நடப்பு
Published:Updated:

எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதால் அதிக பலன் கிடைக்குமா?

எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதால் அதிக பலன் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதால் அதிக பலன் கிடைக்குமா?

கேள்வி பதில்

எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதால் அதிக பலன் கிடைக்குமா?

பத்திரிகை விளம்பரம் ஒன்றில், ‘இன்ஷூரன்ஸ் என்பது நமக்கும், நம் குடும்பத்துக்கும்  பலனளிப்பதாக இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டு, எண்டோவ்மென்ட் பாலிசியை எடுக்கச் சொல்லியிருந்தது. இது சரியா, விளம்பரத்தில் சொல்லியுள்ளபடி எண்டோவ்மென்ட் பாலிசியை எடுப்பது உண்மையில் பலன் அளிக்குமா?   

எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதால் அதிக பலன் கிடைக்குமா?



கண்ணன் கே, திருப்பாச்சி


எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்


“இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது வருமானம் ஈட்டும் ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதே மிகவும் நல்லது. எண்டோவ்மென்ட் பாலிசியைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட தொகை இன்ஷூரன்ஸ் காப்பீட்டுக்காகவும், மீதமுள்ள தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தைக் காப்பீட்டாளருக்கு முதிர்வுக் காலத்தில் வரும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த வகையான பாலிசிகளில் வரும் முதலீட்டுக்கான வருமானம் 4-6% வரையே இருக்கும். மேலும், இந்த பாலிசிகளின் இன்ஷூரன்ஸ் கவரேஜ், பிரீமியம் தொகையில் 7 முதல் 10 மடங்கு வரையே இருக்கும். ஆகவே, இத்தகைய பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.”

நான் மத்திய அரசின் கோல்டு பாண்டில் முதலீடு செய்துள்ளேன். இதில் முதலீடு செய்த தொகைக்கு ஆறு மாதத்துக்கு ஒருமுறை 2.5% வட்டி தருகிறார்கள். இதற்கு வரி செலுத்த வேண்டுமா, செலுத்த வேண்டுமெனில் எப்படிச் செலுத்த  வேண்டும்? 

எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதால் அதிக பலன் கிடைக்குமா?

கலாவதி, திருவாரூர்.

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்


“தங்க பாண்ட் பத்திரம் மூலமாகக் கிடைக்கும் வருமானம், இதர வருமானமாகவே கருதப்படுகிறது. இந்தத் தொகை உங்களின் வருமானத்துடன் சேர்க்கப்படும். இந்த மொத்த வருமானத்துக்கு உங்களின் அடிப்படை வருமான வரம்புக்கேற்ப 0%, 5%, 20% மற்றும் 30% வரி கட்ட வேண்டி வரும்.”  

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் பங்கு விலை தற்போது ரூ.20-க்கு மேல் வர்த்தகமாகிறது. வங்கிகளின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி அறிவித்த காரணத்தால் இந்த நிறுவனப் பங்கின் விலை ஏறுவதற்கு வாய்ப்புண்டா? இந்தப் பங்கினை இப்போது வாங்கினால் லாபம் கிடைக்குமா? 

சுரேஷ் குமார், கொச்சின்

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர் 


“பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பி) பங்கின் விலை, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அண்மைக் காலம் வரைக்கும் ரூ.20 முதல் ரூ.25-க்குள் வர்த்தகமாகி வந்தது. அண்மையில், வங்கிகளின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி அறிவித்ததையடுத்து, அதன் விலை ரூ.22.50-லிருந்து ரூ.26-க்கு வேகமாக ஏறியது. இதன்பிறகு இறங்க ஆரம்பித்திருக்கிறது.

டெக்னிக்கலாகப் பார்க்கும்போது, பங்கின் விலை ரூ.27-28 என்கிற நிலையிருந்து வலிமையாக மேலேறத் தொடங்கினால் ரூ.32 வரை உயர வாய்ப்புள்ளது. 

அதேநேரத்தில், அதன் நிகர லாபம் தொடர்ந்து இழப்பில் இருக்கிறது. வாராக் கடனும் அதிகமாக இருக்கிறது. வங்கியின் ஃபண்டமென்டல் வலிமையாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. 

சந்தையில் வங்கித் துறையைச் சேர்ந்த பல நல்ல பங்குகள் இருக்கின்றன. அவற்றை முதலீட்டுக்குக் கவனிப்பது லாபகரமாக இருக்கும்.”

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.