
பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், fortuneplanners.com
இன்று பலருக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய சவால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கும் பணத்தைத் தேவைக்கேற்ப எப்படி எடுத்து பயன்படுத்துவது என்பதுதான். மாதந்திர வருமானத் திட்டம் (Monthly Income Plan - MIP) அல்லது மாதாந்திர டிவிடெண்ட் திட்டம் (Monthly Dividend Plan - MDP) அல்லது சிஸ்டமேடிக் வித்ட்ராயல் பிளான் (SWP) - இவற்றில் எதைத் தேர்வு செய்வது என்பதில் சிறு தடுமாற்றம் முதலீட்டாளர்களிடையே காணப்படுகிறது. இந்தத் திட்டங்களின் தன்மைகளைப் புரிந்து கொண்டால்தான் இவற்றில் இருக்கும் வித்தியாசங் களைப் புரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் நமக்கேற்ற திட்டம் எது என்பதை நம்மால் குழப்பம் இல்லாமல் தேர்வு செய்ய முடியும்.

எம்.ஐ.பி. திட்டம்
இந்தத் திட்டமானது கடன் பத்திர முதலீடு களில் அடங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நமக்குப் பணம் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு கிடைக்கும் என்று கணிப்பது கடினம். வட்டி விகிதம் சரிந்திருந்தால் குறைவாக கிடைக்கவோ அல்லது அந்த மாதத்தில் பணம் எதுவும் கிடைக்காமல் போகவோ வாய்ப்புண்டு.
எம்.ஐ.பி ஃபண்டுகளில் 70-லிருந்து 80% வரை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். 20-லிருந்து 30% வரை பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படும். 2014-க்குமுன், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் யூனிட்களை ஓராண்டுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரியும், ஓராண்டுக்குப் பிறகு விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரியும் கட்ட வேண்டும் என்று இருந்தது. தற்போது இது மூன்று வருடங்களாக மாறிவிட்டதால், குறைந்தது மூன்று வருடம் யூனிட்களை வைத்திருந்தால்தான் வரி குறைவாக கட்ட வேண்டியிருக்கும்.
மேலும், இந்தத் திட்டத்தில் எல்லா மாதமும் வருமானம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதன் வருமானம், வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கேற்ப மாறுபடும். எனவே, குறைந்த அளவே வருமானம் கிடைக்கும். இதன் பெயர் மன்த்லி இன்கம் பிளான் என்று இருந்தாலும், எல்லா மாதமும் வருமானம் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் கிடையாது.

எம்.டி.பி. திட்டம்
மன்த்லி டிவிடெண்ட் பிளான் என்பது மாதம் தோறும் டிவிடெண்ட் வழங்கும் திட்டம். என்றாலும் இதிலும் மாதம் தோறும் நிச்சயமாக டிவிடெண்ட் கிடைக்கும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.
முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள கடன் சார்ந்த ஃபண்டுகள், பங்குச் சந்தை சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகளிலிருந்து பணத்தை மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை எடுக்க
எஸ்.டபிள்யூ.பி முறையைப் பயன் படுத்தலாம். இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை, நம் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும்.
இந்தத் தொகை டிவிடெண்டாக தரப்படுவதால், இதற்கு நாம் வரி ஏதும் கட்ட வேண்டியதில்லை. அதே நேரத்தில், டிவிடெண்ட் விநியோக வரி சுமார் 25%-ஐ ஃபண்ட் நிறுவனம் கட்டிய பிறகு, மீதியைத்தான் அது முதலீட்டாளருக்குத் தருகிறது. எனவே, லாபம் குறைவாகவே இருக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்டில் நமக்கு கன்ட்ரோல் குறைவு.
எஸ்.டபிள்யூ.பி திட்டம்!
எஸ்.டபிள்யூ.பி என்பது நாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் பணத்தை நமது தேவைக்கேற்பத் திரும்ப எடுக்கும் ஒரு முறையாகும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானுக்கு (SIP) எதிரான முறை என்றுகூட இதைச் சொல்லாம். அதாவது, எஸ்.ஐ.பி முறையில் நாம் முதலீடு செய்கிறோம்; எஸ்.டபிள்யூ.பி முறையில் நாம் பணத்தைத் திரும்ப எடுக்கிறோம், அவ்வளவுதான்.

நாம் முதலீடு செய்து ஓராண்டுக்குப் பிறகு எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுப்பதாக இருந்தால், எக்ஸிட் லோட் மற்றும் கேப்பிடல் கெயின் டாக்ஸ் கிடையாது. குறிப்பிட்ட தேதியில் நமக்குத் தேவையான பணத்தை இதிலிருந்து நாம் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். மேலும் பணவீக்கத்துக்கேற்ப நம்முடைய தொகையை அதிகரித்து எடுத்துக்கொள்ள முடியும். நாம் முதலீடு செய்துள்ள ஃபண்டில் பணம் இருக்கும்பட்சத்தில், சந்தை சரிந்திருந்தபோதிலும் நம்மால் எடுக்க முடியும்.
ஒருவேளை ஒரு வருடத்துக்குள்ளேயே பணத்தைத் திரும்ப எடுத்தால், அவர் கட்டவேண்டிய மூலதன ஆதாய வரி மிகவும் குறைவு. (பார்க்க அட்டவணை) உதாரணமாக, ஒருவர் ரூ.10 லட்சத்தை பேலன்ஸ்டு ஃபண்ட் ஒன்றில் (65% தொகை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது) முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் எஸ்.டபிள்யூ.பி முறையில் ரூ.7,500 எடுப்பதாக வைத்துக்கொண்டால், மொத்த முதலீட்டில் அவர் செலுத்தும் மூலதன ஆதாய வரி 0.16%, அதாவது ரூ.1,609 மட்டுமே.
எது பெஸ்ட்?
அசலுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று நினைக்கும் மூத்த குடிமக்கள் எம்.ஐ.பி., எம்.டி.பி திட்டங்களைத் தேர்வு செய்வது தவிர வேறு வழியில்லை. ஆனால், கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும் என்கிற நடுத்தர வயதினர் இந்த இரு திட்டங்களைத் தேர்வு செய்வதைவிட, பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். சந்தை தற்போது நன்கு உயர்ந்திருந்தாலும், அடுத்து வரக்கூடிய ஐந்து வருடங்களில் பங்குச் சந்தை நன்கு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பெரும்பாலானவை ஆண்டுக்கு 10-12% வரை வருமானம் தந்துள்ளன. ஒரு வருடத்துக்குமேல் முதலீட்டை வைத்திருந்தால், வரி இல்லை. இந்தச் சலுகை எம்.ஐ.பி-ல் இல்லை. எனவே, பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.டபிள்யூ.பி முறை மூலம் பணத்தைத் திரும்ப எடுப்பது புத்திசாலித்தனம்.