்டும் வேகத்தை தனிப்பட்ட வாழ்க்கையிலும் காட்டச் சொல்கிறார்.
பன்னாட்டு நிறுவனங்களில் பயிற்சியாள ராகவும், எக்ஸெல் ஹெச்.ஆர் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள ராமசுப்பிரமணியன், இது குறித்து புதிய புரிதலைத் தந்தார்.
``நம்முடைய வேலைகளில் டார்கெட் என்று வந்தபிறகே அவற்றின் வேகம் அதிகரிக்கிறது. இதற்கு SDR என்றொரு சமன்பாடு உள்ளது. S என்பது வேலைக்கான அழுத்தம் (Stress); D என்பது தேவை (Demand); R என்பது வளங்கள் (Resources). இவற்றில் வேலைக்கான அழுத்தம் குறைவாக இருக்க வேண்டுமெனில், ஒன்று தேவையானது குறைவாக இருக்க வேண்டும் அல்லது வேலையைச் செய்து முடிப்பதற்கான வளங்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
வேலைக்கான அழுத்தம் அதிகமாக இருக்கும்போதுதான் செயல்திறன் (performance) சிறப்பாக இருக்கும் என உலக அளவில் கண்டறிந்து இருக்கிறார்கள். வேலைக்கான அழுத்தத்துக்கும் செயல் திறனுக்கும் இடையே அனுகூலமான நிலை (optimum level) ஒன்று இருக்கிறது. இந்த அனுகூலமான நிலையைவிட, வேலைக்கான அழுத்தம் அதிகரிக்கும்போது செயல்திறன் குறையும்; அனுகூலமான நிலையைவிட வேலைக்கான அழுத்தம் குறைவாக இருந்தால், வேலை போரடிக்கத் தொடங்கி விடும். ஆகவே, ஒவ்வொருவரின் அனுகூல நிலை என்ன என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
வேலைக்கான அழுத்தத்தைச் சமாளிக்க, உங்களுடைய வளங்களின்மீது கவனம் செலுத்த வேண்டும். டார்கெட்டை எட்டுவதற்குத் திறமையான ஊழியராக மாற மிக முக்கியமான தேவை, நேர மேலாண்மை. இதை 80:20 என்ற ஃபார்முலாவைப் பயன்படுத்திச் சிறப்பாக மேம்படுத்தலாம். அதாவது, 20 சதவிகித வேலைகளே 80 சதவிகித விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. இதனால் எந்த வேலை அதிக விளைவை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்து, அந்த வேலையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும்.
80 சதவிகித வேலைகள் எளிதில் செய்து முடிக்கக்கூடியதாக இருந்தாலும், அவற்றினால் ஏற்படும் விளைவுகள் 20% அளவுக்கே இருக்கும். அதிக விளைவைத் தராத வேலைகளை இரண்டாம் நிலையில் வைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். சுலபமான வேலையை முதலில் முடித்துவிட்டு, கடினமான வேலையைத் தள்ளி வைத்துக்கொண்டே இருக்கக்கூடாது. இதற்கு `பிசினஸ் சிண்ட்ரோம்’ எனப் பெயர். என்ன செய்தால் பிடிக்கும் என்பதையும், என்ன செய்தால் டார்கெட் இலக்கை அடைய முடியும் என்பதையும் தனியே பிரித்துக்கொண்டு செயல்பட்டால், இலக்கை எளிதில் அடைந்துவிடலாம்.
டார்கெட்டை எட்டும்போது சகபணியாளர்களுடனும் தலைமை இடத்திலும் திறந்த மனதுடன், நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள். இதன் மூலம் நிர்வாகத்தில் நம்பிக்கையானவராகத் தோற்றமளிப்பீர்கள். மேலும், `என் இலக்குகள் இவைதான்’ என வெளிப்படையாகச் சொல்லவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு மரத்தை அறுக்கும்முன் ரம்பத்தைக் கூர்தீட்டுவது போல், செயல்களைச் செம்மையாகச் செய்து முடிக்கவும் உடலையும், மனதையும் கூர்தீட்டிக் கொள்ள வேண்டும். உடலும், மனமும் சரியான முறையில் செயல்பட தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். 20 நிமிடம் உடற்பயிற்சி, 20 நிமிடம் மனப்பயிற்சி செய்ய வேண்டும். உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி பல முறைகள் உள்ளன. மனதுக்குத் தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி செய்வது அவசியம்.
இலக்கு நோக்கிக் கொண்டு செல்லும் நமது செயல்பாடுகளை, தொழில்நுட்பங்களை அவசியம் பயன்படுத்த வேண்டும். `To Do list’ என்ற டூலில் தினமும் ஒவ்வொரு வாரத்துக்கும், ஒவ்வொரு மாதத்துக்கும் தகுந்தாற்போல் பணிகளைப் பட்டியலிட்டு வேலை பார்த்தால் டார்கெட்டை எட்டுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதனால் எந்த பிரஷரும் வராது’’ என்றார் ராமசுப்பிரமணியன்.
டார்கெட் இலக்கை அடைவதை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னார் மனநல மருத்துவர் அசோகன். ``பொதுவாக, நிறுவனங்கள் நிர்ணயிக்கும் டார்கெட் என்பதே அடையாத முடியாத அளவுக்குத்தான் இருக்கும். இது நிறுவனத்துக்கும் நன்றாகத் தெரியும். ஓர் ஊரில் இவ்வளவு பேர்தான் சோப்புகளை வாங்குவார்கள் என்பது தெரிந்தும், கடையில் அளவுக்கு அதிகமாக சோப்புகளை விற்பனைக் காகக் காட்சிப்படுத்துவதுபோல்தான் டார்கெட் இலக்குகளும்.
நிறுவனம் நிர்ணயிக்கும் டார்கெட்களை எல்லா நேரங்களிலும் நிறைவேற்றிவிட முடியாது. இது நமக்கும் தெரியும்; நிறுவனத்துக்கும் தெரியும். ஒருவேளை நம்மால் டார்கெட்டை அடைய முடியவில்லை எனில், அதற்கான காரணத்தைச் சரியாக விளக்கிச் சொன்னால், அதை நிர்வாகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்.
ஆனால், ஒவ்வொரு முறையும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, டார்கெட்டில் இருந்து தப்பிக்க நினைக்கக்கூடாது. முடிந்தவரை டார்கெட்டை நிறைவேற்ற நேர்மையாக முயற்சி செய்ய வேண்டும்.
டார்கெட்டை நிறைவேற்ற வேலைப் பளுவை அதிகரித்து, மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். செய்யும் வேலையைச் சரியான முறையில் அணுகினால், டார்கெட்டை நிச்சயம் நிறைவேற்றுவீர்கள்’’ என்றார் அசோகன்.
டார்கெட் பிரஷர் இனி உங்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்காதுதானே!
ஞா.சக்திவேல் முருகன்
படம்: தே.அசோக்குமார்

மனைவி, குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள்!
``இலக்கை அடைவதில் காட்டும் முனைப்பை, குடும்பப் பொறுப்பிலும் காட்ட வேண்டும். வேலையையும், குடும்பத்தையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இதற்காக வாரத்தில் ஒருநாள் குடும்பத்துடன் முழுமையாகச் செலவிடுங்கள். அந்த நாளில் செல்போனையும் இணையத்தையும் கொஞ்சம் தூர வைத்து விட்டு, குடும்பப் பணியில் கவனம் செலுத்துங்கள். மாதத்தில் ஒருநாள் குடும்பத்துடன் வெளியே சென்று வாருங்கள். தினமும் உங்கள் குழந்தைகளுடனும் மனைவியிடமும் கொஞ்ச நேரமாவது மனம்விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். குடும்பம் குதூகலமாக இருப்பது உங்கள் அலுவலக டார்கெட்டை எளிதாக செய்து முடிக்க நிச்சயம் உதவும்’’ என்றார் மாறன்.
நேர மேலாண்மைக்கு உதவும் `பொமோடோரா டெக்னிக்’
நேர மேலாண்மைக்கு உதவும் `பொமோடோரா டெக்னிக்’ (Pomodoro Technique) என்று ஒன்று உள்ளது. இதற்கான ஆப்ஸ் ஆன்லைனில் உள்ளன. கடைகளில் ‘பொமோடோரா டைமரும்’ கிடைக்கின்றன. இதன்படி, ஒரு வேலையானது ஐந்து மணி நேரம் எடுப்பதாக இருந்தால், அதை ஐந்து சிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்ய வேண்டும். 25 நிமிடம் வேலை செய்தபிறகு, ஐந்து நிமிடம் ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்” என்றார் ராமசுப்பிரமணியன்.