நடப்பு
Published:Updated:

நீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு?

நீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு?
பிரீமியம் ஸ்டோரி
News
நீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு?

கேள்வி பதில்

நீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு?

வங்கியொன்றில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடச் சென்றேன். இரண்டாண்டு டெபாசிட்டுக்கு 6.60%, ஐந்தாண்டு டெபாசிட்டுக்கு 6.25% வட்டி தருவதாகச் சொன்னார்கள். நீண்ட கால முதலீட்டுக்கு குறைவான வட்டி ஏன்?

நீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு?



முத்துகுமார், கடலூர்

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

‘‘வங்கிகளுக்குக் குறுகிய காலத்துக்குத்தான் அதிக தொகை தேவைப்படுகிறது. அந்தவகையில், அவை குறுகிய கால டெபாசிட்டுக்கு அதிக வட்டி வழங்க முன்வருகின்றன. இந்தியாவில் நீண்ட காலத்தில் பணவீக்கம் குறையும் என்பதால், இப்போது இருப்பதைவிட வட்டி குறையவே வாய்ப்பு அதிகம். அந்தவகையில் ஐந்தாண்டு டெபாசிட்டுக்கு வங்கிகள், அதிக வட்டி தருவதாக இருந்தால், அவை நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
 
உங்கள் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகள் என்கிறபட்சத்தில், நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவதற்குப் பதிலாக, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதன்மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 9-11% வருமானம் கிடைக்கக்கூடும். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் 12-14% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.”

ஐ.சி.ஐ.சி.ஐ ஹெல்த்கேர் ப்ளஸ் பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவு என என் நண்பன் சொல்கிறான். உண்மையா?

 கிருஷ்ணகுமார், மதுரை 

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

‘‘ஐ.சி.ஐ.சி.ஐ ஹெல்த் கேர் ப்ளஸ் என்பது ஒரு டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஆகும். இந்த பாலிசியைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட தொகை வரை ஓர் அடிப்படை (பேசிக்) ஹெல்த் பாலிசி எடுத்திருப்பது அவசியம். அதற்குமேல் செலவாகும் தொகையை இந்த டாப் அப் பாலிசி மூலம் பெற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஒரு பேசிக் ஹெல்த் இன்ஷூரன்ஸில் மூன்று லட்சம் ரூபாய் கவரேஜ் இருந்து, டாப் அப் பாலிசியில் ஒருவர் ரூபாய் ஐந்து லட்சம் எடுத்திருந்தால், முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை பேசிக் (Basic) பாலிசியில் க்ளெய்ம் செய்துகொள்ளலாம். அதற்குமேல் வரும் தொகையை டாப் அப் பாலிசி மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த வகையான டாப் அப் பாலிசியின் பிரீமியம், பேசிக் பாலிசியின் பிரீமியத்தைவிட குறைவாக இருக்கும். அந்த வகையில் உங்கள் நண்பர் சொன்னது சரிதான்.’’

என் கையில் ரூ.1 லட்சம் இருக்கிறது. நான் ரிஸ்க் எடுக்கத் தயார். ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு மூன்றாண்டுகள் காத்திருக்க என்னால் முடியும். எனக்குச் சில ஸ்மால் கேப்  பங்குகளைப் பரிந்துரை செய்ய முடியுமா?

நீண்டகால எஃப்.டி-க்கு வட்டி ஏன் குறைவு?



தினேஷ், ஃபேஸ்புக் மூலம்

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“தற்போது வெளியாகியிருக்கும் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் பார்க்கும்போது,  டி.ஹெச்.எஃப்.எல், ஜி.எம் புருவரீஸ் (GM Breweries), எஸ்.எல்.ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ், டாடா மெட்டாலிக்ஸ் (Tata Metaliks), எஸ்.இ இன்வெஸ்ட்மென்ட்ஸ் போன்ற பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம். இதில் முதலீடு செய்தபின், பங்கு விலை உயர்கிறதா அல்லது குறைகிறதா என்பதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!’’

படிக்காத விவசாயி சொன்ன பால் கணக்கு!

நா
ன் பள்ளி மாணவனாக இருந்தபோது ஒரு பால்காரரிடம் கற்ற பாடம் இது. மாதந்தோறும் 25 ரூபாய் சீட்டு (40 மாதம்) கட்டி, அதை 400 ரூபாய்க்கு எடுத்தார். முட்டாள்தனமாக 600 ரூபாய் நஷ்டம் அடைகிறீர்களே என அந்தப் பால்காரரை என்று நான் திட்டினேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா..? “ஐயா, நான் ஒரு கணக்குப் போட்டேன், சரியா என்று சொல்லுங்கள்... சீட்டு மூலம் எடுத்த இந்த 400 ரூபாயை  வைத்து ஒரு மாடு வாங்கினால் (அன்றைய விலையில்) தினமும் மூன்று படி பால் கறக்கும். அதை விற்றால் தினம் ஏழு ரூபாய் (படி என்பது இரண்டு லிட்டர்) வீதம் மாதமொன்றுக்கு 200 ரூபாய் கிடைக்கும். அதில் புண்ணாக்கு செலவு போக எப்படியும் மாதம் ரூ.150 மிச்சம் ஆகும். ஆக, நான்கு மாதத்தில் நான் கட்டவேண்டிய பணம் வந்துவிடும். அதன் பிறகு கிடைப்பதெல்லாம் லாபம்தானே” என்றார். வட்டிக்கு வாங்குவது அதனால் கிடைக்கும் பலனைப் பொறுத்தது. அதுபோலவே, வட்டிக்குக் கொடுப்பதும் அதில் இருக்கும் பிரச்னைகளைப் பொறுத்தது. இன்றைக்கும் சரியான முதலீட்டுக்குச் சரியான பிணையுடன் வருடம் 20% வட்டிக்கு வாங்கித் தொழில் செய்வோர் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

நாணயம் விகடன் கடந்த இதழில் ‘கந்துவட்டி... சிக்காமல் தப்பிக்க வழிகள்' கட்டுரையைப் படித்த வாசகர்      எஸ்.பாலா அனுப்பிய கமென்ட் இது.

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.