
சித்தார்த்தன் சுந்தரம்
பாபாவின் `பதஞ்சலி’க்குப் போட்டியாக நுகர்வோர் சந்தையில் தீவிரமாக களமிறங்கவிருக்கிறது `வாழும் கலை’ புகழ் ரவிசங்கரின் `ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா.’ இவருடைய `ஆர்ட் ஆஃப் லிவ்விங் பவுண்டேஷன்’ நிறுவனம், மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப் படுகிற ஆயுர்வேத பற்பசை, சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், டிடர்ஜென்ட், நெய் போன்ற அன்றாடத் தேவைக்கான பொருள்களைக் கூடியவிரைவில் திறக்கவிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வணிகக்கடைகள் மூலம் விற்பனை செய்யவிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கும், புராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற நிறுவனங் களுக்கும் பதஞ்சலி நிறுவனம் நெருக்கடி தந்து வருவதைப்போல, ஸ்ரீ ஸ்ரீ–யின் புதிய முயற்சியும் நெருக்கடியைக் கொடுக்கும். தவிர, பதஞ்சலியின் சந்தையையும் கொஞ்சம் பிரிக்கும் என எஃப்.எம்.சி.ஜி உலகில் பலரும் எதிர் பார்க்கின்றனர்.
ஹரித்துவாரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், 2006-ம் ஆண்டு யோகா குரு பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுடன் சேர்ந்து ஆரம்பித்தார். ஏப்ரல் 16 முதல் மார்ச் 17 வரையிலான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.10,216 கோடியை எட்டிச் சாதனை படைத்துள்ளது. இது, இந்த நிறுவனத்தின் முந்தைய ஆண்டு வருமானத்தைவிட (சுமார் ரூ.5,000 கோடி) இரண்டு மடங்காகும். இந்த நிறுவனம் ஆரம்பித்த 11 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி பெற்று, நுகர்வோர் சந்தையில் ஆதிக்கம் செலுத்திவந்த பன்னாட்டு நிறுவனங் களுக்கு ஒரு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது.
இனி, இந்த நிறுவனத்துடன் ஒரு கை பார்க்கும் வகையில் ஹோதாவில் குதித்திருக்கிறது ஸ்ரீ ஸ்ரீ-யின் நிறுவனம். ரவிசங்கரின் ஆயுர்வேதா தயாரிப்புகள் சந்தைக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 2003-ம் ஆண்டு முதலே பல்வேறு பொருள்களைத் தயாரித்து, அவற்றை நவீனச் சில்லறை வணிகக்கடைகள் மூலம் விற்று வருகிறது. இதுவரையில் குறிப்பிட்ட சில பொருள்களை மட்டுமே விற்றுவந்த இந்த நிறுவனம், இனிமேல் முந்நூறுக்கும் மேற்பட்ட பொருள்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதில் உணவுப் பொருள்களும், வீட்டு உபயோகத்துக்குத் தேவையான மற்ற பொருள்களும் அடங்கும். இவை யனைத்தும் இந்தியாவில் மூன்று இடங்களில் (பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் உத்ராகண்ட் மாநிலத்தில் இருக்கும் கோத்வார்) இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும்.
புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் கடையின் பெயர் `ஸ்ரீ ஸ்ரீ தத்வா’ எனப் பெயரிட்டிருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். இவர்கள் தயாரித்து விற்பனை செய்யவிருக்கும் பொருள்களில் டிடர் ஜென்ட் பவுடர், டிஷ்வாஷ் பார், லிக்விட் ஃப்ளோர் க்ளீனர், பூஜைக்குரிய பொருள்கள், லைஃப் ஸ்டைல் பொருள்கள் என பலவும் அடங்கும். ‘ஸ்ரீ ஸ்ரீ தத்வா’வின் முதல் கடை அடுத்த மாதத்திலும், நவம்பர் மாதத்துக்குள் ஐம்பது கடைகளும் திறக்கப்படவிருக்கின்றன. ஏற்கெனவே இதனுடைய பொருள்கள் சுமார்
29 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

எஃப்.எம்.சி.ஜி சந்தையில் பதஞ்சலி நுழைந்தவுடன் பன்னாட்டு நிறுவனங்களும், சில இந்திய நிறுவனங்களும் தங்கள் கவனத்தை மூலிகை சார்ந்த பொருள்களின் பக்கம் திருப்ப ஆரம்பித்தது. ஹிந்துஸ்தான் யுனிலீவர் `ஆயுஷ்’ என்கிற பெயரில் `பர்சனல் கேர்’ பொருள்களையும், `இந்துலேகா’ பெயரில் ஹேர் கேர் பொருள்களையும், `சிட்ரா’ என்கிற பெயரில் தோல் பராமரிப்புப் பொருள்களையும் அறிமுகப்படுத்தியது.
இயற்கைப் பொருள்கள் கொண்ட பர்சனல் கேர் பொருள்களுக்கான சந்தையில் 79% இந்திய நிறுவனங்களின் வசமே இருக்கிறது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்திவரும் ஆர்ட் ஆஃப் லிவ்விங்கை உலகெங்கிலும் 37 கோடி பேர் பின்பற்றி வருவ தாகவும், இவர்களில் பலர் தங்களது பொருள்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறது.

ஆனால், பதஞ்சலி நிறுவனமோ கடந்த சில ஆண்டுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் சந்தையைப் பிடித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பிரபலமான பிராண்டுகளும், கடந்த ஆண்டில் அவை ஈட்டுத் தந்த லாபத்தையும் பார்ப்போம்.
தந்த் கந்தி ரூ.940 கோடி (நுகர்வோர் சந்தையில் 14%), கேஸ் கந்தி ரூ.825 கோடி (நுகர்வோர் சந்தையில் 15%), ஹெர்பல் சோப் ரூ.574 கோடி, தேன் ரூ.350 கோடி, கோதுமை மாவு ரூ.407 கோடி, பிரேக்ஃபாஸ்ட் சீரியல் ரூ.100 கோடி என ஆச்சர்யம் தருவதாக நீள்கிறது பதஞ்சலியின் பட்டியல்.
கடந்த ஆண்டு எஃப்.எம்.சி.ஜி சந்தையின் வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், பதஞ்சலி இரண்டு மடங்காக வளர்ந்திருப்பது ஆச்சர்யமே. 2018-ம் நிதியாண்டில், பதஞ்சலியில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டிருக்கிறது. ரூ.5,000 கோடியில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கவும் திட்டங்களைத் தீட்டிவருகிறது. நாடு முழுக்க உள்ள விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை 12,000 ஆக உயர்த்துவதன்மூலம் தனது தயாரிப்புகளை மூலைமுடுக்குகளிலெல்லாம் கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறது.
இந்திய எஃப்.எம்.சி.ஜி சந்தையில் பதஞ்சலி நிறுவனம் ஏற்கெனவே நன்கு கால்பதித்துவிட்ட நிலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தரும் போட்டியைச் சமாளிப்பதென்பது பெரிய விஷயமாக இருக்காது என்பதே இந்தத் துறை சார்ந்தவர்களின் கருத்தாக இருக்கிறது. என்றாலும், தென்னிந்தியாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இருக்கும் சீடர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, பதஞ்சலி நிறுவனத்தின் சந்தையைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள வாய்ப்புண்டு. இந்த நிலையில், எஃப்.எம்.சி.ஜி பொருள்களைச் சந்தைப்படுத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்களும் புதிதாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை வர்த்தகம் உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது.
ஆயுர்வேதப் பொருள்களுக்கு இப்போது ஒரு தனி மவுசு உருவாகியிருக்கிறது. எந்தப் பொருளாக இருந்தாலும், அது ஆயுர்வேத முறையில் தயார் செய்யப்பட்டதாக இருந்தால், அதிக விலையைத் தரத் தயாராக இருக்கின்றனர் மக்கள். இதைப் புரிந்துகொண்டதால்தான், ஆன்மிக குருக்களும் இன்றைக்கு இந்த வர்த்தகத்தில் இறங்கியிருக் கின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் போட்டி போடட்டும், வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் தரமான பொருள் கிடைத்தால் நல்லதுதானே!