
ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை
எங்கள் நிறுவனத்தில் விலைப்பட்டியல் (Invoice) தயாரிக்கும்போது ஹெச்.எஸ்.என் (HSN) குறியீட்டைத் தவறாக குறிப்பிட்டுவிட்டார்கள். இதனை எவ்வாறு மாற்றம் செய்வது? மீண்டும் விலைப் பட்டியலை (Invoice) சரிசெய்து அனுப்புவதா? இது குறித்து விளக்கம் தேவை.
பாண்டியன், பொன்னேரி

‘‘ஜி.எஸ்.டி சட்டப்படி விலைப் பட்டியலைச் சரியாகத் தயார் செய்திருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டபடி, வரி சதவிகிதத்தில் வித்தியாசம் ஏதும் இல்லாமல் வரி வசூலிப்பு செய்திருந்தால் வேறு எந்தப் பிரச்னையும் கிடையாது. நீங்கள் சரியான குறியீட்டுக்கான வரியை வசூலித்து செலுத்தியிருக்கிறீர்களா என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். இதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், வரித் தாக்கலின் போது சரியான குறியீட்டைக் குறிப்பிட்டு வரித் தாக்கல் செய்யலாம்.’’
எங்கள் நிறுவனத்தில் இயந்திர உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஏற்றுமதிக்கான ஆர்டர் உள்ளது. எனவே, ஏற்றுமதி செய்யும்போது பெறப்படும் பொருளுக்கும், சேவைக்கும் ஜி.எஸ்.டி செலுத்தி உள்ளோம். இதனை எவ்வாறு திரும்பப் பெறுவது?
ராஜேஷ்குமார், ஈரோடு
‘‘ஏற்றுமதி வணிகத்தில் நீங்கள் செலுத்தியிருக்கிற ஜி.எஸ்.டி-யைத் திரும்பப் பெற முடியும். லெட்டர் ஆஃப் அண்டர்ஸ்டான்டிங் (Letter of undertanding (LUT)) என்று சொல்லக்கூடிய 15% கொண்ட உத்தரவாதக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட துறையிடம் கொடுத்து, ஏற்றுமதி வணிகம் செய்ய வேண்டும். மேலும் ஏற்றுமதி செய்தபின் இந்த விவரங்களை ஜி.எஸ்.டி.யிலுள்ள இரண்டு படிவங்கள் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் கொடுத்த தொகையை ரீஃபண்ட்-ஆகத் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.’’

நான் கணக்குப் பதிவாளராக உள்ளேன். பல நிறுவனங்களின் கணக்குகளைத் தனியாளாக கையாண்டு வருகிறேன். 3பி (3B) படிவத்தில் தாக்கல் செய்யும்போது சில தவறுகள் நடந்துவிட்டன. இதனை எவ்வாறு சரிசெய்வது?
குமரேசன், வேலூர்
‘‘3B படிவத்தைத் தாக்கல் செய்யும்போது தவறு நிகழ்ந்தால், அதனை மாற்றம் செய்ய வழிவகை ஏதும் இல்லை. ஆனால், நீங்கள் ஜி.எஸ்.டி.ஆர். 1 (GSTR 1) மற்றும் ஜி.எஸ்.டி.ஆர். 2 (GSTR 2) தாக்கல் செய்யும்போது, அதைச் சரிசெய்து தாக்கல் செய்யலாம்.’’
நாங்கள் பர்னிச்சர் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். பதிவு செய்யாத நபர்களிடமிருந்து பெறப்படும் பொருளுக்கும், சேவைகளுக்கும் ரிவர்ஸ் சார்ஜ் (Reverse Charge) முறையில் வரியை உள்ளீட்டு வரியாகப் பெற்று வரி செலுத்தி வருகிறோம்.
இந்த விவரங்களை எந்தப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்பதற்கான தெளிவு இல்லை. எனக்கு இது பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
ஆர்.சாத்தப்பன், திருநெல்வேலி
‘‘பதிவு செய்யாத நபர்களிடமிருந்து பெறப்படும் பொருளுக்கும், சேவைகளுக்கும் ரிவர்ஸ் சார்ஜ் (Reverse Charge) முறையில் நீங்களாகவே வரியைச் செலுத்தி, அதற்கான உள்ளீட்டு வரியைப் பெற்று வருவது சரியான முறையாகும். இந்த விவரங்களை ஜி.எஸ்.டி.ஆர். 2 (GSTR 2) படிவத்தில் 4B என்கிற குறிப்பில் பூர்த்தி செய்ய வேண்டும்.’’
நான் பங்குதாரராக இருந்து வரும் சிறு தொழில் அமைப்பில் அரவை இயந்திரத்துக்கான (Mixi) பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். எங்களின் விற்று வரவு 50,00,000 ரூபாய்க்குள் இருப்பதால், தொகுப்பு முறையில் (Composition Scheme) வரியைச் செலுத்துவதற்குப் பதிவு செய்துள்ளோம். நாங்கள் வாங்கும் பொருள்களுக்கான மூலப்பொருள்களுக்குச் செலுத்தும் வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க முடியாது என்று எங்கள் ஆடிட்டர் கூறுகிறார். இந்தத் தகவல் சரிதானா?
ஆர்.இந்துமதி, ஈரோடு
‘‘உங்கள் ஆடிட்டர் கூறிய விவரம் முற்றிலும் சரியானது. தொகுப்பு முறையில் பதிவுசெய்து 1 அல்லது 2% வரி கட்டுபவர்கள் உள்ளீட்டு வரியாக எதையும் எடுக்க முடியாது. மேலும், நீங்கள் வரியையும் வசூல் செய்ய முடியாது. உள்ளீட்டு வரிப்பயனும் பெற முடியாது. நீங்கள் மாதந்தோறும் வரித் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதுமானது.’’
நாங்கள் ஏற்கெனவே ஒரு தொழிலுக்கான ஜி.எஸ்.டி பதிவு செய்து வந்துள்ளோம். தற்போது வேறொரு தொழிலை இதே தொழில் அமைப்பில் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்கு தனியாக ஜி.எஸ்.டி பதிவு செய்ய வேண்டியது அவசியமா?
சதாசிவம், திருச்சி
‘‘நீங்கள் அதே ஜி.எஸ்.டி பதிவு எண்ணைக் கொண்டு, மற்றொரு வியாபாரத்தையும் செய்யலாம். ஆனால், ஜி.எஸ்.டி போர்ட்டலில் உங்களுடைய புதிய தொழிலின் விவரங்களைக் குறிப்பிடுவது அவசியம்.’’
கார் விலையில் மாற்றம் ஏற்பட்டதாக சமீப நாள்களில் வெளியான நாளேடுகள் குறிப்பிடுகின்றனவே. இந்தச் சூழ்நிலையில் ஜி.எஸ்.டி வரியில் உயர்வு ஏற்பட்டுள்ளதா?
கே.பாண்டுரங்கன், அருப்புக்கோட்டை
‘‘ஜி.எஸ்.டி வரிவிகிதத்தில் அதாவது, 0.5, 12, 18, 28 ஆகிய வரிவிகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தற்போதைய காம்பன்சேஷன் செஸ்-ல் (Compensation Cess) கார் விலையில் சில மாற்றங்கள் உள்ளன. கடந்த 9/9/2017 அன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 1500 சிசி செயல்திறன் உள்ள நடுத்தர கார்களுக்கான ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த காம்பன்சேஷன் செஸ் 15 சதவிகிதமாக இருந்தது. தற்போது அது 17 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல, பெரிய கார்களுக்கானது (செயல்திறன் 1500 சிசிக்கு மேலே) 15 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.யூ.வி என்று சொல்லப்படும் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி கார்களுக்கு காம்பன்சேஷன் செஸ் 15 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, செஸ் விலை காரணமாக கார்களின் விலையில் சிறிய மாற்றம் இருக்கும்.’’
சமீபத்தில் ஜி.எஸ்.டி படிவங்கள் தாக்கல் செய்வதற்கான தேதிகளின் விதிகள் தளர்த்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறதே, இது குறித்து சற்று விளக்கமான பதில் தேவை.
ஆர்.ராஜேந்திர பிரசாத், மதுரை.
‘‘சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரிதாரர்களின் வசதிக்காக சில தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஜி.எஸ்.டி R1 ஜூலை மாதத்துக்கானது. மேலும், இது அக்டோபர் 10-ம் தேதிக்குமுன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜி.எஸ்.டி R2 ஜூலை மாதத்துக்கானது அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி R3 ஜூலை மாதத்துக்கானது நவம்பர் 10-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜி.எஸ்.டி R4 ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதத்துக்கானது அக்டோபர் 18-ம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். இது தவிர, ஜி.எஸ்.டி R3B ஆகஸ்டிலிருந்து டிசம்பர் மாதம் வரை வரித் தாக்கல் செய்யப்பட வேண்டும்.’’
நான் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்து வருகிறேன். என் விற்பனை முதல் ரூ.75,00,000-க்கு உட்பட்டது. இந்த சூழ்நிலையில், நான் தொகுப்பு முறையில் பதிவு செய்யத் தவறிவிட்டேன். மேலும், ஏற்கெனவே நான் வாட் வரி செலுத்துவதில் சாதாரண வரிதாரராக இருந்திருக் கிறேன். எனவே, தற்போது நான் தொகுப்பு முறைக்கு மாற வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சிவசுப்பிரமணியம், திருப்பூர்
‘‘ரூ.75,00,000-க்குக் கீழாக உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தொகுப்பு முறையில் காலண்டுக்கு ஒருமுறை வரி செலுத்த வசதியுள்ளது. நீங்கள் ஏற்கெனவே தொகுப்பு முறையில் பதிவு செய்யாததால், இப்போது அரசாங்கம் ஒரு வாய்ப்பளித்துள்ளது. எனவே, நீங்கள் தொகுப்பு முறையில் மாற்றிக்கொள்வதற்கான நேரம் செப்டம்பர் 30-ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தொகுப்பு முறையில் நீங்கள் வரியைச் செலுத்தி அதற்குரிய வரித் தாக்கலை செய்துகொள்ள முடியும்.’’
