
பூஜ்ஜியத் தேய்மான வாகன இன்ஷூரன்ஸ் லாபகரமானதா?
எந்தவிதமான வாகனமாக இருந்தாலும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். பொதுவாக, தேய்மானம் என்பது எல்லா வாகனங் களுக்கும் வேகமாக இருக்கும். வாகனத்தின் முக்கிய பாகத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அந்தப் பாகத்தை மாற்ற வேண்டியிருக்கும். அப்போது தேய்மானம் போக, அந்தப் பாகத்தின் மதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், புதிய பாகத்தை வாங்கி மாற்றிக்கொள்ள முழுத் தொகையையும் தருவதுதான் `பூஜ்ஜியத் தேய்மான வாகன இன்ஷூரன்ஸ்.’

இந்தக் கூடுதல் கவரேஜ் மூலம் வாகனத்தில் விபத்தின்போது ஏற்படும் பாகங்களின் சேதத்துக்கு க்ளெய்ம் பெற முடியும். இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்து வைத்திருந்தால், புதிய பாகத்துக்கான தொகையை க்ளெய்ம் செய்யலாம்.
கார் இன்ஷூரன்ஸ் பிரீமியம்
இந்த நிலையில், கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது ஜீரோ டிப்ரிசியேஷன் மதிப்புடன் எடுத்தால் நல்லதா என்பது குறித்து இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரனிடம் பேசினோம்.
``கார் இன்ஷுரன்ஸைப் பொறுத்தவரை, மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ், காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் மற்றும் ஜீரோ டிப்ரிசியேஷன் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். சில ஆண்டுகளுக்குமுன், மூன்றாவது நபர் இன்ஷூரன்ஸை மட்டும் கட்டாயமாக எடுக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) நிர்பந்தப் படுத்தியது. ஆகவே, கார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறைவாகவே இருந்தது.

ஆனால், தற்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ நிபந்தனைப் படி, காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஷும் கட்டாயப்படுத்தப்பட்டுவிட்டதால், அனைத்து நிறுவனங்களும் இந்த இன்ஷூரன்ஸை எடுக்க வேண்டும். இந்த வகையான இன்ஷூரன்ஸில் நாமாக ஏற்படுத்தும் விபத்து தவிர, தீ விபத்து, வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் அல்லது தற்செயலாக நடக்கும் விபத்துகளால் ஆகும் சேதத்துக்கு இழப்பீடு கிடைக்கும்.
மேற்கூறிய பாலிசிகளில் இழப்பீட்டை க்ளெய்ம் செய்யும்போது, காரின் வயதுக்கேற்ப காரின் உதிரிப் பொருள்களுக்குத் தேய்மான அடிப்படையில் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் கார் வாங்கி மூன்று வருடங்கள் ஆகியிருந்து, ஒரு விபத்தில் காரின் கதவில் அடிபட்டதற்காக க்ளெய்ம் செய்தால், காரின் கதவின் விலை ரூ.50,000 எனில், உங்களுக்கு சுமாராக 50 - 60% மட்டுமே இழப்பீடு கிடைக்கும். ஏனெனில், காரின் கதவுக்கு மூன்று வருடத் தேய்மானம் சுமாராக 40 - 50% என்பதால், மீதமுள்ள 40 - 50% வரை நம் சொந்தச் செலவில் பழுதுபார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், தற்போது இந்த ஜீரோ டிப்ரிசியேஷன் பாலிசிகள் மூலம் முழுத் தொகையையும் இழப்பீடாகப் பெற முடியும். இந்தப் பாலிசிக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருந்தாலும், முழுத் தொகைக்கான பணத்தை க்ளெய்ம் செய்ய முடியும்.

நல்ல பாலிசி
மேலே உள்ள அட்டவணையில், எக்கோஸ்போர்ட் டைடானியம் (Ecosport Titanium) பெட்ரோல் காரின் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தரப்பட்டுள்ளது. இதில் ஜீரோ டிப்ரிசியேஷனுடன் கூடிய பிரீமியம் மற்றும் ஜீரோ டிப்ரிசியேஷன் இல்லாத பிரிமீயம் உள்ளது. மேலும், ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமும் அந்தந்த நிறுவனத்தின் கொள்கைப்படி, காரின் காப்பீட்டு மதிப்பை நிர்ணயிக்க முடியும். உதாரணத்துக்கு, யுனிவர்சல் சாம்போவின் அதிகப்படியான காப்பீடு மதிப்பு ரூ.6,95,000- ஆகவும், யுனைடெட் இந்தியாவின் அதிகப்படியான காப்பீடு மதிப்பு ரூ.5,20,000-ஆகவும் உள்ளன. இந்தக் காப்பீடு மதிப்பீட்டின் மூலம் பிரீமியம் சிறிது அதிகமாக இருக்கும்.
ஆகவே, கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, அதிகக் காப்பீடு மதிப்பு, ஜீரோ டிப்ரிசியேஷன் மற்றும் காம்ப்ரிஹென்சிவ் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு நல்ல பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்’’ என்றார் அவர். சொந்த கார் வைத்திருப்பவர்கள் கவனிப்பார்களா?
-சோ.கார்த்திகேயன்