
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஐ.பி.ஓ... வாங்கினால் லாபமா?
அரசுக்குச் சொந்தமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஐ.பி.ஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வரும் வாரத்தில் இந்த ஐ.பி.ஓ வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுக் காப்பீடு நிறுவனமான இது, 14.56 சதவிகிதப் பங்குகளை விற்பனைக்கு வெளியிட இருக்கிறது. இதில், அரசு வசமுள்ள 96 மில்லியன் பங்குகளும் நிறுவனத்தின் வசமுள்ள 24 மில்லியன் பங்குகளும் அடங்கும். இந்த வெளியீட்டின் மூலம் ரூ. 7,000 கோடி வரை அரசு திரட்டவிருப்பதாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த வெளியீட்டின் மதிப்பு ரூ.10,000 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் பங்குகளை வாங்கலாமா, வாங்கினால் லாபகரமாக இருக்குமா, எவ்வளவு காலத்துக்கு இந்தப் பங்குகளை வைத்திருக்கலாம் போன்றவைக் குறித்துப் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
“சந்தையில் ஐ.பி.ஓ-க்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வருகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஐ.பி.ஓ-க்கள் வெளியிடப் படுவதும், பட்டியலிடப்படுவதும் நடக்கின்றன. சந்தை இப்போது உச்சத்தில் இருப்பதால், இந்த ஐ.பி.ஓ-க்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஐ.பி.ஓ வெளியிட இருக்கிறது. இந்த வெளியீட்டின் மதிப்பு ரூ.10,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன், ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ரூ.11,000 கோடி மதிப்பிலான வெளியீட்டைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
நியூ இந்தியா அஸ்யூரன்ஸில், அரசு தன் வசம் வைத்துள்ள 96 மில்லியன் பங்கு களையும், நிறுவனம் தன் வசமுள்ள 24 மில்லியன் பங்குகளையும் விற்பனை செய்யவிருக்கின்றன.
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இதனுடைய செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், புதிய வகை பிசினஸை விரிவுபடுத்தவும், தற்போதிருக்கும் பிசினஸை வலுப்படுத்தவும் இந்த நிதியைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இன்ஷூரன்ஸ் துறையில் 30 வருடங்களுக்கும் மேல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிற நிறுவனம் இது. இந்த நிறுவனம் செயல்படும் பிசினஸ் பிரிவுகளில் லாபகரமானதாகவும், முன்னணியிலும் இருக்கிறது. பெரும்பாலான அரசுக் காப்பீடுத் திட்டங்கள் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மூலமாகவே செயல்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய பில்டிங் இன்ஷூரன்ஸ் உள்பட பெரும்பாலான இன்ஷூரன்ஸ் திட்டங்களையும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மூலம் செயல்படுத்தி வருகின்றன.

ஆனால், முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ-வில் பெரும்பாலும் தவறான சென்டிமென்டில் தான் செயல்படுகிறார்கள். ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்குவதும், சந்தையில் பட்டியலானபின் பங்கு விலை உயர்ந்ததும் விற்று வெளியேறுவதுமே பெரும்பாலானோர் செய்யும் செயல்பாடாக இருக்கிறது. குறுகிய காலத்திலேயே எல்லோரும் லாபம் பார்க்க விரும்புகிறார்கள். இப்படிப் பலரும் விற்கத் தொடங்கியவுடன் பங்கு விலை குறைய ஆரம்பிக்கிறது. இதனால் அந்தப் பங்கின் விலை மீண்டும் ஏற்றமடைய காலம் பிடிக்கிறது. இதனால்தான் ஐ.பி.ஓ பங்குகள் தங்களுடைய கவர்ச்சியை இழந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாகிறது. ஐ.பி.ஓ-வைப் பொறுத்தவரை, ஃபண்டமென்டல் காரணிகளைப் புரிந்து கொண்டு நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். இது வருத்தம் தரக்கூடிய போக்குதான்.
மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் சிறப்பாகவே இருக்கிறது. எவ்வளவோ புதிய புதிய நிறுவனங்கள் வந்தாலும், வங்கிகள் இன்ஷூரன்ஸ் பிரிவுக்குள் நுழைந்தாலும் தொடர்ந்து தனக்கான இடத்தை இது தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
எனவே, நீண்ட கால அடிப்படையில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் பங்கை வாங்கலாம். மூன்று முதல் ஐந்தாண்டு கால அடிப்படையில் இந்தப் பங்கு நன்றாகவே செயல்படும் என்று நம்பலாம்” என்றார்.
ஐ.பி.ஓ-வில் இந்தப் பங்குகளை வாங்கி, நீண்ட காலத்துக்கு வைத்திருந்து லாபம் பார்க்க நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமே!
-ஜெ.சரவணன்