நடப்பு
தொடர்கள்
Published:Updated:

க்ளெய்ம் செய்யாத தொகை... திரும்ப வாங்க என்ன வழி?

க்ளெய்ம் செய்யாத தொகை... திரும்ப வாங்க என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
க்ளெய்ம் செய்யாத தொகை... திரும்ப வாங்க என்ன வழி?

எஸ்.ஸ்ரீதரன், wealthladder.co.in

பாலிசிதாரர் இறந்தாலோ, பாலிசி முதிர்வடைந்தாலோ பாலிசி தாரர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி, முதிர்வுத் தொகையை க்ளெய்ம் செய்ய வேண்டும்.இவ்வாறு க்ளெய்ம் செய்யாத தொகை 10 ஆண்டுகளுக்கு  மேல் இருந்தால், அந்தத் தொகை, மூத்த குடிமக்கள் நலனுக்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மூத்த குடிமக்கள் நல நிதிக்குச் சென்றடையும்.  

க்ளெய்ம் செய்யாத தொகை... திரும்ப வாங்க என்ன வழி?

பாலிசியானது நடைமுறைக்கு வந்தபின் 25 ஆண்டுகளுக்குப்பின் எந்தக் காப்புறுதியும் கோரப்படவில்லை எனில், பாலிசிதாரானவர்  முதிர்வுத் தொகை அல்லது காப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும். மேலும், இந்தத் தொகையானது அரசுக்குச் சொந்தமான நிதித் தொகுப்பில் சென்று சேர்ந்துவிடும் என இன்ஷூரன்ஸ் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) கடந்த ஜூலை 25 அன்று கூறியுள்ளது.

இந்தப் புதிய விதியின்படி, இன்ஷூரன்ஸ், தபால் சேமிப்பு மற்றும் பிராவிடன்ட் ஃபண்ட் போன்ற நிறுவனங்களில் க்ளெய்ம் செய்யாத தொகையும் இந்தத் திட்டத்தில் சேரும். இங்கே காப்பீட்டில் க்ளெய்ம் செய்யாத தொகையைத் திரும்பி வாங்க என்ன வழிகள் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

உரிமை கோரப்படாத பணம் என்றால்..?


உரிமை கோரப்படாத பணம் என்பது, பாலிசிதாரர் மரணம், முதிர்வுக் கோரிக்கை, பிரீமியம் அதிகமாகக் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறுதல், பாலிசியில் சேர்ந்த வட்டி போன்றவற்றை பாலிசிதாரர்கள் ஆறு மாதத்துக்கு மேல் க்ளெய்ம் செய்யாமல் இருந்தால், அதை  உரிமை கோரப்படாத பணம் என அழைக்கலாம்.

இவ்வாறு க்ளெய்ம் செய்யாத பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் அல்லது வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் பாலிசிதாரர் உரிமை கோரிவரும் தருவாயில் முதலீட்டின் மூலம் வரும் வட்டியை பாலிசி தாரருக்கு அல்லது பயனாளருக்குச் செலுத்த வேண்டும். மேலும், பாலிசிதாரர் ஏதாவது அபராதம் கட்ட வேண்டியிருந்தால் அந்தத் தொகையை இந்த முதலீட்டு வட்டியிலிருந்து கழித்துக்கொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்த ஃபண்டை நிர்வகிக்க, இந்த நிதியிலிருந்து நிர்வாகக் கட்டணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த நிர்வாக செலவுகள் 0.2 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என இந்தப் புதிய விதிமுறை கூறியுள்ளது.

எப்படித் தெரிந்துகொள்வது?

ஒரு பாலிசிதாரர் தன் பெயரில் கோரப்படாத தொகை ஏதும் இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தக் கேள்விக்குப் பதில்: பாலிசிதாரர் தன் பெயரில் உள்ள கோரப்படாத தொகையைத் தெரிந்துகொள்ள, காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் வலைதளங்களில் பாலிசி தாரரின் பெயரில் உள்ள உரிமை கோரப்படாத தொகையைப் பட்டியலிட்டு அறிவிக்கும். இந்தப் பட்டியலில் நம் பெயரும் இருக்கிறதா என்பதைத்  தேடிப் பார்ப்பது பாலிசிதாரரின் கடமை.

க்ளெய்ம் செய்யாத தொகை... திரும்ப வாங்க என்ன வழி?



மேலும், இந்த விவரங்களை வெப்சைட்டில் பார்ப்பதற்கு உங்களின் பாலிசி எண், நிரந்தர கணக்கு எண் (பான் எண்), ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை டைப் செய்தால், எந்த அன்க்ளெய்ம் தொகையையும் அறியலாம்.

இதற்கு பாலிசிதாரரின் பெயர் மற்றும் பிறந்த தேதி கட்டாயமானது. அதே சமயம், பான் மற்றும் பாலிசி எண் விருப்பமானது. அன்க்ளெய்ம் தொகை ரூ.1,000 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் மட்டுமே விவரங்களை வெளியிடுவதற்கு விதிகள் அனுமதிக்கின்றன.

எப்படி க்ளெய்ம் செய்வது..?

நீங்கள் உரிமை கோராத பணத்தை இந்த வெப்சைட்டில் இருந்து அடையாளம் கண்டு விட்டால், நீங்கள் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தை அணுகலாம் அல்லது இணைய தளத்தில் பட்டியலிட்டுள்ள வழிகளைப் பின்பற்றலாம்.

க்ளெய்ம் செய்யும் தொகை ரூ.10,000-க்கு மேல் இருந்தால், மின்னணுப் பரிமாற்றம் மூலமாகப் பணம் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுவே ரூ.10,000-க்குக் குறைவாக இருந்தால், செக் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படும்.
மேலும், இந்த விதிப்படி 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட, காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.1,000 அல்லது அதற்கு மேற்பட்ட  உரிமை கோரப்படாத தொகை பற்றிய தகவல்களையும் தங்கள் வலைதளங்களில் அறிவிக்க வேண்டும்.

இப்படி உரிமை கோரப்படாத தொகையானது 10 வருடங்களுக்கு மேல் இருந்தால், அது மூத்த குடிமக்கள் நல நிதித்திட்டத்துக்குப் போய் சேரும்.

பணப் பரிமாற்றத்துக்குப்பிறகு 25 ஆண்டுகளுக்குப்பின் பாலிசிதாரரோ அல்லது அவரது வாரிசுகளோ கோரவில்லை எனில், அந்தப் பணமானது அரசாங்கத்துக்குச்  சொந்த மானதாக மாறிவிடும்.

ஆகவே, இந்த வகையான உரிமை கோராத பணம் ஏதேனும் இருப்பின் அதனை மேலே குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அந்தந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி பெற்றுக் கொள்ளவும். இதற்கு முக்கியத் தேவை, பாலிசி பற்றிய தகவலை, பாலிசிதாரர் தனது  குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி வைத்திருப்பது அவசியம்!