நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரர் ஆக்கும் கூட்டுவட்டி அதிசயம்!

ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரர் ஆக்கும் கூட்டுவட்டி அதிசயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரர் ஆக்கும் கூட்டுவட்டி அதிசயம்!

ப.முகைதீன் சேக்தாவூது

‘உலகெங்கும் உள்ள ஊழியர் களில் சுமார் 38% ஊழியர்கள் மட்டுமே சேமிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்’ என்கிற சர்வதேச கணக்கெடுப்பு, இந்திய ஊழியர்களில் சேமிக்கும் பழக்கம் கொண்டோர் 59% என்று நம்மை கௌரவிக்கிறது.  

ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரர் ஆக்கும் கூட்டுவட்டி அதிசயம்!

இந்த அளவுக்கு நம் நாட்டின் சேமிப்பு மேம்படக் காரணம், ‘செலவு போக மீதி இருந்தால்தான் சேமிப்பு’ என்ற மக்களின் அடிப்படை மனோ பாவத்தை மாற்றி, ‘செலவின் ஒரு பகுதிதான் சேமிப்பு’ என்ற நியதி மக்கள் மனதில் பதிந்திருப்பதே!

என்றாலும், ‘இந்திய ஊழியர்களில் 47% பேர் ஓய்வுக்கால சேமிப்பு பற்றிய சிந்தனை இல்லாமல் உள்ளனர்’ எனச் சமீபத்திய ஆய்வொன்று   சொல்வதைக் கேட்கும்போது நமக்குக் கவலையாகவே இருக்கிறது.

அதுமட்டுமன்றி, ஓய்வுக்கால சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து, சேமிப்பு வட்டத்துக்குள் வந்துவிட்ட வர்களும் சேமிப்பின் அளவும்        (Quantum), அதற்கான அளவுகோலும் (Scale) பற்றி தெளிவில்லாமல்தான் இருக்கிறார்கள். 

ஆண்டுக்கொரு முறை என நிர்ணயம் செய்யப்பட்டு வந்த சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம், 01.04.2016 முதல் காலாண்டுக்கு ஒருமுறையாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, 31.03.2016-ல் 8.6 சதவிகிதமாக இருந்த பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) வட்டி 30.9.2017 உடன் முடியும் காலாண்டுக்கு 7.8%  என்ற அளவுக்கு இறங்கிவிட்டது.

ஓர் அரசாங்கத்தின் நிதிநிலை ஸ்திரத்தன்மையை நோக்கி உயரும்போது, அந்த நாட்டின் மைய வங்கியானது (Central Bank) வட்டியைக் குறைக்கும் என்பது சர்வதேச நிதி நியதி. அந்த வகையில் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நமது நிதிநிலையானது வட்டி குறைப்புக்கு ஏதுவாகிவிட்டிருக்கிறது. இது போதாதென்று, கடந்த நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள ரூ.5.11 லட்சம் கோடிக்கு 4% என்ற அளவில் வட்டி வழங்க வேண்டியதாக இருக்கிறது.

நடுத்தர மக்களின் நிலை?

கையிருப்பு சேமிப்புப் பணத்தை பணவீக்கம் தோற்கடித்துவிடாமல் தடுக்க, மாற்று வழி தேடிய மக்கள் கண்களில் ‘பளிச்’ எனப் பட்டவை பங்குச் சந்தையும், மியூச்சுவல் ஃபண்டும்தான். இவை இரண்டிலும்கூட அணுகுமுறைக்கு அனுகூலமாக உள்ளதென நடுத்தர மக்கள் கருதுவது மியூச்சுவல் ஃபண்டுதான்.

மியூச்சுவல் ஃபண்ட் பலவகைப்பட்டதாயினும், நீண்ட காலத்துக்குச் செய்யப்படும் நிலையான முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி என்று சொல்லப்படும்  தொடர் முதலீடு ஆகிய இரண்டும் பரவலாக நிலைகொண்டுள்ளன. இவை பற்றிய தவறான கணிப்புகளைத் தவிர்த்துக்கொள்வது அவசியம்.

உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாயை 12% கூட்டு வளர்ச்சிக்் கணக்கில் வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் 30 ஆண்டு காலத்துக்கு வைத்திருந்தால், முதிர்வுத் தொகையாக  ரூ. 29,97,730-ஆகக் கிடைக்கக்கூடும். இதனை ரூ.30 லட்சம் என எடுத்துக்கொள்ளலாம்.

இப்படிக் கணக்கு போடும்போது, தப்புக் கணக்கு போட்டுவிடக்கூடாது. அந்த தப்புக் கணக்கு எப்படிப்பட்டது என்றால், 12% கூட்டு வளர்ச்சிக் கணக்கில் 30 வருடங்களில் ஒரு லட்சம் ரூ.30 லட்சமாக உயரும் என்றால், 8% வட்டிக் கணக்கில் ரூ.20 லட்சமாகத்தானே உயரும் என்று கணக்கிடுவது. அதாவது, 12 சதவிகிதத்தில்  மூன்றில் இரண்டு பங்கு 8%. எனவே, ரூ.30 லட்சத்தில் மூன்றில் இரண்டு பங்கு ரூ.20 லட்சம்.

பணத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் இப்படி ஒரு தப்புக்கணக்கைப் போடக்கூடாது. ஏனென்றால், 8% கூட்டு வளர்ச்சிக்் கணக்கீட்டில்  ரூ.1 லட்சமானது, 30-வது ஆண்டில் ரூ.8,85,950- ஆகத்தான் இருக்கும். ரூ.20 லட்சமாக ஆகாது.

அளவுகோல் பெரிதாக இருந்தால், அளவும் அதிகமாக இருக்கும்.  உதாரணமாக, ஒரு மீட்டர் ஸ்கேலைப் பத்து முறை பதிய வைத்து அளந்தால், பத்து மீட்டர் ஆகும். அதையே 30 செ.மீ கொண்ட ஒரு அடி ஸ்கேலைக் கொண்டு பத்து முறை அளந்தால் வெறும் 3 மீட்டராகவே இருக்கும்.

இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு 12% கூட்டு வட்டி கணக்கில் ஒரு லட்சம் ரூபாயானது 30 லட்சமாக உயரும் என்று பார்த்தோம். இதே ஒரு லட்சம் ரூபாய் 14.88% கூட்டு வளர்ச்சிக் கணக்கில், 30 வருடங்களில் எவ்வளவாக உயரும் தெரியுமா? ரூ.64 லட்சமாக உயரும். அடேங்கப்பா என்கிறீர்களா? இதுதான் கூட்டு வட்டி செய்யும் அதிசயம்.

அதெப்படி? 12 சதவிகிதத்துக்கும், 14.88 சதவிகிதத்துக்கும் உள்ள வித்தியாசம் 2.88 சதவிகிதம்தானே? இந்தச் சிறிய வித்தியாசம் எப்படி ரூ. 30 லட்சம் என்கிற முதிர்வுத் தொகையை ரூ.64 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தும் என்கிறீர்களா? வேண்டுமானால் கணக்கிட்டுப் பாருங்கள்.

நீங்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம்கூட இல்லை. ஏனென்றால் 14.88% கூட்டு வட்டி வழங்கும் ஒரு சேமிப்புத் திட்டம் அஞ்சலகத்தில் அமலில் இருந்தது. அதன் பெயர் ‘இந்திரவிகாஸ் பத்திரம்’ இதன் முதலீடு ஐந்து வருடங்களில் இரட்டிப்புத் தொகையை தந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டு விட்டது.

பணக்கணக்கைப் பொறுத்தவரை, மனக்கணக்கும் அவசரக் கணிப்பும் ஆபத்தானவை என்பது இப்போது புரிகிறதா?

இனி மியூச்சுவல் ஃபண்ட் தொடர் முதலீடு பற்றி பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் தொடர் முதலீட்டைப் பொறுத்தவரை, முதிர்வுத் தொகைதான் கவனிக்க வேண்டிய அம்சம். மாதம் ரூ.1,300 வீதம், ஆண்டு தோறும் 10% அதிகரித்த தொகையுடன் 30 ஆண்டுகளுக்குச் செலுத்திவந்தால், முதிர்வுத் தொகையாக ஒரு கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புண்டு. ‘இதுபோதும் இந்த ஜென்மத்துக்கு’ என்று துள்ளிக்குதிக்கும் முன்பு சில நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.

* ‘லட்சாதிபதி’ என்ற அடைமொழி காணாமல் போய் வெகு நாள்களாகிவிட்டது. ‘கோடீஸ்வரன்’ என்ற வார்த்தையும் இந்த நற்கதியை அடைய காத்துக் கொண்டுள்ளது.

* ஊதியம் வாங்க ஆரம்பித்து சுமார் 35 ஆண்டுகள் கடந்துவிட்டால் ஆரம்ப கால ஊதியமானது, கடைசி நேரத்தில் நூறு மடங்காகி விடுகிறது. ‘தின ஊதியம் பெறுவோர்க்கும் அப்படியா?’ என்று கேட்டால், ‘அப்படியே!’ என்பதுதான் உறுதியான பதில்

* 1960-ல் சராசரி வயது 42, தற்போது சராசரி வயது இந்தியராகிய நமக்கு 72. இன்றைய இளைஞர் ஓய்வுபெறும் காலத்தில், அதாவது 2052-ல் அவரது கால சராசரி வயது 92 ஆகவும் இருக்கலாம். அப்படியானால், கடைசியாக என்ன சம்பளம் வாங்குகிறோமோ, அதில் குறைந்தபட்சம் 40 சதவிகிதமாவது ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கும்.

* இத்துடன் மருத்துவ சேவைக்கான தொகையும் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரர் ஆக்கும் கூட்டுவட்டி அதிசயம்!



ஆக, இந்த ஐந்து காரணிகளையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது, பணியில் சேர்ந்தது முதலே மூன்றில் ஒரு பங்கு ஊதியத்தை மேற்கண்ட அளவு பணப் பயன் தரும் திட்டத்தில் முதலீடு செய்து, ஓய்வுக்காலத்தின்போது பெற்ற ஊதியத்தில் 40% பணவரவை எதிர்பார்க்கலாம். அது எப்படி? ரூ.18,000 ஊதியத்தில் பணியைத் துவங்கும் ஒருவர், மாதம் ரூ.5000-ல் ஆரம்பித்து, ஆண்டு தோறும் முதலீட்டுத் தொகையை 10%  அதிகரித்துக் கொண்டே வந்தால் 12% கூட்டு வளர்ச்சிக்  கணக்கில் முதிர்வுத் தொகை சுமார் ரூ. 4.5 கோடி கிடைக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு ஆண்டுக்கு 10% அதிகரித்துக்கொண்டு போகும் மாதாந்திர முதலீடு, துவங்கிய 10-வது ஆண்டில் மாதம் ரூ.11,700 என்ற அளவிலும், 20-வது ஆண்டில் மாதம் ஒன்றுக்கு ரூ.39,000 ஆகவும், 25-வது ஆண்டில் ரூ.63,000 என்கிற அளவிலும் இருக்கும்.

‘18,000 ஊதியத்தில் எப்படி மாதம் ரூ.63,000 செலுத்த முடியும்?’ என்று நீங்கள் பின்வாங்கத் தேவையில்லை. ஏனெனில், பத்தாவது ஆண்டில் மாத ஊதியம் ரூ87,900 என்கிற அளவுக்கும்        20-வது ஆண்டில் 3,03,500 என்கிற அளவுக்கும் அதிகரித்துக்கொண்டே போகும். எனவே, தொடக்கத்தில் மொத்த ஊதியத்தில் 27 சதவிகிதமாக இருந்த முதலீட்டுத் தொகை, 10-வது ஆண்டில் 13.3% எனவும், 20-வது ஆண்டில் 12.9% எனவும், சதவிகித ரீதியில் குறைந்துகொண்டே போகும். இதன் மூலம் உபரியாகும் தொகையை மாற்று முதலீடு செய்துவர, கூடுதல் பணத்தொகுப்பு (Corpus) உருவாகிக்கொண்டே வரும். ஓய்வுக் காலத்துக்கும் உறுதுணையாக நிற்கும்.

மேலும், தின ஊதியம் பெறுவோருக்கும் அவர்களது ஊதியமானது சுமார் 35 ஆண்டு கால இடைவெளியில் நூறு மடங்காக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டோம் அல்லவா? அதற்கும் ஓர் உதாரணத்தைப் பார்த்துவிடுவோம்.

1977-ல் தொழிளார் ஒருவரின் தின ஊதியம் பற்றிய அறிவிப்பு பின்வருமாறு:

*
பணிக்குப் புதியவர் (unskilled) ரூ.5

* பகுதித்திறன் பெற்றவர் (semi skilled) ரூ.6

* திறன் பெற்றவர் (skilled) ரூ.7

தனது 20-வது வயதில் பணிக்குச் சேர்ந்த ஒருவர், தற்போது தின ஊதியமாக ரூ.700 பெறுகிறார் எனில், அது 140 மடங்கு அல்லவா?

எனவே, மனக்கணக்குகளையும், மானசீகக் கணிப்புகளையும் தவிர்த்து, தகுந்த நிதி ஆலோசனையுடன் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைத்தால் நிம்மதி நீங்காமல் இருக்கும்.

ஒருவேளை, நாம் மேலே விவரித்த நடை முறைக்கு மாறாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல் வைப்பு நிதிக்கு  1% வட்டி தரும் அளவுக்கு நம் நாட்டின் நிதிநிலை உறுதியாகி, பணவீக்கம் குறைந்து, விலைவாசி ஏற்றம் தடுக்கப்பட்டு, சம்பள ஏற்றம் குறைந்த அளவிலேயே இருந்து விட்டால் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். அப்படி நடந்தால் நடந்துவிட்டுப் போகட்டுமே. இன்றைய கோடீஸ்வரர்போல், நாம் அன்றைய கோடீஸ்வர ஓய்வு வாழ்க்கை வாழ்வோம்.

ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரராக வாழ இளமைக் காலத்திலேயே முதலீட்டைத் தொடங்க வேண்டும். அதற்கான முயற்சியில் நீங்கள் இதுவரை இறங்காமல் இருந்திருக்கலாம். இனியும் காலம் கடத்தாமல் அவசியம் இறங்குங்கள். செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?