
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் செய்வது எப்படி?
இன்ஷூரன்ஸ் என்பது எல்லோருக்கும் அவசியம். எதிர்பாராமல் சில அபாயங்களைச் சந்திக்கும்போது ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க இன்ஷூரன்ஸ் அனைவருக்குமே கட்டாயம் தேவை.

ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பலருக்கும் பல சமயங்களில் அதிருப்தியான அனுபவங்கள்தான் கிடைக்கின்றன. அவசியமான நேரங்களில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையைத் தர மறுப்பது, அதற்கு முறையான காரணங்களைச் சொல்ல மறுப்பது, எனப் பல வழிகளில் மக்கள் அதிருப்தி அடைகிறார்கள்.
இவற்றுக்காக இன்ஷூரன்ஸ் திட்டங்களின் மீது நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. இன்ஷூரன்ஸ் சேவையில் அதிருப்தி ஏற்பட்டால், அது குறித்துப் புகார் செய்ய முடியும்; உங்களுடைய குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி செய்ய முடியும் என்கிற நிலை உருவாகி இருப்பது மகிழ்ச்சி தரும் முன்னேற்றமே.
பாலிசிதாரர்களின் நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், ஐஆர்டிஏஐ அமைப்பு, இன்ஷூரன்ஸ் குறித்துப் புகார் அளிக்கும் வசதியை மேம்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு பாலிசிதாரர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின்மீதோ, ஏஜென்ட்மீதோ அல்லது புரோக்கர்மீதோ புகார் செய்யலாம். புகார்களை எழுத்துவடிவில் தரவேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமோ, இன்ஷூரன்ஸ் துறை கட்டுப்பாட்டு அமைப்பிடமோ நீங்கள் நேரடியாகப் புகார் செய்ய முடியும்.
எப்படி புகார் செய்வது?
இப்போது அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், தங்களது இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்புக் கொள்கைத் திட்டத்தைச் செயல்படுத்திவருகின்றன. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்புப் பக்கத்தை க்ளிக் செய்தால், புகாரை எப்படிப் பதிவு செய்வது, குறை தீர்ப்பு அதிகாரியின் தொடர்பு எண் அல்லது அலுவலக எண் போன்ற விவரங்கள் இருக்கும்.
பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் இணையதளங்களில் கஸ்டமர் சப்போர்ட் (Customer support) என்ற பிரிவில் வாடிக்கையாளர்கள் குறைதீர்ப்புப் பக்கம் அமைந்திருக்கும். மேலும், நீங்கள் புகார் அனுப்பவேண்டிய அதிகாரியின் மின்னஞ்சல் முகவரி, தொடர்புக்குரிய பிற விவரங்கள் மற்றும் நீங்கள் புகாரை அனுப்ப வேண்டிய முகவரி போன்றவை இருக்கும் அல்லது நீங்கள் ஐஆர்டிஏஐ -ன் இணையதளமான http:// www.policyholder.gov.in/ Report.aspx# என்ற பக்கத்துக்குச் சென்றால், அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடைய குறைதீர்ப்பு அதிகாரிகளின் தகவல்தொடர்பு விவரங்களையும் காணலாம். நீங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கும் தொடர்பு கொண்டு பாலிசி மற்றும் புகார் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
உங்களுடைய கடிதம் மற்றும் மின்னஞ்சல் கிடைத்த மூன்று நாள்களுக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அது தொடர்பாக உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நீங்கள் நேரடியாக உங்கள் புகாரை இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்பினால், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பை (IGMS-Integrated Grievance Management System) அணுகலாம். இந்த அமைப்புதான் அனைத்து லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லாத பிற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பதிவாகும் புகார்களைக் கையாளும்.
இந்த அமைப்பிடம் நீங்கள் புகாரைப் பதிவு செய்ய, உங்களுடைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இணையப் பக்கத்திலிருந்தே ஆன்லைன் மூலமாக உங்களுடைய புகாரைப் பதிவு செய்யலாம். ஏனெனில், அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் புகார் பதிவுத் தளங்களும் இந்த அமைப்புடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. எனவே, நீங்கள் உங்களுடைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யும்போது, அந்தப் புகார் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்புக்குச் சென்றுவிடும். மேலும், நேரடியாக www.igms.irda.gov.in இணையதளத்திலோ அல்லது 155255 மற்றும் 1800-4254-732 என்ற இலவச எண்களைத் தொடர்புகொண்டோ புகார்களைப் பதிவுசெய்யலாம்.
இவை தவிர, complaints@irda.gov.in என்ற மின்னஞ்சலுக்கும் உங்கள் புகாரை அனுப்பலாம். இந்த அமைப்பின் வாயிலாகப் பதிவுசெய்யப்படும் புகார்கள், அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புகார்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தீர்வு காணப்படும். இந்த ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவியைக்கொண்டு இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையம் உங்கள் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான பணிகளை மேற்கொள்ளும். புகார்களின் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும்.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 15 நாள்களுக்குள் புகார்களுக்கு தீர்வுகாண வேண்டும். உங்களுடைய புகார் தொடர்பாக அளிக்கும் பதிலுக்கு நீங்கள் எட்டு வாரங்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அந்தப் புகார் நிறைவுற்றதாகக் கருதப்படும். உங்களுடைய புகாருக்கு நீங்கள் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காதபட்சத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் அமைப்பை அணுகுமாறு அறிவுறுத்தப்படும்.
இன்ஷூரன்ஸ் தொடர்பான உங்கள் அனைத்து புகார்களுக்கும் தீர்வுகாணும் வகையில் இந்தக் குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு செயல்படுவதால், நீங்கள் உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியின் பலனை நிறைவாகப் பெற முடியும்.
-ஜெ.சரவணன்