நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?

சுமதி மோகன பிரபு

ம் பொருளாதாரம் வளர்ச்சியின்போக்கில் இருக்கிறதா, இல்லையா என்கிற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதிலைச் சொல்லி வருகின்றனர். வளர்கிறது என ஆளுங்கட்சித் தரப்பும், தேய்கிறது என எதிர்க்கட்சித் தரப்பும் சொல்கிறது. ஆனால், விருப்பு வெறுப்பு எதுவுமின்றி, உள்ளதை உள்ளபடிச் சொல்பவை இண்டிகேட்டர்கள். நம் பொருளாதார வளர்ச்சி பற்றி இந்த இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன என்பதைப் பார்ப்போம்.  

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?

மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domenstic Product)

ஒரு நாட்டின் நாடித் துடிப்பைக் கணிக்க உதவும் முதன்மையான புள்ளிவிவரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி விகிதமாகும். மொத்த பொருள் மற்றும் சேவையின் உற்பத்தி வளர்ச்சியைக் குறிக்கும் இந்தப் புள்ளி விவரம், ஒவ்வொரு காலாண்டிலும் நம் நாட்டில் மதிப்பிடப்படுகிறது. 

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?



ஒரு நாட்டின் ஆற்றல் வளத்தின் அடிப்படை யில், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திறன் (Potential GDP Growth) அமைகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2009-ல் இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், நமது பொருளாதார வளர்ச்சித் திறன் 9% என மதிப்பிடப்பட்டிருக்கிறது.  

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, ஆற்றல் திறனுக்குக் குறைவாக வளரும்பட்சத்தில், வேலை வாய்ப்புகள் குறைகின்றன. தனிமனித வளர்ச்சி மற்றும் வாங்கும் சக்தி குறைந்துபோகிறது. பண வீக்கம் வீழ்ச்சியடைவதுடன், அதன் தொடர்ச்சி யாக வட்டி விகிதங்கள் குறைகின்றன. அரசும் மத்திய வங்கியும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

பொருளாதாரம், ஆற்றல் திறனைவிட அதிகமாக வளர்ச்சியடையும்போது, பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்கிறது. நிறுவனங்களில் தொழிலாளர் தட்டுப்பாடு உருவாகிறது. ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகரிக்கின்றன. அரசும் மத்திய வங்கியும் பணவீக்கத்தைக் குறைக்கவும், அதீத பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

2016-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. 2017 ஏப்ரல்-ஜூன் காலாண்டுப் பொருளாதார வளர்ச்சியான 5.7%, கடந்த பல ஆண்டுகளில் காணாத அளவுக்குக் குறைவானதாகும். தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு முக்கியமான காரணம், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகம் எனப் பரவலாகக் கூறப்பட்டாலும், இந்த வீழ்ச்சி, கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிலேயே தொடங்கியதும், பின்னர் தொடர்கதையானதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிதியாண்டில், இரண்டாம் காலாண்டில் நமது ஜி.டி.பி வளர்ச்சி, கடந்த காலாண்டைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் எனப் பல்வேறு நிறுவனங்கள் கணித்துள்ளன. ஆனால், எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பது ஜி.டி.பி குறித்த புள்ளிவிவரங்கள் வந்தபின்பே தெரியும்.

தொழில் துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production)

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா என்று தொழில் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்தாலும், இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி, எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் நாம் கண்ட தொழிற்துறை வளர்ச்சி 1.2% மட்டுமே. ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு, பாலிசி வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 200 புள்ளிகள் (2%) குறைத்தாலும், வங்கிகளின் கடன் வளர்ச்சி பெருமளவு உயரவில்லை.   

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?

பெரு நிறுவனங்கள் புதிய முதலீடுகளில் அதிக ஆர்வம் செலுத்தாதது இதற்கொரு முக்கிய காரணமாகும். தற்போது பண்டிகை சீஸன் தொடங்கியபின்பும், வங்கிகளின் கடன் வழங்கும் அளவு 0.8% மட்டுமே உயர்ந்திருப்பது கவலை தரக்கூடிய விஷயமாகும்.

உள்நாட்டுத் தேவைகள் அதிகரிக்காததும், உலகப் பொருளாதாரம் பெருமளவுக்கு முன்னேற்றம் காணாததும் தொழில் வளர்ச்சி குறைந்ததற்கு முக்கியக் காரணங்களாகக்  கூறப்பட்டாலும், தொழில் அதிபர்கள் தரப்பில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அது, அரசுக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்கள் வந்து, ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதே.

உதாரணத்துக்கு, மாசுக் கட்டுப்பாடு தொடர்பான விஷயத்தில் அரசின் கொள்கை தெளிவாக இல்லாததால் வாகனத் துறையில் புதிய முதலீடுகள் வருவது கடினமாக உள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என்கிற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியானது, பல்வேறு வரி விகிதங்களுடன்  அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அதுவும் பலமுறை மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் மற்றொரு உதாரணம்.

நுகர்வோர் பணவீக்க விகிதம் (Consumer Price Inflation)

ஒருபக்கம் மத்திய அரசின் வருவாயைப் பெருமளவுக்கு உயர்த்தவும் மறுபக்கம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கச்சா எண்ணெய் (பன்னாட்டு சந்தையில்) விலை வீழ்ச்சி, பெரிதும் உதவி வந்துள்ளது. மேலும், பருவ மழையானது வட மாநிலங்களில் தொடர்ந்து சிறப்பாக அமைந்ததும், உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியது.

சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் பற்றிய பழைய மதிப்பீடுகளைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.6% அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம், காய்கறி விலை உயர்வுதான். என்றாலும், உள்நாட்டுச் சந்தையில் டீசல் விலை தொடர்ச்சி யாக உயர்த்தப்படும்பட்சத்தில் பணவீக்கம் மேலும் உயரும்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதினால் பல பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது மத்திய அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சவால்தான்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit)

கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்துக்கு நாம் வெளிநாடுகளையே சார்ந்திருப்பதால், நமது இறக்குமதித் தேவைகள் ஏற்றுமதியைவிட எப்போதும் அதிகமாகவே காணப்படுகின்றன. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பணவரவும் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதித் தொழிலும் நமக்கு இதுவரை பெருமளவு கைகொடுத்து வந்தன. மேலும், கச்சா எண்ணெய் விலைச் சரிவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவின.

ஆனால், சமீப காலமாக இந்திய ஏற்றுமதித் துறையில் காணப்படும் தேக்கமும், கச்சா எண்ணெய் விலை ஏற்றமும், அதிகப்படியான தங்க இறக்குமதியும் நமது பன்னாட்டு வணிகச் சமநிலையைப் பாதித்துள்ளன. நடப்பாண்டில் வணிகப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-1.2% மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜூனுடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில், வணிகப் பற்றாக்குறை 2.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.   

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?

பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த பெருமளவு உதவியது. நடப்பாண்டின் நிதிப் பற்றாக்குறையை ஜி.டி.பி-யின் 3-3.2% அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்றும், அவ்வாறு கட்டுப்படுத்த முடியும்பட்சத்தில் இந்தியாவின் தர நிர்ணயம் சர்வதேச தர நிறுவனங்களால் உயர்த்தப்படும் என்றும் தொழில் துறை வட்டாரங்கள் பெருமளவு நம்பின.

ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அந்த நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. முதல் காலாண்டு பட்ஜெட் பற்றாக்குறை, மொத்த ஆண்டுக்கான மதிப்பீட்டில் 80% அளவினை எட்டியிருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட் 30,659 கோடி ரூபாயாக (2016-17-ல் ரூ.65,876 கோடி) குறைந்திருப்பதும், செப்டம்பர் காலாண்டின் முன்கூட்டிய நேரடி வரி வருவாய்  எதிர்பார்த்த அளவு உயராததும் கவலைதரும் விஷயங்களாக இருக்கின்றன.   

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா? இண்டிகேட்டர்கள் சொல்வதென்ன..?

தேக்கநிலையில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு, சுமார் 40,000 கோடி ரூபாய் வரை தொழில் ஊக்குவிப்பாகச் செலவு செய்ய ஆலோசித்து வந்தாலும், இதனால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பு (Forex Reserves)

ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணிக் கையிருப்பு, முதன் முறையாக 400 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியிருப்பது, இந்தியப் பொருளாதாரத்தின்மீது அயல்நாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு நம்பிக்கை வைத்திருப் பதைக்் காட்டுகிறது. தேவைக்கு அதிகப்படியான அந்நியச் செலாவணிக் கையிருப்பு, பொருளாதாரத்துக்குச் செலவு வைக்கும் ஒரு விவகாரமே என்றாலும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிகுந்துவரும் நிலையில், ரூபாயின் ஸ்திரத் தன்மைக்கு இது மிகவும் உதவும்.

மேற்குறிப்பிட்ட இண்டிகேட்டர்கள் சொல்லும் பொருளாதார மாற்றங்களை  மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. உரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் துரிதகதியில் மேற்கொள்ளும் பட்சத்தில், தற்போதைய தேக்க நிலை விரைவில் மாறும்.