நடப்பு
Published:Updated:

வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா பாரத் மாலா..?

வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா பாரத் மாலா..?
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா பாரத் மாலா..?

வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா பாரத் மாலா..?

சுணக்கத்தில் இருக்கும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. ஒன்று, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க மத்திய அரசாங்கம் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாயைத் தந்திருப்பது. இரண்டாவது, இந்தியா முழுக்கவுள்ள 550 மாவட்டங்களை இணைக்கும் வகையிலான புதிய நெடுஞ்சாலை அமைக்கும் அறிவிப்பு. இந்த இரண்டில் முதலாவதைவிட இரண்டாவது மிகச் சிறப்பானது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.   

வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா பாரத் மாலா..?

வாஜ்பாய் தொடங்கிய பணி

நம் நாடு சுதந்திரமடைந்து பல பத்தாண்டுகள் சென்றபின்பும், தரமான நெடுஞ்சாலை அமைக்கும் பணியானது முக்கியத்துவம் பெறாமலே இருந்தது. வாஜ்பாயின் தலைமையில் அமைந்த பாரதிய ஜனதா அரசாங்கம்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியது. 2001-ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், அடுத்த சில ஆண்டுகளிலேயே வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்ததன் விளைவு, இந்தியப் பொருளாதார வளர்ச்சி நான்கு சதவிகிதத்திலிருந்து விறுவிறுவென வேகமாக வளர ஆரம்பித்தது. 2004-ல் காங்கிரஸ் அரசின் தலைமையில் பொருளாதார வளர்ச்சி வேகமாக, அதாவது எட்டு சதவிகிதத்துக்கு மேல் இருந்ததற்கு ஒரு காரணம், இந்தச் சாலை வசதியே என்கிறார்கள் நிபுணர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில்...

2004-ல் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மத்தியில் இருந்த போது பல புதிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், வாஜ்பாய் செய்தது போன்ற திட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சிறிய அளவிலான சாலைத் திட்டங்களுக்கே காங்கிரஸ் அரசாங்கம் முக்கியத்துவம் தந்தது.

மோடியின் பாரத் மாலா

மீண்டும் பாரதிய ஜனதாவின் ஆட்சி, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மோடியின் தலைமையில் அமைந்தபின்பும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கான முன்னுரிமை, பெரிய அளவில் தரப்படவில்லை. இதனால் பொருளாதார வளர்ச்சியானது பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியாமலே இருந்தது. கடந்த சில காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு நமது பொருளாதார வளர்ச்சி 5.7% என்கிற அளவைத் தொட்ட நிலையில், வளர்ச்சியைத் துரிதப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசாங்கம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான், இப்போது இந்த பாரத் மாலா என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.    

வளர்ச்சிக்குக் கைகொடுக்குமா பாரத் மாலா..?

பாரத் மாலா திட்டத்தின்படி, 83,677 கி.மீட்டர் தூரத்துக்குப் புதிய நெடுஞ்சாலைகளும் உள் சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் நிலையில், 5.35 லட்சம் கோடி ரூபாய் செலவில் 34,800 கி.மீட்டர் தூரத்துக்குச் சாலை வசதி அமைக்கப்படவுள்ளது. இதுவரை போடப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் நம் நாட்டிலுள்ள 300 மாவட்டங்களை மட்டுமே இணைக்கிற வகையில் உள்ள நிலையில்,  இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத் மாலா திட்டத்தின் மூலம், 550 மாவட்டங்களை இணைக்க முடியும் என்பது சிறப்பான விஷயம்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில், ஏறக்குறைய ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் துறை கணித்திருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கும் பட்சத்தில், நம் பொருளாதாரம் சுமார் மூன்று சதவிகிதம் வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போதிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் வெறும் 40 சதவிகித சரக்குப் போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. பாரத் மாலா திட்டம் செயல்பட ஆரம்பித்தால், 70 முதல் 80 சதவிகிதமான சரக்குப் போக்குவரத்து நெடுஞ் சாலைகள் மூலம் நடக்கும் என்கிறார்கள். 

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

இந்தத் திட்டமானது நம் பொருளாதார வளர்ச்சியை பெரிய அளவில் கொண்டு செல்லும் என்று சொல்லப்பட்டாலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

நிதித் தட்டுப்பாடு

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் தேவை. இதில் பெரும்பாலான பணத்தை மத்திய அரசாங்கம்தான் தரவேண்டும். தற்போதுள்ள நிலையில், அரசாங்கமே தனது தொகுப்பிலிருந்து இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டித் தரமுடியுமா என்பது கேள்விக்குறியே. நீண்ட கால பாண்டு களை வெளியிட்டு, கணிசமான அளவு பணத்தை அரசினால் திரட்ட முடியுமென்றாலும், தனியார் - அரசுக் கூட்டு முயற்சியின் மூலமே மீதமுள்ள பணத்தைத் திரட்ட முடியும். ஆனால், தனியார் - அரசுக் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தனியார் நிறுவனங்கள் உற்சாகமாக முன்வருமா என்பது கேள்விக்குறியே.
இதில் மகிழ்ச்சியான விஷயம், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் சாலை அமைப்புத் திட்டங்களில் பணத்தைப் போட தயாராக இருக்கின்றன என்பதே. உதாரணமாக, நம் நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களில், 1 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6500 கோடி) முதலீடு செய்ய அபுதாபி முதலீட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.

செயல்படும் திறன்

சாலை அமைப்பதற்கு மிகப் பெரிய தொழில் நுட்பம் எதுவும் தேவையில்லை. அடிப்படையில் இருக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்டே சாலைகளை அமைத்துவிடலாம் என்றாலும், இன்னும் வேகமாகச் சாலைகளை அமைக்கத் தேவையான திறமையை நாம் பெற வேண்டும். இப்போதைக்கு ஒரு நாளைக்கு சுமார் 23   கி.மீட்டர் தூரத்துக்குச் சாலை அமைக்க நம்மால் முடிகிறது. ஆனால், பாரத் மாலா திட்டத்தைக் குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டுமெனில், ஒரு நாளைக்குச் சுமார் 40 கி.மீட்டர் தூரத்துக்கு நாம் சாலைகளை அமைத்தாக வேண்டும். இதற்கு நாம் மிகவும் மெனக்கெட வேண்டுமென்றாலும்,  இது நம்மால் நிறைவேற்ற முடியாத விஷயமல்ல. 

சாலை அமைக்கும் பணியில் மிகப் பெரிய தடையாக இருப்பது, சாலை அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதுதான். நம் நாடு முழுக்க ரியல் எஸ்டேட் விலை அதிகமாக இருப்பதால், நிலமானது தோதான விலையில் கிடைப்பதில்லை. தவிர, மாநில அரசிடமிருந்து பெறவேண்டிய அனுமதிகளும் காலம் தாழ்த்தியே கிடைக்கின்றன. எனவே, மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின்  பரிபூரண ஆதரவு நிச்சயம் தேவை.

மீண்டும் வளர்ச்சி

வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டத்தைப்போல, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் திட்டம் நம் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று நம்புவோமாக. 
          
ஏ.ஆர்.குமார்