நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

   டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம், தனது முதலீட்டாளர் களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 49 கோடி ரூபாய் நஷ்டம் தந்த இந்த நிறுவனம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1,018 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை 15% அதிகரித்து, 6.45 மில்லியன் டன்னாக இருந்தது. இதில் 48 சதவிகித விற்பனை இந்தியாவிலேயே நடந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் கடன், கடந்த காலாண்டில் ரூ.2,447 கோடி அதிகரித்து ரூ.90,259 கோடியாக உயர்ந்திருக்கிறது. உற்பத்தி அதிகரித்ததாலும், நிறுவனத்துக்கு வரவேண்டிய பணம் சரியாக வந்ததாலும் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருக்கிறது.

   ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் லாபம் கடந்த காலாண்டில் 15% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல்  காலாண்டில் ரூ.1,827 கோடியைச் சம்பாதித்த இந்த வங்கி,  இரண்டாம் காலாண்டில் ரூ.2,101 கோடியை லாபமாக ஈட்டியிருக்கிறது. இந்த நிறுவனம் அளிக்கும் தனிநபர் கடன் 23% அதிகரித்திருப்பது, லாபம் அதிகரிக்க முக்கியமான காரணமாகும். கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை இந்த நிறுவனம் அளித்திருக்கும் மொத்தக் கடன் ரூ.3.68 லட்சம் கோடி ஆகும்.  

எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

   மாரிக்கோ

எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான மாரிக்கோவின், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 181 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் ஆறு சதவிகிதம் உயர்ந்து ரூ.1,536-ஆக இருக்கிறது. விற்பனை அளவு அதிகரித்ததே லாபம் அதிகரித்ததற்கு முக்கியமான காரணம். இந்த நிறுவனம், இந்தியாவில் மட்டும் ரூ.1,200 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் செய்திருக்கிறது. இது, கடந்த ஆண்டைவிட 12% அதிகமாகும்.

   எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ்

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் லாபம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஆறு கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.495 கோடி லாபமாகச் சம்பாதித்தது. கடந்த காலாண்டில் இந்த நிறுவனம், ரூ.489 கோடி லாபமாகச் சம்பாதித்திருக்கிறது.

இந்த நிறுவனம், சொத்தை அடமானமாக வைத்துத் தந்த கடன், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ரூ.1,51,417 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் இருந்ததைவிட 16% அதிகமாகும். இந்த நிறுவனத்தின் நிகர என்.பி.ஏ ரூ.1,211 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நிகர என்.பி.ஏ. ரூ.750 கோடியாக இருந்தது.

   லூபின்

மருந்து உற்பத்தி நிறுவனமான லூபினின் நிகர லாபம் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 31% குறைந்தது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.455 கோடி லாபம் சம்பாதித்த இந்த நிறுவனம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.662 கோடி லாபம் சம்பாதித்தது. இந்த நிறுவனத்தின் வருமானம், கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.4,290 கோடியாக இருந்தது, தற்போது ரூ.3,951 கோடியாகக் குறைந்திருக்கிறது. ‘அமெரிக்காவில் பொருளாதார சுணக்கம் நிலவியபோதிலும், விற்பனை அதிகரிக்க இன்னும் நிறையவே வாய்ப்பிருப்பதாக’ இந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

   ஐ.டி.எஃப்.சி


உள்கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனமான ஐ.டி.எஃப்-சியின் நிகர லாபம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 35.83% குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில இந்த நிறுவனம் ரூ.281 கோடி லாபம் சம்பாதித்தது. ஆனால், கடந்த காலாண்டின் இந்த நிறுவனம் ரூ.180 கோடி மட்டுமே லாபம் சம்பாதித்திருக்கிறது. 

இந்த நிறுவனத்தின் மொத்த வருமானமும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.2,704 கோடி வருமானமாக ஈட்டியது. ஆனால், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இதன் வருமானம் ரூ.2,657 கோடியாகக் குறைந்துள்ளது.

   வொர்கார்டிட்


மருந்து தயாரிப்பு நிறுவனமான வொர்கார்டிட் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.3.33 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.17 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த நிறுவனம், ரூ.1,083 கோடி வருமானம் ஈட்டியது. ஆனால், கடந்த காலாண்டில் இந்த நிறுவனம் ரூ.1,076 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

   சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர நஷ்டம் ரூ.750 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.642 கோடியாக இருந்தது. இந்த வங்கியின் வட்டி வருமானம் குறைந்ததுடன், பிற வருமானங்களும் குறைந்துள்ளன. இந்த வங்கியின் டெபாசிட் சுமார் 7% உயர்ந்து தற்போது ரூ.2.97,426 கோடியாக இருக்கிறது. ஆனால், இந்த வங்கி தந்த கடன் அளவு ரூ.4,554 கோடி குறைந்து ரூ.1,83,190 கோடியாக இருக்கிறது. இந்த வங்கியின் வாராக் கடன் கடந்த ஆண்டு செப்டம்பரில், இதன் மொத்தக் கடனில் 13.70 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு செப்டம்பரில் இது 17.27 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

- ஏ.ஆர்.குமார்