நடப்பு
Published:Updated:

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?

கேள்வி பதில்

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?

எனக்கு 38 வயதாகிறது. ஒன்று மற்றும் நான்கு  வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். ஆண்டுக்கு ரூ.10 லட்சம்  சம்பாதிக்கிறேன். என் மகன்களுக்காக சென்னையில் வீடு வாங்குவதற்குப் பதிலாக, சொந்த ஊரில் விவசாய நிலத்தை வாங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் அவர்கள் விரும்பினால், விவசாயம் செய்யலாம் அல்லது விற்கலாம். எனது இந்த முடிவு சரியானதுதானா?

ரவிச்சந்திரன், சென்னை.

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?



த.முத்துக்கிருஷ்ணன்,

நிதி ஆலோசகர்.

``உங்கள் மகன்களின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் இப்போதே யோசிப்பது மிகவும் நல்லது. விவசாய நிலத்தை வாங்குவது சரியாக இருக்கும் எனத் தோன்றவில்லை. உங்களுடைய மகன்கள் நன்றாக வளர்ந்தபிறகு அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது நமக்கு நிச்சயம் தெரியாது. இது மட்டுமின்றி, உங்களுடைய சொந்த ஊரில் மனை விலை உயர்வு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதும் தெரியாது. ஆகையால், விவசாய நிலத்தை வாங்க அறிவுரை கூற முடியாது. மாறாக, நீங்கள் தொடர்ந்து திட்டமிடப்பட்ட மூன்று பேலன்ஸ்டு ஃபண்டில் பணத்தை முதலீடு செய்யுங்கள்.   ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட்,  எல் அண்ட் டி இந்தியா புரூடென்ஸ் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

பேலன்ஸ்டு ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, 65% பங்குச் சந்தையிலும், 35%  கடன் சந்தையிலும் முதலீடு செய்யும் திட்டத்தைத் தேர்வு செய்தால், ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்காது. இதில் 12% வருடாந்திர வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பெரியவர்களாக வளரும்போது பெருந்தொகையை எதிர்பார்க்கலாம்.”

நானும் என் மனைவியும் தனித்தனியாக வருமானம் ஈட்டி வருகிறோம். 10 மற்றும் 7 வயதில் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாங்கள் எத்தனை பி.பி.எஃப் கணக்கைத் தொடங்க முடியும்? என் இரு குழந்தைகளின் பெயரிலும்   பி.பி.எஃப் கணக்கைத் தொடங்க நடைமுறை என்ன?


குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?

செந்தில், மதுரை.

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்.

``பி.பி.எஃப் கணக்கைப் பொறுத்தவரை, கணவன், மனைவி இரண்டு பேரும்  தனித்தனியாகத் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை, 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், தந்தை  ஒரு குழந்தைக்குப் பாதுகாவல ராகவும், தாய் ஒரு குழந்தைக்குப் பாதுகாவலராகவும் இருந்து கணக்கைத் தொடங்க முடியும். ஆக, உங்கள் குடும்பத்தில் நான்கு பேருமே பி.பி.எஃப் கணக்கைத் தொடங்க முடியும். அதே சமயம், ஒரு பெற்றோருக்கு நான்கு குழந்தைகள் இருந்தால், அவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே கணக்கைத் தொடங்க முடியும். குழந்தைகளின் பெயரில் கணக்கைத் தொடங்குவதற்கு, பெற்றோரின் ஆதார் கார்டு, பான் கார்டு, தந்தை மற்றும் குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவைத் தேவை.’’ 

என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ என இரண்டு சந்தைகளிலும் ஒரே நிறுவனத்தைச் சார்ந்த பங்குகளே வர்த்தகமாகின்றன. எந்தப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது லாபம்?

சிவராமன், வேலூர்.

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு விவசாய நிலம் வாங்கலாமா?



எம்.எஸ்.ஓ.அண்ணாமலை,

பங்குச் சந்தை தரகர்.

``பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு, என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ என எந்தச் சந்தையில் வர்த்தக மானாலும் ஒருநாளில் ஏறக்குறைய ஒரே விலையில்தான் வர்த்தகம் ஆகும். எனவே, பங்கின் விலையில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. எனவே, என்.எஸ்.இ-ல் ஒரு பங்கை வாங்கி, அதை பி.எஸ்.இ-ல் விற்பனை செய்தாலும் அல்லது பி.எஸ்.இ-ல் வாங்கி, என்.எஸ்.இ-ல் விற்பனை செய்தாலும் அதிக ஆதாயம் கிடைக்காது.

என்.எஸ்.இ-யில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை  அதிகம். பல இடங்களில் என்.எஸ்.இ வர்த்தகம் மட்டுமே நடைபெறுகிறது. உதாரணமாக, 9/7/17 அன்று என்.எஸ்.இ-யில் வர்த்தகமான எஸ்.பி.ஐ. பங்குகளின் எண்ணிக்கை 1,58,52,731.  பி.எஸ்.இ.யில் வர்த்தகமான அதே நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கை 9.33,434 மட்டுமே. ஆனால், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் பி.எஸ்.இ-ல் மட்டுமே வர்த்தக மாகின்றன. உதாரணத்துக்கு, கோவையைச் சேர்ந்த லட்சுமி மில்ஸ்-ன் பங்கு, என்.எஸ்.இ-ல் வர்த்தகமாவதில்லை. இந்தப் பங்கினை பி.எஸ்.இ-ல் மட்டுமே வாங்கி, விற்க முடியும். மற்றபடி, பொதுவாக எந்தச் சந்தையில் வர்த்தகம் செய்தாலும் ஒன்றுதான்.”

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.