
கல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் கல்வி யாண்டு தொடங்கும்போது பிள்ளைகளுக்காகக் கல்விக் கடன் பெற பெற்றோா்கள் படும்பாடு வாா்த்தைகளால் சொல்ல முடியாது. சமீபத்தில் தேனியிலிருந்து பேசிய ஒரு வாசகர் சொன்னது நம்மை நெகிழ வைப்பதாக இருந்தது.

“சார், எனக்கு மூணு பெண் குழந்தைகள். நான் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம்தான் செய்கிறேன். இரண்டு குழந்தைகளை என் சக்திக்கு ஏற்றவாறு படிக்க வைத்துவிட்டேன். மூன்றாவது பெண் நல்ல மார்க் வாங்கினாள். மருத்துவத் துறையில் படிக்க ஆசைப்பட்டாள்.
எங்கள் பகுதியில் நான் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வங்கியை அணுகி கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். உங்கள் பகுதியில் கல்விக் கடன் வாங்கிய நிறைய பேர் திரும்பச் செலுத்த வில்லை. அதனால் உங்களுக்குக் கல்விக் கடன் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது எனச் சொல்லி, கல்விக் கடன் தர மறுத்துவிட்டார்கள். நான் எப்படி என் மகளை படிக்க வைக்கப் போகிறேனோ...?” என்று கண்ணீர் விட்டுக் கதறினார்.
இவரைப் போலவே, “நான் என் பையனுக்குக் கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கிறேன். ஆனால், கடன்தான் கிடைக்க மாட்டேங்குது...” என்று புலம்புகிறார்கள் பலர்.
பல ஆவணங்களைக் காட்டி மேலாளாிடம் வங்கிக் கடனைக் கெஞ்சிக் கேட்டால், ‘‘அடுத்த வாரம் புது மேலாளா் வருவாா்; அவாிடம் கேளுங்கள்” என்று சொல்லித் தப்பிக்கப் பாா்ப்பாா். இதையெல்லாம் மீறி கடன் தருவதற் காகப் பேசும் வங்கி அதிகாரிகள், “சொத்துப் பத்திரம் இருக்கா, ஜாமீனுக்கு ஆள் இருக்கா” என்று பல தட்டிக்கழித்தல்களைச் சொல்லி தலை கிறுகிறுக்க வைத்து, வங்கியின் பக்கம் மீண்டும் வரவிடாமலே செய்துவிடுவார்கள்.
வங்கியில் நியாயமான வட்டியில் கல்விக் கடன் கிடைக்காதவர்களுக்கு ஒரே வழி, தனிப்பட்ட ஆட்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவது. வட்டி என்றால் கொஞ்சநஞ்சமல்ல, 16 சதவிகிதத்துக்கு மேல். எப்பாடுபட்டாவது மகனை இன்ஜினீயர் ஆக்க நினைப்பவர்கள் இந்தக் கடனை வாங்கத்தான் செய்கிறார்கள்!

வங்கிகளிலிருந்து எளிதாகக் கல்விக் கடனைப் பெற என்ன வேண்டும் என்பது பற்றி சொன்னார் திருப்பூரைச் சேர்ந்த என்.குமரன். இவர் ‘ஹவ் டு கெட் எஜூகேஷனல் லோன்ஸ் டு ஸ்டடி இன் இந்தியா அண்ட் அப்ராட்’ என்கிற புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
‘‘வங்கிகளிலிருந்து கல்விக் கடன் பெற நீங்கள் அலைந்ததெல்லாம் கடந்த ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் கல்விக் கடன் பெற வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் அல்லது ஒரு கம்ப்யூட்டா் பிரவுஸிங் சென்டாில் இருந்தோகூட கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசு, கல்விக் கடனுக்காக பிரத்யேகமாகத் துவங்கியுள்ள வித்யா லட்சுமி இணையதளத்தில் (www.vidyalakshmi.co.in) சென்று முதலில் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தற்சமயம் 40-க்கும் மேற்பட்ட வங்கிகள் வழங்கும் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காலவிரயம், தட்டிக்கழித்தல்களை எளிதில் தவிா்த்துவிடலாம். இந்த இணையதளத்தில் பதிவு செய்யாமல் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டுமென்றால், அந்தந்த வங்கிகளின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்ல பலன் அளிக்கும்.
நாடு முழுக்க உள்ள 130-க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் 200-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன.
கிராம வங்கியிலும் வாங்கலாம்
கல்விக் கடன் என்றாலே பெரும்பாலானோர்களுக்கு ஒரு சில பொதுத் துறை வங்கிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். பொதுத் துறை வங்கிகள் மட்டுமல்லாமல், தனியாா் வங்கிகள், கிராம வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய அரசின் நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களும் கல்விக் கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இவை தவிர இன்னும் சில அமைப்புகள்...
1. தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
2. தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
3. தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
4. தேசிய தாழ்த்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
5. தேசிய துப்புரவுத் தொழிலாளா்கள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
6. தேசிய பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
அந்தந்தப் பிாிவினாின் மேம்பாட்டுக்காக இவை கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இவை நேரடியாக மக்களுடன் இணைந்து செயல்படுவதில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள், பொதுத் துைற மற்றும் தனியாா் வங்கிகளுடன் இணைந்து தங்களது கடன் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகின்றன.
வட்டி குறைவு
பொதுவாக, பிற வணிக வங்கிகளின் வட்டி விகிதங்களைவிட இந்த நிறுவனங்களின் வட்டி விகிதம் மிகவும் குறைவு. பிற வங்கிகளில் ஆண்டு வட்டி விகிதம் 12% மற்றும் அதற்கும் மேல் உள்ள நிலையில், இந்தப் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்களின் ஆண்டு சராசாி வட்டி விகிதம் 6% என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும்கூட மத்திய அரசின் வட்டி மானியத் திட்டத்துக்குத் தகுதியுடையதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிள்ளைகளுக்கான மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி மானியத் திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் படிக்க வாங்கும் கல்விக்கடனுக்கும் வட்டியை மத்திய அரசே பகிர்ந்துகொள்ளும் வகையில் பல்வேறு வட்டி மானியத் திட்டங்களும் உள்ளன.
எவ்வளவு கிடைக்கும்?
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள, அதாவது ஆண்டுக்கு சுமாா் ரூ.4.50 லட்சத்துக்கும் குறைவான வருமானமுடைய பெற்றோா்களின் பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசு செலுத்தும் (Central Scheme to Provide Interest Subsidy) திட்டம். மாணவா்கள் படிக்கும் காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கும் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்கள் கழித்து இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலான காலகட்டத்துக்கு உண்டான வட்டியை மாணவா்கள் சாா்பாக மத்திய அரசே வங்கிகளுக்கு நேரடியாகச் செலுத்தும்.
வெளிநாட்டில் படிக்க...
அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெற்றோா்களின் பிள்ளைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெற்றோா்களின் பிள்ளைகள், வெளிநாடுகளில் படிக்க செல்ல வாங்கும் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம், டாக்டா் அம்பேத்கா் கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம் (Dr.Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loan for Overseas studies for other backward classes (OBCS) and Economically Backward Classses (EBCS)) என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்கும் மாணவா்கள் இந்த வட்டி மானியத் திட்டத்தால் பயன் பெற முடியும்.
கிட்டத்தட்ட இதே அடிப்படையில் பதோ பிரதேஷ் (Padho Pradesh) என்ற பெயாில் வட்டி மானியத் திட்டம் சிறுபான்மை மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யாருக்குக் கடன் கிடைக்கும்?
சாி, யாா் யாரெல்லாம் கல்விக் கடன் வாங்கலாம் என்றால், இந்தியக் குடிமகன்கள் அனைவரும் கல்விக் கடன் வாங்கலாம். ஆனால், இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டவா்கள் கல்விக் கடன் வாங்க முடியாது.
பொதுவாக, கல்விக் கடன் வரையறைகளை மூன்று பிாிவுகளாகப் பிரித்துப் பாா்க்கலாம். இது இந்தியாவில் படிப்பதற்கும் வெளிநாட்டில் படிப்பதற்கும் பொதுவானது.
முதலாவது சுமாா் நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கடன். இதைப் பெறுவதற்கு பெற்றோா் அல்லது மாமனாா், மாமியாா் ஆகியோா்களில் ஒருவா் இணைக் கடன்தாரராகச் சோ்க்கப்பட்டு அவா்களது கையெழுத்து மட்டும் இருந்தால் போதுமானது. இந்தக் கடனைப் பெறுவதற்கு வேறு பிணையமோ, பொறுப்போ தேவையில்லை.
இரண்டாவதாக, சுமாா் ரூ.7.50 லட்சம் வரையிலான கல்விக் கடன் பெறுவதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுடன், மாதச் சம்பளம் பெறுபவரோ அல்லது வருமான வரிச் செலுத்துபவரோ யாராவது ஒருவா் கூடுதலாக ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டும்.
மூன்றாவதாக, ரூ.7.50 லட்சத்துக்கு மேற்பட்ட கல்விக்கடனுக்கு கட்டாயம் பிணையம் தேவைப்படும். அது கட்டடமாகவோ, நில மாகவோ, அரசாங்க முதலீட்டுப் பத்திரங்களா கவோ, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளா கவோ, மியூச்சுவல் ஃபண்டு களாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ யூ.டி.ஐ, என்.எஸ்.ஸி, கே.வி.பி மற்றும் காப்பீட்டுப் பத்திரங்களாகவோ இருக்கலாம்.
எப்போது கடன் வாங்கலாம்?
பொதுவாக, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க கால நிா்ணயம் எதுவும் கிடையாது. ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டில் கல்விக் கடன் வாங்காமல், இரண்டாம் ஆண்டோ அல்லது இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக் கடன் கிடைக்கவிட்டால்...?
கல்விக் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. கல்விக் கடனுக்கு விண்ணப்பித்தபின் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள வழிகாட்டுதல்களின்படி வங்கிக் கிளைகள் செயல்படாவிட்டால், முதலில் மாவட்ட ஆட்சியரின் புகாா் மனுப் பிரிவில் வெள்ளைத் தாளில் எழுதி புகாா் அளிக்கலாம். அவா் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் உங்களது குறைகளைக் களைய நடவடிக்கை எடுப்பாா்.
இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளரை அணுகி, அவா் மூலம் உங்கள் குறைகளைத் தீா்த்துக்கொள்ளலாம். அடுத்ததாகச் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பலாம்.
-ஆகாஷ்
படம்: வி.ஸ்ரீனிவாசலு
எல்.கே.ஜி-க்கும் உண்டு கல்விக் கடன்!
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்காக மட்டுமே கல்விக் கடன் பெற முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது உண்மையல்ல. எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள், ஐ.டி.சி மற்றும் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம். சிஏ படிப்பவர்கள், 55-வது வயது வரை கல்விக் கடன்கள் பெற முடியும். இதற்கான வாய்ப்புகளைச் சில வங்கிகள் வழங்குகின்றன. மேலும், வேலையில் இருப்பவர்கள் மேற்படிப்பு படிக்கவும், தங்கள் வேலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சிக் கல்வியைப் பெறவும் கடன் உதவி கிடைக்கும்.