நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“முடியாது என்று சொல்லும் தைரியம் வேண்டும்!”

“முடியாது என்று சொல்லும் தைரியம் வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“முடியாது என்று சொல்லும் தைரியம் வேண்டும்!”

ரகுராம் ராஜன் ஓப்பன் டாக்

டந்த காலத்தில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு கவர்னராக வந்தவர்கள் அனைவருமே நிதிக் கொள்கை தொடர்பான விஷயங்களில் சுயமாக யோசித்து முடிவெடுக்க நினைப்பவர்கள். மத்திய அரசு விரும்பும் நிதிக் கொள்கைகள் நாட்டுக்கு நலன் தராது என ஆர்.பி.ஐ. நினைக்கும்போது அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தவர்கள். ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும், இந்தப் பாரம்பர்யத்தைத் தவறாமல் பின்பற்றியவர்.   

“முடியாது என்று சொல்லும் தைரியம் வேண்டும்!”

ரகுராம் ராஜன் ஆர்.பி.ஐ-யின் கவர்னராக இருந்த காலத்தில் பேசிய பேச்சுக்கள் தொகுக்கப் பட்டு, புத்தகமாக தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது. பொதுவாக, இதுபோன்ற புத்தகங்கள் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையிலும், அரசியல் தலைநகரான டெல்லியிலும் முதலில் வெளியிடப் படும். ஆனால், ரகுராம் ராஜன் தனது புத்தகத்தை முதலில் வெளியிட சென்னையைத் தேர்வு செய்திருந்தது ஆச்சர்யம். ‘I Do What I Do’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகத்தை வெளியிட அவர் சென்னை தாஜ் ஹோட்டலுக்கு வந்தபோது, கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்தப் புத்தகத்துக்கான தலைப்பு பற்றி சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் ரகுராம் ராஜன். அவர் ஆர்.பி.ஐ கவர்னாராக இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர், உலக அளவில் உள்ள சில தேசிய வங்கிகளின் தலைவர்களின் பெயர்களைச் சொல்லி, ‘நிதிக் கொள்கைகளை நிர்ணயிப்பதில் நீங்கள் பருந்தா (Hawk) அல்லது புறாவா (Dove)?’ என்று கேட்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரகுராம் ராஜன், ‘‘எனக்கு யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க விருப்பமில்லை. இந்தப் பறவை லாஜிக்கிலும் எனக்குப் பெரிய நாட்டமில்லை. அதனால் சிரித்துக்கொண்டே ஜேம்ஸ்பாண்ட் சொல்கிற மாதிரி ‘மை நேம் இஸ் ரகுராம் ராஜன்’ என்று பதில் சொல்ல ஆரம்பித்தேன். நிதிக் கொள்கை பற்றி நான் எதுவும் சொன்னால், அது சந்தையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்  என்று நினைத்து, ‘I Do What I Do’ என்று சொன்னேன். நான் அப்படிச் சொன்னதில்  பெரிய அர்த்தம் ஏதுமில்லை. ஆனால், அதுதான் அடுத்த நாளன்று வெளியான செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக வந்தது. இந்தப் புத்தகத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என நான் யோசித்தபோது, ‘ஐ டு வாட் ஐ டு’ என்று வைக்க லாமா?’ என என் மனைவி யிடம் கேட்டேன். அவரும் ஓகே என்றார்’’ எனக் கலகலப்பாகப் பேசினார்.  

இந்தப் புத்தகத்தை வெளி யிடுவதற்காக ஓராண்டு காலம் காத்திருந்திருந்தார் ரகுராம் ராஜன். ஆர்.பி.ஐ கவர்னர் பதவியிலிருந்து விலகியபின், அடுத்த ஓராண்டு காலத்துக்கு இந்தியா தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் எனத் தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டாராம் ரகுராம் ராஜன். கடந்த 5-ம் தேதியுடன் அவர் பதவி விலகி ஓராண்டு காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இந்தப் புத்தகத்தை வெளியிட்டு, பல்வேறு விஷயங்கள் தொடர்பாகத் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். 

‘‘ஆர்.பி.ஐ கவர்னர்கள் இந்தியப் பொருளா தாரத்தின் ரிஸ்க் மேனேஜர்களாகப் பணியாற்ற வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் ஏதேனும் சிக்கலான சூழல் ஏற்படும் அபாயம் இருந்தால், அதனை அரசுக்கு முன்கூட்டியே சொல்லி எச்சரிக்க வேண்டியது ஆர்.பி.ஐ கவர்னரின் கடமை. ஆர்பிஐ கவர்னர் என்பவர் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்.  சில நேரங்களில் அவர்கள் எடுக்கும் கடுமையான முடிவுகள்  முதலில் விமர்சனத்துக்குள்ளானாலும் பிறகு பொருளாதாரத்துக்கு உதவியாக இருந்து எல்லோராலும் அங்கீகரிக்கப்படும். ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியம்’’ என ஆர்.பி.ஐ கவர்னரின் கடமையை ‘நச்’சென எடுத்துச் சொன்னார்.

எல்லோரும் எதிர்பார்த்த பணமதிப்பு நீக்கம் பற்றியும் அவர் பேசினார். ‘‘2016 பிப்ரவரியில் பணமதிப்பு நீக்கம் குறித்து வாய்மொழியாக என்னிடம் கருத்து கேட்டார்கள். இதனால் நீண்ட காலத்தில் பயன் இருந்தாலும், குறுகிய காலத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் அதிகமாக இருக்கும் என்று சொன்னேன்.  பணமதிப்பு நீக்கத்துக்குப்பின் ஜி.டி.பி வளர்ச்சி குறைந்துள்ளது. 99% ரூபாய் நோட்டுகள் திரும்ப டெபாசிட் செய்யப்பட்டுள்ளன, என்றாலும் அது சரியான நோக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை’’ என்றார் அவர். 

ஆர்.பி.ஐ தொடங்கி 80 வருடங்களைக் கடந்த நிலையில்,   ஆர்.பி.ஐ ஊழியர்களின் பணிச்சிறப்பையும் எடுத்துச் சொல்ல ரகுராம் ராஜன் மறக்கவில்லை. ‘‘ஆர்.பி.ஐ பணியாளர்களிடம் ஒரு வேலையைத் தந்தால்,  அதனைச் சிறப்பாக செய்து தருவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆர்.பி.ஐ கவர்னரிடம் அரசாங்கம் முன்வைக்கும் விஷயங்களுக்குச் சில நேரங்களில் முடியாது என்று கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆர்.பி.ஐ எடுக்கும் அந்த முடிவு சிறப்பான முடிவாகவே இருக்கும். அதில் அழுத்தம் கொடுக்க நினைக்கும்போதுதான் கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன’’ என்றார்.

ஒரு புத்தக வெளியீடு இந்த அளவுக்கான கவனத்தை வாசகர்களிடமிருந்து பெறுமா என்கிற வியப்பு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கிடைத்தது. சென்னையில் தனது புத்தகத்தை வெளியிட்டபின் 7-ம் தேதியன்று டெல்லியிலும், 8-ம் தேதி அன்று மும்பையிலும் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிகளுக்கிடையே பல பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் பேட்டி அளித்தார் ரகுராம் ராஜன்.

‘‘ஆர்.பி.ஐ கவர்னர் பதவியைத் தொடர வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால், அரசாங்கம்தான் என் கான்ட்ராக்ட்டை நீட்டிக்கவில்லை.

உலகப் பொருளாதாரம் சரியில்லை என்பதால், நமது ஏற்றுமதி குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதர ஆசிய நாடுகள் மட்டும் தங்களது ஏற்றுமதியை அதிகரித்திருப்பது எப்படி என்று நாம் யோசிக்க வேண்டும்’’ என்றெல்லாம் சொல்லித் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் ரகுராம் ராஜன்.
                                 
-ச.ஸ்ரீராம்

படங்கள்: ப.சரவணகுமார்