நடப்பு
தொடர்கள்
Published:Updated:

‘கன்ஸ்யூமர்’காட்டில் மழை!

‘கன்ஸ்யூமர்’காட்டில் மழை!
பிரீமியம் ஸ்டோரி
News
‘கன்ஸ்யூமர்’காட்டில் மழை!

சித்தார்த்தன் சுந்தரம்

`பணமதிப்பு நீக்கம்’, `சரக்கு மற்றும் சேவை’ வரி போன்ற நடைமுறைகளால் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை (எஃப்.எம்.சி.ஜி) கடந்த சில மாதங்களாக மிகவும் சுணக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு `ஆபத்பாந்தவனாக’ வரவிருக்கிறது விழாக்காலம்.  

‘கன்ஸ்யூமர்’காட்டில் மழை!

நுகர்வோர் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை, குறிப்பாக நவராத்திரியிலிருந்து தீபாவளி வரை, சந்தையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பல கோடி ரூபாய்களை விளம்பரம், தள்ளுபடி, சலுகைகள் எனச் செலவழிக்கத் திட்டமிட்டு வருகின்றன. இதில் ஆன்லைன் கடைகளான ஃப்ளிப்கார்ட், அமேஸானும் அடக்கம். 

நாம் அன்றாடம் நுகரும் பொருள்களான பிஸ்கட்கள், நொறுக்குத் தீனிகள், பழரசங்கள், பற்பசை, சோப்பு, ஹேர் ஆயில் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வழக்கத்தைவிட 15-20% அதிகமாக விளம்பரங்களுக்குச் செலவிடவிருக்கின்றன.
இந்த ஆண்டு மழையும் ஓரளவுக்கு நன்றாகப் பெய்திருப்பதால், கிராமப்புறச் சந்தையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஊடகங்களிலும் விளம்பரத்துக்கென்று செலவிடப்படும் தொகையில் எஃப்.எம்.சி.ஜி-யின் பங்கு சுமார் 32% ஆகும். இதில் விழாக் காலத்தில் மட்டும் செலவிடப்படும் தொகை 40% ஆகும்.  பல நிறுவனங்கள் புதிய பொருள்களை விழாக் காலத்தில் அறிமுகப்படுத்தும். அதற்கென்று அந்த நிறுவனங்கள் விளம்பரத்துக்காகச் செலவிடும் தொகையான சுமார் 25 சதவிகிதமும் இதில் அடங்கும்.

சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய திலிருந்து இந்த நிறுவனங்கள் செய்யும் விளம்பரச் செலவில் கணிசமான தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரிசெய்யும் பொருட்டும், நுகர்வோர்களின் `பர்ஸை’ப் பதம் பார்க்கும்பொருட்டும் சில நிறுவனங்கள் புதிய பொருள்களையும், பழைய பிராண்ட்களை `மறு அறிமுகம்’ செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில் பெரும் நிறுவனங்களான டாபர், மாரிக்கோ, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் ஆகியவற்றின் நிகர லாபம் சுமார் 8% முதல் 12%  வரை குறைந்திருக்கிறது. இதைச் சரிசெய்ய இந்த நிறுவனங்கள் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய முக்கியமான பண்டிகைகளைக் குறி வைத்துக் காத்திருக்கின்றன.  

‘கன்ஸ்யூமர்’காட்டில் மழை!

இந்த நிறுவனங்களுக்குச் சற்றும் சளைக்காமல் ஆன்லைன் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட், அமேஸான், பேடிஎம் (Paytm) போன்றவையும் வரிந்துகட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. இதில் ஃப்ளிப்கார்ட்டும், அமேஸானும் ஏற்கெனவே தங்களது மாதாந்திர விளம்பரச் செலவுகளை அதிகரித்துவிட்டன. அதிகத் தள்ளுபடி, சலுகைகள் மூலம் புதிய நுகர்வோர் களைக் கவரவும், பழைய நுகர்வோர்கள் தங்களது விற்பனைத் தளங்களில் அதிகப் பொருள்களை வாங்குவதற்கும் இவை வழிவகுக்கக்கூடும் என நம்புகின்றன. சமீபத்தில் சில வென்ச்்சர் கேப்பிடலிஸ்டுகள் திரட்டிய கோடிக்கணக்கான பணத்தில் சில சதவிகிதம் இந்த நடவடிக்கைகளுக் காகச் செலவிடப்படும்.

இவையிரண்டுக்கும் சற்றும் சளைக்காமல் `கோதா’வில் இறங்கப்போகிறது சீனாவின் அலிபாபா நிறுவனத்தைப் பின்புலமாகக் கொண்ட பேடிஎம் மால் (Paytm Mall). அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பண்டிகைகளின் போது விளம்பரம் செய்யவும், தங்களது தளத்தில் பொருள்களை வாங்கும் நுகர்வோர்களுக்குச் சலுகை, தள்ளுபடி, கேஷ் பேக், ஆகியவற்றுக்்கென ரூ.1,000 கோடியை ஒதுக்கியிருக்கிறது. சமீபத்தில்தான் இது 200 மில்லியன் டாலர் அளவுக்கான முதலீட்டைப் பெற்றது. இந்த விழாக்கால விளம்பரங்கள், சலுகைகள் மூலம் தனது வருடாந்திர விற்பனை இலக்கான 4 பில்லியன் டாலரைத் தொட (தள்ளுபடி, பொருள்கள் சரியில்லையெனில் அதைத் திரும்பப் பெறுதல் தவிர்த்து) பேடிஎம் நிறுவனம் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும். 

பேடிஎம் மால் தளத்தில் இதுவரை 1,000 பிராண்டுகளும், பிராண்டுகள் அங்கீகாரம் பெற்ற 15,000 சில்லறை வணிக நிறுவனங்களும் ஏற்கெனவே தங்கள் பொருள்களை விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருக்கின்றன. இது 30,000–த்தைத் தொடும் என அதன் தலைமைச் செயல் அதிகாரியான அமித் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

இப்படி வென்ச்சர்  கேப்பிட்டல்களிடமிருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயைச் சலுகை, விளம்பரம் எனச் செலவழித்தால் இந்த நிறுவனங்களால் எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்? இவர்களின் உடனடிக் கவனம் எந்த அளவுக்கு நுகர்வோர்களைக் கவர முடியுமோ, அந்த அளவுக்குக் கவர்ந்து அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் `திரும்பத் திரும்ப’ பொருள்களை வாங்கச் செய்வதுதான்.

கடந்த வருடம் ஸ்நாப்டீல், அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிகத் தள நிறுவனங்கள் விழாக் காலத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாயை விளம்பரத்துக்கும்,  புரமோஷனுக்கும் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

விளைவு, இந்த வருடம் ஸ்நாப்டீல் நிறுவனமே `விற்பனை’க்கு வந்தது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் அடிபட்டன. அதுபோல, ஃப்ளிப்கார்ட், அமேஸான் நிறுவனங்களின் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்தாலும் அவையும் இன்னும் லாபம் சம்பாதிக்கவில்லை.

எது எப்படியோ, இந்தியாவெங்கிலும் இருக்கும் கன்ஸ்யூமர்களாகிய நம் காட்டில் அக்டோபரி லிருந்து டிசம்பர் வரை `அடைமழை’ தான்’. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல தரத்துடன், அதிக சலுகை கிடைக்கும் இடங்களில் நாமும் பொருள்களை வாங்கிக் குவிக்கலாம்!

படம்: தி.விஜய்