நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை!

நாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை!

நாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை!

றுப்புப் பண ஒழிப்புக்காகச் சில ஆண்டுகளுக்குமுன் உச்ச நீதிமன்றத் தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக்கச் சொல்லி சென்ற ஆண்டே பரிந்துரைத்திருந்தது. 

2017 பட்ஜெட்டுக்குப் பின், நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு இந்த உச்சவரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக குறைத்தது. மேலும், நடப்பு ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதலே இது அமலுக்கும் வந்துவிட்டது. இதுகுறித்து சமீபத்தில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வரும் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது.  

நாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை!

1. ரூ.2 லட்சம்

* ஒரு நாளில் ஒருவரிடமிருந்து ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை (பெற்றுக்கொள்வதற்கு).

* ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காகவோ, வணிகத்துக்காகவோ ஒரு முறையோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையோ மொத்தமாக ரூ.2 லட்சத்துக்கு  மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் (பெற்றுக்கொள்ளவோ, கொடுக்கவோ) தடை; காசோலை அல்லது மின்னணுப் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே பணத்தைப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

2. ரூ.20 ஆயிரம்

* நிலம், வீடு உள்ளிட்ட அசையாச் சொத்துகள் வாங்குதல் / விற்பனை சம்பந்தமாக ரூ.20 ஆயிரம் அல்லது அதற்குமேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை.

* ஒருவரிடமிருந்து கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க நேரிட்டால்கூட  காசோலை அல்லது மின்னணுப் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே கொடுக்கல் வாங்கல் நடக்க வேண்டும்.

3. ரூ.10 ஆயிரம்


வியாபாரம், தொழில் நிமித்தமான பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது அதற்குமேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்யக் கூடாது. அதாவது, நம் தொழிலுக்குத் தேவை யான ஓர் உபகரணத்தையோ, தளவாடத்தையோ வாங்கும்போது, அதன் மதிப்பு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், ரொக்கமாகக் கொடுக்கக் கூடாது. காசோலை மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ ரொக்கமில்லாப் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும். 
மீறினால் என்ன நடக்கும்? கடும் அபராதம் விதிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தில் சமீபத்தில் புகுத்தப்பட்ட புதிய பிரிவு எண் 269 ST–யின்படி, இந்த உச்சவரம்புக்குமேல் ரொக்கம் பெற்றவர்மீது 100% அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருக்கிறது வருமான வரித்துறை.

ஆனால் வங்கிகளுக்கோ, கூட்டுறவு வங்கி களுக்கோ, அஞ்சலகச் சேமிப்புக் கணக்குகளுக்கோ, அரசுத் துறைகளுக்கோ இது பொருந்தாது. சட்ட திட்டங்களுக்குட்பட்டு, அவர்கள் எவ்வளவு ரொக்கம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், பெற்றுக்கொள்ளலாம், கையாளலாம்.

கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், ரொக்க மில்லாப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என அரசு நம்புகிறது.

நாகப்பன் பக்கங்கள்: ரொக்கப் பரிவர்த்தனை... ஜாக்கிரதை!வங்கிகளில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் நிறுவனங்களிடமிருந்து நாம் வாங்கும் வீட்டுக் கடன் என்பது ஒரே ஒரு நிகழ்வு தான். அப்படியானால், அந்தக் கடனை அடைக்க, நாம் மாதாமாதம் திரும்பக் கட்டும் மாதாந்திரத் தவணைத் தொகையெல்லாம் கூட்டப்பட்டு (ஒரு வேளை ரொக்கமாகக் கட்டப்பட்டால்) ரூ.2 லட்சத்துக்கு மேல் போனால் என்னாவது எனும் கேள்வி எழவே செய்கிறது. 

ஒவ்வொரு மாதமும் நாம் கட்டும் ஒவ்வொரு தவணைத் தொகையும் தனித்தனியான பரிவர்த்தனைகளாகவே கணக்கெடுத்துக் கொள்ளப்படுமே தவிர, மொத்தமாகக் கணக்கெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது. ரொக்கமாகச் செலுத்தப்படும் ஒவ்வொரு தவணைத் தொகையும் ரூ.2 லட்சத்துக்கு மேல் போகாதவரை பிரச்னை இல்லை. 

ஆனால், நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது. இதில் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வரலாம்? அதை நாம் எப்படி எதிர்கொள்ளலாம்?

உதாரணம் 1

வீட்டில் திருமணம் நிச்சயிக்கிறோம்; சாப்பாடு, கொட்டகை, அலங்காரம் உள்ளிட்டவைகளுக்கு மொத்தமாக ரூ.1,75,000 என கான்ட்ராக்டரிடம் பேசி நிர்ணயிக்கிறோம்.

முதலில் முன்பணமாக அவருக்கு ரொக்கமாக ரூ.1 லட்சமும், பின்னர் திருமணம் முடிந்தபின்னர் பாக்கி ரூ.75,000-த்தையும் ரொக்கமாக இரு வேறு நாள்களில் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் பிரச்னை ஒன்றும் இல்லை. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான். அபராதம் ஏதும் வராது. அல்லது இந்த ரூ.1,75,000-த்தை ஒரே தவணையில் தருவதாக இருந்தாலும் அதனால் பெரிய பிரச்னை ஏதும் வந்துவிடாது.

உதாரணம் 2

வீட்டில் திருமணம் நிச்சயிக்கிறோம்; சாப்பாட்டு, கொட்டகை, அலங்காரம் இத்யாதிகளுக்கு மொத்தமாக ரூ.2,25,000 என கான்ட்ராக்டரிடம் பேசி நிர்ணயிக்கிறோம். ஒப்புக்கொண்டபடி மொத்தப் பணத்தையும் அவருக்கு ஒரே நாளில் கொடுப்பதாக வைத்துக்கொண்டால், அது சட்டத்துக்குப் புறம்பானது. மேற்கொண்டு 100%  - அதாவது, ரூ. 2.25 லட்சம் அபராதம் கட்ட வேண்டிவரும். அல்லது முதலில் முன்பணமாக  ரொக்கமாக ரூ.1 லட்சமும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் பாக்கி ரூ.1.25 லட்சத்தையும் இரு வெவ்வேறு நாள்களில் ரொக்கமாகப் பணம் கொடுத்தால்கூட, அது சட்டத்துக்குப் புறம்பானதே. இதனாலும் நீங்கள் 100% - அதாவது, ரூ.2.25 லட்சம் அபராதம் கட்ட வேண்டிவரும்.

மேலே கடைசியாகச் சொன்ன உதாரணத்திலேயேகூட, சாப்பாட்டுக்கு  மட்டும் ரூ.1.25 லட்சம் எனவும், பின்னர் அலங்காரக் கொட்டகைக்கு என ரூ.1 லட்சமும் தனித்தனியாகப் பிரித்து, வெவ்வேறு நாள்களில் வெவ்வேறு பில் போட்டு, ஒரு கான்ட்ராக்டருக்கு ரொக்கமாகத் தந்தால் அல்லது பெற்றால், அதுவும் சட்டத்துக்குப் புறம்பான நிகழ்வே. ஏனெனில், இந்த இரண்டும் திருமணம் என்னும் ஒரே நிகழ்வுக்கு என்பதால். மீறினால் 100% அபராதம்.

சிறு தொழில்முனைவோர் மட்டுமல்லாது, வீட்டில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட விஷேசங்கள் உள்ளவர்கள், ரொக்கத்தைக் கையாளும்போது அதிகக் கவனம் தேவை இனி.

இப்படி அரசு செய்வது சரியா, தவறா எனும் விவாதம் இப்போது பயனளிக்கப்போவதில்லை.  இது ஏற்கெனவே சட்டமாக்கப்பட்டு நடை முறைக்கு வந்துவிட்டது. எனவே, இந்தச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதே இப்போதைக்கு சாமர்த்தியமான நடவடிக்கையாக அமையும்.

நாம் ரொக்கமாகப் பணம் கொடுப்பதும், பெறுவதும் யாருக்குத் தெரியப்போகிறது என்கிற நிலை நேற்று வரைக்கும் இருந்திருக்கலாம். இனியும் அப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, உஷார்... உஷார்!