நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்!

நாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்!

நாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்!

“நிஃப்டி பத்தாயிரம் புள்ளிகள்... கேட்க நல்லாத்தான் இருக்கு; ஆனா, நம்ம கையில இருக்கற ஷேர் ஏதும் விலை ஏறலையே சார்...” என நாணயம் விகடனுக்காக நான் செல்லும் விழிப்பு உணர்வுக் கூட்டங்களில் சிலர் என்னைத் தேடிவந்து புலம்பிவிட்டுப் போவார்கள்.    

நாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்!

கவலையே வேண்டாம். உங்களைப் போலத்தான் பலரும் இருக்கிறார்கள். கவிஞர் மகுடேஸ்வரன்கூட தன் முகநூலில் சமீபத்தில் இதே விஷயத்தைப் பதிவு செய்திருந்தார்.  இன்று நேற்றல்ல, பங்குச் சந்தையைப் பொறுத்தவரை,  பல ஆண்டுகளாகவே முதலீட்டாளார்களின் குற்றச்சாட்டு இதுவாகவே இருந்து வந்திருக்கிறது. ‘அப்படீன்னா இது உண்மையா?’ என்று நீங்கள் கேட்கலாம்.

குறியீட்டின் கட்டமைப்பு

ஒரு குறியீடு என்பது பல நிறுவனப் பங்குகளை உள்ளடக்கியது. பல துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை உட்கொண்டது. தொடர்ந்து பல மாதங்களாக அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாவது, அதிக மதிப்பில் வர்த்தகமாவது எனச் சில அளவுகோல்களைக் கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது. குறியீட்டில் உள்ள பங்குகளின் விலை அதிகரிக்காமல் குறியீடு மட்டும் தனியாக அதிகரிக்க முடியாது. ஆனால், குறியீட்டைக் கணக்கிடும் விதத்தில் ஒவ்வொரு பங்குக்கும் ஆன வெயிட்டேஜ் மாறுபடும். அதன் காரணமாக, இந்த மாதிரியான தோற்றம் ஏற்படுவது சகஜம்தான்.

குறியீட்டில் பங்குகளின் அதிக வெயிட்டேஜ்


உதாரணமாக, நிஃப்டி குறியீட்டில் ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் பங்களிப்பு மட்டுமே ஏறத்தாழ 9 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறது. அதற்கடுத்து, ஹெச்.டி.எஃப்.சி-யும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸும் தலா 7 சதவிகிதம்,   ஐ.டி.சி 6 சதவிகிதம், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சிஐ பேங்க் தலா 5 சதவிகிதம் என மொத்தம் 40% பங்களிக்கின்றன. இந்த ஆறே ஆறு பங்குகளின் நகர்தல் மட்டுமே நிஃப்டி குறியீட்டில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

அது மட்டுமல்ல,  இவற்றோடு ஸ்டேட் வங்கி, கோட்டக் வங்கி,  டி.சி.எஸ், எல் அண்ட் டி ஆகிய நான்கு பங்குகளையும் சேர்த்தால், நிஃப்டியில் உள்ள 50 பங்குகளில் இந்தப் பத்து பங்குகளின் நகர்தல், நிஃப்டியில் 50% தாக்கத்தை ஏற்படுத்தும். 

நாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்!

எனவே, ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த ஐந்து அல்லது பத்துப் பங்குகள் மட்டுமே அதிகரித்து, ஏனைய பங்குகளெல்லாம் சிறிய வீழ்ச்சியைச் சந்தித்தாலும், மொத்தக் குறியீடும் ஏற்றத்தில் முடியலாம்.

குறியீட்டில் குறைவான வெயிட்டேஜ் உள்ள பங்குகள்

ஏனெனில், ஏ.சி.சி, டாடா மோட்டார்ஸ் உள்பட 21 நிறுவனங்களின் ஒட்டுமொத்த வெயிட்டேஜ் அல்லது பங்களிப்பு தலா 1 சதவிகிதத்துக்கும் குறைவுதான். அதாவது, மொத்தக் குறியீட்டில், எண்ணிக்கையின் அடிப்படையில் 40 சதவிகிதமாக இருக்கும் இவற்றின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது குறியீட்டின் நகர்தலில், சுமார் 15 சதவிகிதத்துக்கும் கீழ்தான் தாக்கம்.

துறைவாரியான தாக்கம்


தவிரவும், ஒரு துறை வீழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு துறை ஏற்றத்தில் செல்லலாம். அதன் தாக்கமும் குறியீட்டில் பிரதிபலிக்கும். உதாரணமாக, வங்கி மற்றும் நிதித் துறைப் பங்குகளின் பங்களிப்பு சுமார் 35%. நிஃப்டி குறியீட்டில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இது இருப்பதால், இத்துறையில் ஏற்படும் பாதிப்பு, மொத்தக் குறியீட்டிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். அதை வைத்து மொத்த சந்தையே இறக்கத்தில் அல்லது ஏற்றத்தில் எனத் தீர்மானிப்பது சரியல்ல.

ஒரு காலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ஜவுளித் துறை, காகிதத் துறை, ரசாயனத் துறை, நம் நாட்டின் விவசாயத்துக்கே ஆதாரமாக இருக்கும் உரத்துறை ஆகியவை இதில் இடம்பெற வில்லை.

“அப்படீன்னா, சென்செக்ஸைப் பின்பற்றலாமா?” என்று கேட்காதீர்கள். அங்கேயும் இதே கதைதான். சொல்லப்போனால், பங்குகளின் எண்ணிக்கை வேறு மிகவும் குறைவு. எனவே, நிஃப்டியா, சென்செக்ஸா என்று முடிவெடுப்பதைவிட, வேறு மாதிரியான உத்தியைப் பின்பற்றலாம்.

என்ன செய்யலாம்?


அன்றாடம் பங்குச் சந்தையில் வணிகம் செய்பவர்களை விட்டுவிடுவோம். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர் களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யத் தேவையான நேரமும், திறனும், தகுந்த ஆலோசனையும் இல்லாதபட்சத்தில், வரமாக அமைந்திருக்கிறது நிஃப்டி.

தனிப்பட்ட பங்குகளின் ஏற்ற இறக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல், குறியீட்டின் அடிப்படை யிலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ, சந்தையில் வர்த்தகமாகக்கூடிய இ.டி.எஃப். யூனிட்டுகளிலோ எஸ்.ஐ.பி முறையில் மாதா மாதம் சிறு முதலீடு செய்து வரலாம். நீண்ட கால அடிப்படையில் வரிச் சலுகைகளோடு கூடிய, பணவீக்கத்தைத் தாண்டிய ஆதாயத்தைத் தரவல்லது, நிஃப்டி குறியீட்டில் நாம் செய்யும் முதலீடு. இதன்படி நடந்தால், இனி நீங்கள் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது.